இஸ்லாமிய புதுவருட சிந்தனைகள்: நாட்டுப் பற்று தேசிய அபிவிருத்தியின் ஒரு குறியீடாகும்!

Date:

-எம்.ஐ.எம் அன்வர் (ஸலபி)

நபியவர்கள் (ஸல்) ஹிஜ்ரத் பயணத்தின் போது மக்கா நகரை நோக்கி ‘மக்காவே நீ உலகிலேயே அல்லாஹ்விடத்தில் மிகவும் விருப்பமான பூமி. உன் சமூகம் என்னை விரட்டியிருக்காவிட்டால் நான் உன்னை விட்டுச் சென்றிருக்க மாட்டேன்’ என்று கூறினார்கள்.

நபியவர்களும் மனித உணர்வுகளோடு படைக்கப்பட்டவர்கள் என்ற வகையில், அவரிடமிருந்தும் தேசப்பற்றும், தேசத்தை நேசிக்கும் வார்த்தைகளும் இயல்பாகவே வெளிப்பட்டிருக்கின்றன.

பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான உணர்வு. தேசப்பற்று என்பது மனிதனுக்குள்ளே புதைந்துள்ள ஒரு மானிடப் பண்பு. நபிகளார் (ஸல்) அவர்கள் தான் பிறந்து வளர்ந்த மக்கத்து மண்ணை மிகவும் நேசித்தார்கள்.

இறை தூதின் பணிகளை முன்னெடுக்கும் அடிப்படைத் தளமாக மக்கா பூமி அமைய வேண்டும் என்ற ஆசை நபிகளாரின் மனதில் வேரூன்றியிருந்தது.

ஆனால் மக்காவாசிகளின் எல்லைமீறிய கொடுமைகள், நபிகளாரை நிர்ப்பந்தமாக இடம் பெயரவைத்தது. அப்போது அவர்களின் உள்ளத்தில் இருந்து வெளிப்பட்ட சோகம் கலந்த வார்த்தைகள் மக்கா மண்ணின் மீதுள்ள அவர்களது நேசத்திற்கு சான்றாக அமைந்தன.

இஸ்லாமிய மார்க்கத்தை நிலைநாட்டுவதற்காக அல்லாஹ்வின் கட்டளையின் பிரகாரம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் அவரது தோழர்களும் தனது தாயகமான மக்காவை பிரிந்து அயல் பிரதேசமான மதீனா நோக்கி ஹிஜ்ரத் மேற்கொண்டார்கள்.

அங்கு வாழ்ந்த அந்த மக்கள் அவர்களை அன்போடும் பாசத்தோடும் வரவேற்றார்கள். மார்க்கத்திற்காக தமது உறவுகளையும் உடமைகளையும் இழந்து வந்த அந்த சமூகத்தை அவர்கள் தங்களது தலைக்கு மேல் வைத்து தாங்கி பிடித்தார்கள்.

தமது சொத்துலிருந்தும் தமது இருப்பிடத்திலிருந்தும் அவர்களுக்கு வாரி வழங்கினார்கள். இன்னும் சொல்லப்போனால் ஒரு சில நபித்தோழர்கள் தமது சொத்தை இரண்டாகப் பங்கிட்டு கூட அவர்களுக்கு வழங்குவதற்கு முன் வந்தார்கள்.

இது அவர்கள் இந்த மார்க்கத்தின் மீது வைத்த பாசத்தையும் நேசத்தையும் குறிப்பிட்டுச் சொல்லக் கூடியதாக அமைந்திருக்கிறது.

தமது தாயகம் திறந்து அயல் தேசத்திற்கு புலம்பெயர்ந்து சென்ற ஸஹாபாக்களுக்கு அங்கே அவர்கள் எதிர்பார்த்த அளவைவிட அன்பும் பாசமும் கிடைத்தாலும் அந்த பூமியிலே அவர்கள் வாழும் பொழுது அவர்களின் சொந்த தேசத்தின் மீதான பாசமும் நேசமும் அவ்வப்பொழுது பல கோணங்களிலும் வெளிப்பட்டது.

அவர்கள் அது தொடர்பான தமது மன வேதனைகளை அவ்வப்பொழுது வெளிப்படுத்தினார்கள். நபி ஸல்லல்லா{ஹ அலைஹி வஸல்லம் அவர்கள் கூட தனது சொந்த பூமியான மக்காவை பற்றி அதிகம் அதிகம் நினைவுகூர்பவர்களாக இருந்தார்கள் ஒரு கட்டத்தில் இப்படி பிரார்த்தனை செய்தார்கள்.

‘யா அல்லாஹ்’ எங்களுக்கு மக்காவை விருப்பத்துக்குறிய தேசமாக ஆக்கியதைப் போல மதீனாவையும் ஆக்கிவைப்பாயாக.!

எனவேதான், ஒரு முஸ்லிம் தான் வாழும் தேசத்தின் மைய நீரோட்டத்திலிருந்து எக்காரணங்களுக்காக வேண்டியும் தூரமாகி தன் தேசத்தின் மீது அவன் வெறுப்புக் கொள்ளவோ தன் தேசத்தின் மீது அவன் அதிருப்தி அடையவோ முடியாது.

இயல்பான இந்த உணர்வு ஒருவரிடத்தில் மேலிடுவதை இஸ்லாம் அனுமதித்திருக்கிறது என்பதை புரியலாம். இஸ்லாம் இயற்கை மார்க்கம் என்ற அடிப்படையில் தேசத்தை சார்ந்து நிற்கும் உணர்வை அது அங்கீகரிக்கின்றது.

ஒரு மனிதன் தனது பிறந்த பூமியை விரும்புவதுடன் மாத்திரம் சுருங்கிவிட மாட்டாது. அதற்கு அப்பால் அவன் தன் நாட்டு மக்களை நேசிப்பான்.

நாட்டு மக்களின் நலன் கருதி அவர்களுக்கு தன்னால் முடிந்த சேவைகளை ஆத்மார்த்தமாக செய்வதும் அவர்களோடு இணக்கமாக வாழ்வதும் அவர்களுக்காக உழைப்பதும்தான் உண்மையான தேசப்பற்று.

தேசப் பற்றுள்ள ஒரு குடிமகன் நாட்டின் சுகாதாரம், கல்வி, கலாசாரம் என்பனவற்றின் வளர்ச்சிக்கு தன்னலம் கருதாது உழைப்பதும் தன்னால் ஆன ஒத்தாசைகளை செய்வதும் நாட்டுப் பற்றின் உண்மை அடையாளங்களாகும்.

எனவேதான், நாட்டுப் பற்று தேசிய அபிவிருத்தியின் ஒரு குறியீடாகும். அது வெறுமையான பக்திப் பிரவாகம் அல்ல என்பதை மனங்கொள்ள வேண்டும்.

அந்தவகையில் இன்றைய இலங்கைத் தேசம் சந்தித்திருக்கும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிமிகு சூழலில் முஸ்லிம்கள் தேசிய அபிவிருத்தியில் ஹிஜ்ரத்தின் ஓளியில் தமது தேசப் பற்றை வெளிப்படுத்துவதோடு தேசிய அபிவிருத்திக்காகவும் உழைக்க வேண்டிய தார்மீக பொறுப்பை சுமந்துள்ளார்கள் எனலாம்.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...