பனிப்போரை முடிவுக்குக் கொண்டு வந்த மிகாயில் கொர்பசேவ் பனிப்போரின் மீள் எழுச்சியுடன் மறைவு!

Date:

சோவியத் ஒன்றியத்தின் இறுதித் தலைவரான மிகாயில் கொர்பசேவ் தனது 91 ஆவது வயதில் நேற்றுக் காலமானார்.

நீண்ட காலமாக நோய் வாய்ப்பட்டிருந்த நிலையில் அவர் மரணமடைந்ததாக மொஸ்கோ வைத்தியசாலை நேற்று அறிவித்திருந்தது.

1985 இல் சோவியத் ஒன்றியத்தின் தலைவராகிய கொர்பசேவ். 1991 இல் சோவியத் ஒன்றியம் உடையும் வரை அதன் அதிபராகத் திகழ்ந்தார்.

நீண்ட காலமாக மேற்குலகுடன் நிலவிய பனிப்போரை முடிவுக்குக் கொண்டு வந்தமை உலக அமைதிக்கு அவர் செய்த பாரிய பங்களிப்பாகக் கருதப்படுகிறது.

கிழக்குக்கும் மேற்குக்கும் இடையிலான முறுகலை முடிவுக்குக் கொண்டு வந்ததன் விளைவாக சோவியத் ஆதிக்கத்தில் இருந்த பல கிழக்கைரோப்பிய தேசங்கள் தனி நாடுகளாக தம்மை விடுவித்துக் கொண்டன. அதன் பின்னர் நவீன ரஷ்யா உருவாவதற்கும் அவர் காரணமாக இருந்தார்.

கொர்பசேவின் இழப்பு தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், தூரதரிசனம் மிக்க மனிதர் என வர்ணித்துள்ளார். தேவையான மாற்றங்களை உள்வாங்கக் கூடிய ஆர்வம் உள்ளவராக அவர் இருந்தார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வரலாற்றை நேரான திசையில் மாற்றியமைத்த தனிமனிதரென்றால் அது கொர்பசேவ் தான் என மொஸ்கோவுக்கான முன்னாள் அமெரிக்கத் தூதுவரும் அரசியல் ஆய்வாளருமான மைக்கல் மக்போல் தெரிவித்துள்ளார்.

விவசாயக் குடும்பத்தில் பிறந்த மிகாயில் கொர்பசேவ், கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளராகவிருந்து தனது 54 ஆவது வயதில் சோவியத் யூனியனின் தலைவரானார்.

ஸ்டாலினுக்குப் பின்னரான தலைமுறையிலிருந்து தலைமைப் பதவியை ஏற்ற இவர் கம்யூனிஸத்தை நடைமுறைப்படுத்துவதில் கிளாஸ்நோஸ்ட், பெரெஸ்ட்ரொய்க்கா சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தார்.

பனிப்போரை முடிவுக்குக் கொண்டு வந்தமைக்காக 1990 ஆம் ஆண்டுக்கான நோபல் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். ஆனாலும் சோவியத் யூனியனை பிளவுபடுத்தியவர் என்ற கருத்தில் இன்றும் அவரை விமர்சிப்பவர்களும் சோவியத் தேசத்தில் இருக்கின்றனர்.

நாட்டுக்கும் ஐரோப்பாவுக்கும் உலகுக்கும் தேவையான சீர்திருத்தத்தை ஆரம்பித்தவனாக என்னை நான் காண்கிறேன் என 1992 இல் பதவி விலகும் போது அவர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டிருந்தார்.

மேற்குடனான பனிப்போரை முடிவுக்குக் கொண்டு வந்தமைக்காக நோபல் விருது பெற்ற மிகாயில் கொர்பசேவ் மரணிப்பதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பிருந்தே ரஷ்யா உக்ரைனின் மீது போர் தொடுத்து மேற்குடனான முறுகலை மீளவும் ஆரம்பித்திருந்தது.

1999 இல் காலம் சென்ற அவரது மனைவி ரைஸாவுக்குப் பக்கத்தில் மொஸ்கோவின் நொவோடவிச்சி மயானத்தில் அவரது நல்லடக்கம் இடம் பெறவுள்ளது.

Popular

More like this
Related

வறட்சியான வானிலை காரணமாக நீரை சிக்கனமாக பயன்படுத்துங்கள் – நீர் வடிகாலமைப்பு சபை!

நாட்டில் தற்போது நிலவும் கடுமையான வறட்சியான வானிலை காரணமாக, நீர்த்தேக்கங்களின் நீர்...

தனது தந்தையை விடுவிக்கக் கோரி பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் மகன் உருக்கமான வேண்டுகோள்!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் மகன் காசிம் கான், தனது...

மத்திய கிழக்கு போர் பதற்றம்: வெளிநாட்டு தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்து கலந்தாலோசனை!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் யுத்த பதற்றங்களுக்கு மத்தியில், இலங்கையின் வெளிநாட்டு...

75 மில்லியன் ரூபாய் இழப்பீட்டை செலுத்த கெஹலியவுக்கு நீதிமன்றம் உத்தரவு!

2022 ஆம் ஆண்டு இந்திய கடன் திட்டத்தின் கீழ், பதிவு செய்யப்படாத...