மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு உடனடி நிவாரணம் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் மின்சக்தி அமைச்சர் காஞ்சனா விஜேசேகர ஆகியோருக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.
இன்று வெள்ளிக்கிழமை (08) இடம்பெற்ற சந்திப்பின் போத இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
மேலும், மீனவ சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு நிவாரணம் வழங்குவதற்கான அவசர நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக கடற்றொழில் அமைச்சர் தலைமையில் குழுவொன்றை நியமிக்கவும் பிரதமர் பணிப்புரை விடுத்துள்ளார்.
இந்தக்குழுவில், நாடாளுமன்ற உறுப்பினர்களான திலிப் வெதஆராச்சி, நிமல் லான்சா, நிரோஷன் பெரேரா, பியால் நிஷாந்த, சனத் நிஷாந்த, மயந்த திஸாநாயக்க ஆகியோர் இந்தக் குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதேநேரம், இந்தக் குழுவின் அங்கத்துவத்திற்கு திறைசேரியின் பிரதிநிதி ஒருவர் பரிந்துரைக்கப்படுவார் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் குழுவில் சம்பந்தப்பட்ட அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் அதிகாரிகளை உறுப்பினர்களாக நியமிக்கவும் அவர் பணிப்புரை விடுத்துள்ளார்.