நேற்றைய முன்தினம் 2ஆம் திகதி துல்ஹஜ் பிறை 3, சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத் நகரில் அமைந்திருக்கின்ற பிரபல பள்ளிவாசலான அல் ராஜ்ஹி பள்ளிவாசலில் குர்ஆன் தினம் என்ற ஒரு மகத்தான நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்ச்சியில் முக்கியமான அறிஞர்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அத்துடன் இந்நிகழ்ச்சி அனைவருக்கும் உற்சாகம் தருகின்ற, மகிழ்ச்சியை ஏற்படுத்துகின்ற ஒரு செய்தியாக அமைந்திருந்தது.
1200 ஆண் மாணவர்கள் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சியில், 150 பேர் அல்குர்ஆனை முழுமையாக மனனம் செய்தவர்கள், ஏனைய மாணவர்கள் பத்து ஜூஸ்ஊ, இருபது பத்து ஜூஸ்ஊ என்ற வித்தியாசமான அமைப்பில் அல்குர்ஆனை பகுதிகளின் அடிப்படையில் மனனம் செய்தவர்கள். இவர்களில் குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால் குர்ஆனை மனனம் செய்த ஒரு மாணவர் தன்னுடைய அல்குர்ஆன் மனனத்தை 5 மணித்தியாலங்கள், சில நிமிடங்களில் முழுமையாக ஓதி ஒப்புவித்தமையாகும்.
அதேவேளை இந்த பள்ளிவாயலில் இருக்கின்ற பெண்களுக்கான பகுதியிலே 350க்கும் மேற்பட்ட மாணவிகளும், பெண்களும் இதேபோன்று இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டதோடு அவர்களும் பல்வேறு பகுதிகளாக அல்குர்ஆனை மனனம் செய்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
குர்ஆன் என்பது முஸ்லிம்களுடைய வாழ்க்கையில் இரண்டறக் கலந்துவிட்ட ஒரு அம்சமாகும். அந்த அல்குர்ஆனை மனனம் இடுவதும், அதனை படிப்பதும், அதன் கருத்துக்களை ஏனையோருக்கு கற்பிப்பதும், போதிப்பதும், அதனுடைய அடிப்படையிலான வாழ்க்கையை அமைத்துக் கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொள்வதும் முஸ்லிம்களுடைய ஒரு முக்கியமான பண்பாக இருக்கின்றது.
இந்த வகையில் ரியாத் அல் ராஜ்ஹி பள்ளிவாசலில் இடம்பெற்ற இந்நிகழ்வு ஏனையோருக்கும் குர்ஆனை மதிக்கின்ற, குர்ஆனை போதிக்கின்ற ஒரு முன்மாதிரியான நிகழ்வாக காணப்பட்டது.
இத்தகவலை அந்நிகழ்வில் கலந்து கொண்ட முக்கிமான ஒரு பிரமுகர் எங்களுடன் பகிர்ந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.