6.26 மில்லியன் இலங்கையர்கள் தங்களின் அடுத்த உணவு குறித்து நிச்சயமற்ற நிலையில் இருப்பதாக ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது.
அந்தத் திட்டத்தின் மூலம் உலகின் சமீபத்திய உணவுப் பாதுகாப்பின்மை மதிப்பீட்டில், இலங்கையில் உள்ள ஒவ்வொரு 10 குடும்பங்களில் 3 குடும்பங்கள் இந்த உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொள்வதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
வரலாறு காணாத உணவு விலை பணவீக்கம், எரிபொருட்களின் விலைகள் மற்றும் பரவலான பொருட்களின் தட்டுப்பாடு ஆகியவற்றால் இந்த நிலைமை மோசமடைவதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
61 சதவீத குடும்பங்கள், அதிக விலையில் ஆரோக்கியமான உணவுகள் கட்டுப்படியாகாது என்பதால், தாங்கள் உண்ணும் அளவைக் குறைப்பதன் மூலமும், குறைந்த சத்துள்ள உணவுகளை உட்கொள்வதன் மூலமும் செலவுகளைக் குறைக்க திட்டமிட்டுச் செயல்படுவதாக அது கண்டறிந்துள்ளது.
ஊட்டச்சத்து குறைபாடு கர்ப்பிணிப் பெண்களுக்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்துகிறது, அவர்களின் சொந்த ஆரோக்கியத்தையும் அவர்களின் குழந்தைகளின் ஆரோக்கியத்தையும் ஆபத்தில் ஆழ்த்துகிறது என்று திட்டம் எச்சரிக்கிறது.
இதன்படி, உணவு நெருக்கடி மற்றும் ஊட்டச் சத்து குறைபாட்டினால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்த்து மக்களுக்காக விசேட வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாக உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது.
தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு, கர்ப்பிணிப் பெண்கள் சத்தான உணவுகளை உண்பதைத் தவிர்ப்பதால், அவர்களின் உடல்நலம் மற்றும் அவர்களின் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கும் ஆபத்து இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத் திட்டம் தனது அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.