ஸ்திரமான அரசாங்கம் விரைவில் அமைக்கப்படாவிட்டால் நாடு செயலிழக்க நேரிடும் என மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சர்வதேச ஊடகமான பிபிசியின் ‘நியூஸ்நைட்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசும்போதே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது, மூன்று டீசல் கப்பல்களுக்கும் ஒன்று அல்லது இரண்டு பெட்ரோல் கப்பல்களுக்கும் எங்களால் நிதியளிக்க முடிந்தது.
ஆனால் அதையும் தாண்டி நாட்டிற்கு அத்தியாவசிய பெட்ரோலியத்தை இறக்குமதி செய்ய போதுமான அந்நிய செலாவணியை வழங்க முடியுமா என்பதில் நிச்சயமற்ற நிலை உள்ளது.
இல்லை என்றால் நாடு முழுவதும் மூடப்படும். அதனால் தான் எனக்கு பிரதமர், ஜனாதிபதி, முடிவெடுக்கக்கூடிய அமைச்சரவை வேண்டும்.
இல்லை என்றால் அனைத்து மக்களும் பாதிக்கப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடன் மறுசீரமைப்பு தொடர்பில் கடன் வழங்குனர்களுடனான பேச்சுவார்த்தையில் இலங்கை நல்ல முன்னேற்றத்தை அடைய முடியும் என நம்புவதாக மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.
ஆனால் அந்த செயல்முறைக்கு எடுக்கும் காலம் எவ்வளவு விரைவில் ஒரு நிலையான நிர்வாகம் உருவாகும் என்பதைப் பொறுத்தது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், ஒரு நிலையான அரசாங்கம் நிறுவப்பட்டதும், ‘மூன்று, நான்கு அல்லது ஐந்து மாதங்களுக்குள்’ இலங்கை நெருக்கடியிலிருந்து மீளும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.