நாட்டின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வைக் காண்பதற்கு சர்வகட்சி அரசாங்கம் மிகவும் முக்கியமானது என இலங்கை அமரபுர மகா நிகாயவின் அதியுயர் மகா தலைவர் அக்கமஹா பண்டித வண. தொடம்பஹல சந்தசிறி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ராஜகிரிய, கலப்பலுவ, கோதம தபோவன விகாரைகளுக்குச் சென்று அமரபுர மகாநாயக்க தேரரை சந்தித்து ஆசி பெற்றார்.
பொருளாதாரக் கொள்கையொன்றை அமுல்படுத்துவதன் மூலம் நாட்டின் நெருக்கடியான பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகளை வழங்குவதற்கு பலமான அரசாங்கம் அவசியமானது என்றும் தேரர் தெரிவித்தார்.
தேரர் தலைமையிலான மகாசங்கரத்தினருடன் கலந்துரையாடலில் ஈடுபட்ட பின்னர் தாது மன்றத்திற்குச் சென்று சமய அனுஷ்டானங்களை மேற்கொண்ட பின்னர் மகா சங்கரத்ன சேத்பிரித்தை ஓதி ஜனாதிபதியை ஆசீர்வதித்தனர்.
தொடர்ந்து பேசிய அவர், விவசாயத்திற்கு முன்னுரிமை அளித்து நாட்டை தன்னிறைவடையச் செய்வதற்கு தேவையான வேலைத்திட்டங்கள் தயாரிக்கப்பட வேண்டும் என்றார்.
எதிர்கால உலகை வெல்லக்கூடிய திறன்கள் மற்றும் பொருத்தமான பாடங்களை அடிப்படையாகக் கொண்ட தொழில் வாய்ப்புக்களை இலக்காகக் கொண்ட தேசிய கல்விக் கொள்கையொன்று பாடசாலை பாடத்திட்டத்தில் உள்ளடக்கப்பட வேண்டுமெனவும் தேரர் சுட்டிக்காட்டினார்.
இந்நிகழ்வில் இலங்கை அமரபுர மகா நிகாயாவின் பொதுப் பதிவாளர் கலாநிதி பல்லேகந்த ரத்தினசார தேரர் மற்றும் அந்த பிரிவை பிரதிநிதித்துவப்படுத்தும் சங்க சபைகளின் மகா சங்கத்தினரும் கலந்துகொண்டனர்.