குருணாகல் – யக்கஹபிட்டிய எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தாக்குதல் நடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவ அதிகாரியை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அனைத்துப் பணிகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.
அதேநேரம், 5 பேர் கொண்ட விசாரணை நீதிமன்றத்தின் பரிந்துரைகள் கிடைக்கும் வரை அவர் கடமையில் இருக்கமாட்டார் என இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக இலங்கை இராணுவப் படைப் பிரிவு இராணுவப் பொலிஸாரின் சமாந்தரமான இராணுவ விசாரணையும் வாக்குமூலங்களைப் பதிவுசெய்து வருகின்றது.
மேலும், பாதுகாப்பு படைத் தலைமையகம் திங்கட்கிழமை (4) ஐந்து பேர் கொண்ட விசாரணை நீதிமன்றத்தை நியமித்தது.
இந்த மூத்த அதிகாரியின் நடத்தை தொடர்பான பிரச்சினையில் ஆழமாகச் சென்று அதன் பரிந்துரைகளை வழங்குவதற்கு ஒரு படைப்பிரிவுத் தளபதி தலைமையில் இந்த விசாரணை இடம்பெறவுள்ளது.
இதேவேளை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ‘தான் இணைஞர் மீது காலால் உதைத்து தாக்கிய போதும் அது அந்த நபர் மீது படவில்லை என தாக்குதல் நடத்திய குருணாகல் நகர பகுதியின் இராணுவ லெப்டினன் கேர்ணல் தர கட்டளை அதிகாரியான விராஜ் குமாரசிங்க தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவம் மற்றும் சமூக வளைத்தளங்களில் பரவி வரும் வீடியோ காணொளி தொடர்பில் ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
‘தான் காலால் உதைத்தது உண்மையே என குறிப்பிட்ட அவர், எனினும் தனது கால் அவரது உடம்பில் படவில்லை எனவும் குறித்த நபரிடமே அது தொடர்பில் கேட்டுப்பார்க்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் குறித்த இராணுவ அதிகாரி தொடர்பில் நிறுவன மட்டத்திலான உடன் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக இராணுவ ஊடக பேச்சாளர் பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.