2022 ஆகஸ்ட் ஐந்தாம் திகதி வெள்ளிக்கிழமை இந்த உலகின் எல்லாவிதமான
சட்டங்களையும், நியதிகளையும் தர்ம நியாயங்களையும் மீறி இலஞ்சம், படுகொலைகள், அச்சுறத்தல் என்பனவற்றின் அடிப்படையில் ஆட்சி புரியும் இஸ்ரேல் காஸா பிரதேசத்தின் மீது தனது மூர்க்கத்தனத்தை மீண்டும் கட்டவிழத்து விட்டுள்ளது.
இந்த மூர்க்கத்தனமான தாக்குதலால் 72 மணநேரத்துக்குள் ஐந்து வயது பாலகன் ஒருவன் உட்பட 15 சிறுவர்கள் உள்ளடங்களாக 45 அப்பாவி பலஸ்தீன பொது மக்கள்
கொல்லப்பட்டுள்ளனர். கட்டிடங்கள் பல தரை மட்டமாக்கப்பட்டுள்ளன.
நீர் மற்றும் மின்சாரம் போன்ற அடிப்படை விநியோகங்கள் தடுக்கப்பட்டுள்ளன. பட்டினரியால் வாடிய நிலையில் நிவாரணங்களில் மட்டுமே தங்கியுள்ள காஸா பகுதி மக்கள் இப்போது மேலும் பல சொல்லொணா துன்பங்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
பலஸ்தீன இஸ்லாமிய ஜிஹாத் அமைப்பின் தளபதி தய்சீர் அல் ஜபாரியை இலக்கு வைத்து நடத்தப்பட்டதாகக் கூறப்படும் தாக்குதலில் ஏனைய பொது மக்களோடு சேர்த்து அவரும் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐந்து வயது சிறுவனான அலா குஅத்தும், அவனின் தந்தை ஆகியோரும் இதில் அடங்கும். இவர்கள் அல் ஜபாரிஸ் பகுதியில் குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்த நிலையிலேயே விமான குண்டு வீச்சு தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர்.
கொல்லப்பட்ட ஜபாரி இஸ்ரேலிய யுத்த தாங்கிகள் மீது தாக்குதல் நடத்தியதாகவோ,
அதற்கு திட்டமிட்டதாகவே அல்லது ஆதரவு அளித்ததாகவோ எந்தக் குற்றச்சாட்டும்
நிரூபிக்கப்படாத நிலையில் இஸ்ரேல் இந்தத் தாக்குதலை நடத்தி உள்ளது.
இஸ்ரேலின் இந்தக் காட்டுமிராண்டித் தனம் பற்றி கருத்து வெளியிட்டுள்ள பத்தி எழுத்தாளர் மஹா ஹுஸைனி என்பவர் மகிழ்ச்சியானதோர் கோடை காலத்தை எதிர்நோக்கி இருந்த நிலையில் 16 பலஸ்தீன சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
கால்பந்து விளையாடவும் கரையோரத்துக்கு சென்று கோடை கால கூடாரம் அமைத்து விளையாடவும் திட்டமிட்டிருந்த அப்பாவி சின்னஞ் சிறுசுகள் மீது அரக்கத்தனம் புரியப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேல் எல்லாவிதமான மனித விழுமியங்களையும் உணர்வுகளையும் கைவிட்டுள்ளது என்பதை பத்தி எழுத்தாளர் அஹமட் அல் ஷமாக் இவ்வாறு குறிப்பிடுகின்றார்.
பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான முஹம்மதின் குடும்பம் இரவு எட்டு மணிக்கு தனது
இரவு உணவை உண்டனர்.
11 வயதான அஹமட் அல் நைராபும் அவனது ஐந்து வயது சகோதரனான மூமினும் தமது தந்தையான முஹம்மதிடம் தங்களது வீட்டுக்கு அருகில் உள்ள ஒரு சில்லறைக் கடைக்கு தம்மை அழைத்துச் செல்லுமாறு கேட்டுக் கொண்டனர்.
அந்தக் கடையில் அவர்கள் தமக்கு தேவையான சில உணவுகளையும் கல்வித்
தேவைக்கான ஏனைய பொருள்களையும் வாங்கினர்.
அப்போது தான் முஹம்மத் அல் நைராபுக்கு ஒரு பெரிய வெடிச்சத்தம் கேட்டதோடு தீச் சுவாலை ஒன்றும் தெரிந்தது. அதனைத் தொடர்ந்து பரவிய புகையால் வேறு எதையும் என்னால் பார்க்க முடியவில்லை.
மகன் மூமின் இரத்தம் வழிந்தோட நிலத்தில் வீழ்ந்து கிடந்தான். நான் உடனடியாக
அவனை எனது கரங்களில் ஏந்தியவாறு ஒரு காரையோ அல்லது அம்பியூலன்ஸையோ
தேடி ஓட்டம் பிடித்தேன்.
பல மீட்டர் தூரம் சென்ற பிறகு தான் திரும்பிப் பார்த்த போது அஹமட்டும் இரத்தம் வழிய தரையில் வீழ்ந்து கிடந்தான் என்று தனது சோகத்தை
பகிர்ந்துள்ளார்.
அரபு சர்வாதிகாரிகளின் ஆதரவும், அமெரிக்கா பிரிட்டன் உட்பட ஏனைய ஐரோப்பிய
சக்திகளினதும் பூரன ஆதரவும் ஆசீர்வாதமும் இன்றி இஸ்ரேலால் இத்தகைய
கொடூரங்களை தொடர்ந்து இழைக்க முடியாது.
2020 முதல் இஸ்ரேலுடன் இயல்பு நிலைகளை ஏற்படுத்தி உள்ள ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரேன் மற்றும் மொரோக்கோ ஆகிய நாடுகள் கூட இதுவரையில் இந்தச் சம்பவத்துக்கு எவ்வித கண்டனமும் தெரிவிக்காது மௌனம் காக்கின்றன.
நாஸி பாணியிலான இந்த அரக்கனை உருவாக்கிய ஐக்கிய நாடுகள் சபை இப்போது
பாரிசவாதத்தால் பாதிக்கப்பட்ட ஒரு அமைப்பாகக் காணப்படுகின்றது.
மேலாதிக்கவாத வல்லரசுகளின் அழுத்தமே இந்த இழி நிலைக்கு காரணம். பிரிட்டிஷ் ஊடகவியலாளர் டேவிட் ஹேர்ஸ்ட் அண்மையில் எழுதியுள்ள ஒரு ஆக்கத்தில் இஸ்ரேலை அதன் நடவடிக்கைகளுக்கு பொறுப்பேற்கச் செய்யும் நடவடிக்கையிலோ அல்லது அதன் குற்றச் செயல்களை உணர வைப்பதிலோ, அல்லது அதற்கு எதிரான சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுப்பதிலோ மேற்குலகின் விழுமியங்கள் அனைத்தும் வெற்றுத் தன்மையான நிலைக்கு வந்துள்ளன எனக் குறிப்பிட்டுள்ளார்.
மாறாக அமெரிக்க ஜனாதிபதி ஜோய் பிடன் இஸ்ரேலுக்கு தன்னைப் பாதுகாத்துக்
கொள்ளும் உரிமை உள்ளது. இஸ்ரேலின் பாதகாப்புக்கான எனது ஆதரவு நீண்டகாலமாக இருந்து வருகின்ற ஒன்று. அதில். எவ்வித மாற்றத்துக்கும் இடமில்லை.
தாக்குதல்களில் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் இஸ்ரேலின் உரிமையும் இதில் அடங்கும் என்று தெரிவித்துள்ளார்.
அதேபோல் இந்தச் சம்பவத்தைக் கண்டிப்பதற்கு பதிலாக பிரிட்டிஷ் பிரதமர் பொரிஸ் ஜோன்ஸனும் இஸ்ரேலுக்கு தன்னைப் பாதகாத்துக் கொள்ளும் உரிமை உள்ளது என்றே தெரிவித்துள்ளார்.
பிரிட்டனின் அடுத்த பிரமதராக வர இருப்பவர் என்று கூறப்படும் லிஸ் டிரஸ்ஸும்
இஸ்ரேலுக்கு தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் உரிமை உள்ளது என்ற தெரிவித்துள்ளார்.
காயப்பட்டவர்களின் காயங்களுக்கு மேல் உப்பு தடவுவது போல்
பிரிட்டன் தற்போது டெல் அவிவ்வில் உள்ள தனது இஸ்ரேல் தூதரகத்தை
ஜெரூஸலத்துக்கு மாற்றுவது பற்றி ஆராயப்படும் என்று லிஸ் டிரஸ் மேலும்
தெரிவித்துள்ளார்.
பலஸ்தீன இஸ்ரேல் பிரச்சினையில் ஒரு நடுநிலையாளராக அல்லது
சமாதானத்தை ஏற்படுத்துபவராக பிரிட்டன் செயற்படலாம் என்ற நம்பிக்கையை இந்த அறிவிப்பு கேள்விக்குறியாக்கி உள்ளது.
2022 ஆகஸ்ட் 7ல் நடத்தப்பட்ட தாக்குதலில் இடிபாடுகளுக்குள் சிக்குண்ட தனது மகளை மீட்டு வரும் தந்தை பலஸ்தீனத்தையோ அல்லது பஸ்தீன மக்களையோ முற்றாக அழித்தொழித்துவிட முடியாது என்பது தான் இவர்கள் அனைவரும் புரிந்து கொள்ளத் தவறியுள்ள ஒரு உண்மையாகும்.
உலக நாடுகளில் வாழும் ஏனைய இளைய தலைமுறையினரைப் போலவே அவர்களும் உலகளாவிய ரீதியில் தொடர்பு பட்டுக் காணப்படுகின்றனர்.
இந்நிலையில் தற்போது நடத்தப்பட்டுள்ள மூர்க்கததனமான விமானத் தாக்குதல் மூலம்உலகத் தலைவர்கள் பலஸ்தீனர்களுக்கு என்ன சொல்ல நினைக்கிறார்கள்?
காஸாவின் இன்றைய மோசமான நிலையை புள்ளிவிவரங்கள் வெளிப்படுத்துகின்றன.
காஸாவில் வாழும் பலஸ்தீன மக்களுள் மூன்றில் இரண்டு பங்கினர் அகதிகளாகவே
உள்ளனர்.
காஸா பிரதேசத்தில் மட்டும் அமைக்கப்பட்டுள்ள எட்டு அகதி முகாம்களில்
சுமார் ஐந்து லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வாழுகின்றனர்.
உலகில் சனநெரிசல் மிக்க பகுதிகளில் ஒன்றாகவும் இது காணப்படுகின்றது. காஸாவில் கிடைக்கின்ற தண்ணீரில் 97 வீதமானது குடிப்பதற்கு உதவாதது.
இந்த அசுத்தமான நீர் விநியோகத்தின் மூலம் மக்களுக்கு நஞ்சூட்டப்படுகின்றது. தொடரான மின் வெட்டுக்களும் இங்கு அமுல் செய்யப்படுகின்றன.
காஸாவின் சுகாதார சேவையும் தீவிர நெருக்கடியை எதிர் நோக்கி உள்ளது. மின் வெட்டு, போதிய உபகரணங்கள் இன்மை, மருந்துகள் இல்லாமை, ஊழியர்கள் இல்லாமை என பல பிரச்சினைகளால் இது பாதிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலில் அல்லது மேற்குக் கரைப் பிரதேசத்துக்கு சென்று அவசர சிகிச்சைகள் பெற வேண்டிய தேவையில் சுமார் 39 வீதமான நோயாளிகள் உள்ளனர்.
ஆனால் அவர்களுக்கு அதற்கான அனுமதிகள் மறுக்கப்படுவதாலும் அல்லது தாமதிக்க்படுவதாலும் பெரும் உயிர் ஆபத்தை அவர்கள் எதிர் கொண்டுள்ளனர்.
வேலையில்லாப் பிரச்சினை 46.6 வீதமாக உள்ளது. 62 வீதத்துக்கும் அதிகமான இளைஞர்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். காஸாவில் உள்ள சிறுவர்களில் ஐந்தில் நான்கு பேர் அச்சம், துக்கம், மனச்சோர்வு என்பனவற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அச்சத்துக்கு ஆளான ஒரு சிறுவன் தாயின் அரவணைப்பில் அடிக்கடி நடக்கும் குண்டு வீச்சு தாக்குதல்கள், அவற்றின் மூலம் வீடுகள் தரை மட்டமாக்கப்படுதல் என்பன காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் காஸாவுக்குள்ளேயே
இடம்பெயர்ந்து வாழுகின்றனர்.
இந்த நிலைமைகளை இரத்தினச் சுறுக்கமாக தனது கட்டுரை ஒன்றில் தந்துள்ள பத்தி
எழுத்தாளர் மொஹ்தஸம் ஏ தலோல் அபுஜோமா “இஸ்ரேல் அப்பாவி பொது மக்களை
காஸாவில் கொல்லும் போது இரட்டை வேடம் போடும் உலகம் அதை கை கட்டி
வேடிக்கை பார்க்கின்றது” என்று தலைப்பிட்டுள்ளார்.
இஸ்ரேலின் பாதுகாப்புக்கு எந்தவகையிலும் ஒரு மூலோபாய அச்சுறுத்தலாக காஸா
பிரதேசம் திகழவில்லை. அது ஒரு மிகச் சிறிய கரையோரப் பிரதேசம்.
மிக எளிதாக அதைக் கட்டுப்படுத்தவும் முடியும். கடந்த 16 வருடங்களாக இது நடக்கின்றது. இஸ்ரேலும் எகிப்தும் மிக இறுக்கமான தரைவழி, ஆகாய மற்றும் கடல்வழி தடைகளை விதித்துள்ளன.
காஸாவுக்குள்ளே வருவது, போவது என்பன பற்றிய எல்லா தகவல்களும் அவர்களின்
புலனாய்வுப் பிரிவினருக்குத் தெரியும் என்று அவர் அந்த ஆக்கத்தில் மேலும்
குறிப்பிட்டுள்ளார்.
காஸாவின் எஞ்சியுள்ள உள்கட்டமைப்புக்களை சீர் குலைத்து முடியுமானவரை மக்களை கொன்றொழிக்கும் வகையில் இஸ்ரேல் மீண்டும் ஒரு தாக்குதலை நடத்தி உள்ளமை ஒன்றும் ஆச்சரியத்துக்குரிய விடயமல்ல.
இது வாடிக்கையான ஒன்றாகிவிட்டது. ஒன்று அல்லது இரண்டு முக்கிய நபர்களைக் கொல்ல வேண்டும் என்பதற்காக எத்தனை அப்பாவிகளை வேண்டுமானாலும் பலி எடுக்கலாம் என்பது வழமையான ஒரு சமாச்சாரமாகி விட்டது.
யாராவது இதைப்பற்றிக் கவலைப் படுகிறார்களா? நிச்சயமாக இல்லை. ஆனால் உக்ரேன் தாக்குல்களின் போது இதே மேற்குலகம் எவ்வாறு நடந்து கொண்டுள்ளது.
70வருடங்களுக்கு மேலாக மனித உரிமை மீறல்களும், படுகொலைகளும், இனச்சுத்திகரிப்பும் தொடர்ந்து வருகின்ற நிலையில் இஸ்ரேலுக்கு எதிரான தடைகள் எங்கே? கடந்த பெப்ரவரியில் உக்ரேன் மீது ரஷ்யா தாக்குதலை தொடங்கிய ஒரு சில நாற்களிலேயே ரஷ்யாவுக்கு எதிராகத் தடைகளைக் கொண்டு வர முடியுமென்றால் ஏன் இஸ்ரேல் விடயத்தில் இந்த பாரபட்சம்? மேற்குலகின் இரட்டைவேடம் இப்போது தெளிவாகத் தெரிகின்றது.
காஸாவில் பலஸ்தீன அப்பாவிகள் இஸ்ரேலிய கயவர்களால் கொல்லப்பட்ட போது மேற்குலகம் கை கட்டி வேடிக்கை பார்த்தது இதுவொன்றும் முதல் தடவையும் அல்ல.
காஸாவில் கட்டவிழத்து விடப்பட்ட ஒவ்வொரு வன்முறையும் அப்பாவி பொது மக்களை இலக்கு வைத்ததாகவே இருக்கின்றது என்று நோர்வேயின் அகதிக் கவுண்ஸிலின் மத்திய கிழக்கு பிராந்தியப் பணிப்பாளர் கார்ஸ்டன் ஹேன்ஸன் தெரிவித்துள்ளார்.
இந்த மோசமான வன்முறைகளில் அப்பாவி குடும்பங்களும் சிறுவர்களும் சிக்கிக்
கொள்கின்றனர். இது அவர்களின் நினைவுகளை விட்டு நீங்காத ஒன்றாக அமைந்து
விடுகின்றது.
கடந்தாண்டு இடம்பெற்ற 11 நாள் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பலர்
இன்னமும் உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும் மீண்டு வராத நிலையிலேயே மற்றொரு தாக்குதலும் நடந்துள்ளது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டனின் பிடன் நிர்வாகம் பில்லியன் கணக்கான டொலர் பெறுமதியான
மனிதாபிமான மற்றும் இராணுவ உதவிகளை உக்ரேனுக்கு வழங்கி உள்ளது.
ஆனால் காஸாவைப் பற்றி கொஞ்சம் கூட அவர்கள் அலட்டிக் கொள்ளவில்லை. மாறாக பாரபட்சமான, இனவாத போக்குடைய இஸ்ரேலுக்கு அவர்கள் வருடாந்தம் மூன்று பில்லியன் டொலர்கள் பெறுமதியான இராணுவ உதவிகளை வழங்கி வருகின்றனர்.
இஸ்ரேலினால் பலஸ்தீனர்களின் இரத்தம் அநியாயமாக ஓடவிடப்பட்ட எல்லா
சந்தர்ப்பங்களிலும் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் அமைதியாகவே இருந்துள்ளன.
காஸாவில் எதுவுமே நடக்கவில்லை என்பது போல் தான் அவர்களின் நடவடிக்கைகள் இருந்துள்ளன.
பலஸ்தீன மக்கள் தமது சொந்த பூமியை ஆக்கிரமித்துள்ள இஸ்ரேலுக்கு தங்களது எதிர்ப்பைத் தெரிவிக்கின்றனர். அதற்காக அந்த மக்களை இஸ்ரேல் கொன்று குவித்தும் காயப்படுத்தியும் வெறியாட்டம் ஆடுகின்றது.
இதை கை கட்டி வேடிக்கை பார்ப்பதில் ஐரோப்பிய நாடுகளுக்கு அப்படி என்ன ஆனந்தம் இருக்கின்றது என்பதும் புரியவில்லை.
இந்த விடயத்தில் அரபுலக தலைவர்களின் நிலைப்பாடு தான் என்ன? பலஸ்தீனர்களுடன் சகோதரத்துவம் பற்றி அவர்கள் பேசுகின்றனர்.
ஆனால் இஸ்ரேல் இழைக்கும் குற்றங்களை ஒன்றில் கண்டும் காணாமல் இருக்கின்றனர் அல்லது வெற்கப்படக் கூடிய கண்டனங்களைத் தெரிவிக்கின்றனர்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு சதமாவது நட்டஈடு வழங்கப்பட வேணடும் என அவர்கள் ஒருபோதும் தமது புதிய சியோனிஸ நண்பனிடம் கேட்டதில்லை.
கத்தார் செஞ்சிலுவை சங்கம் மட்டுமே மனிதாபிமான உதவிகளை வழங்கி உள்ளது. சர்வதேச சமூகத்தின் இணக்கப்பாடு பெரும்பாலும் மறைமுகமானதல்ல.
வரலாற்று ரீதியான பலஸ்தீன பூமி அனைத்தையும் இஸ்ரேல் ஆக்கிரமித்து அங்கு யூதக் குடியேற்றங்கள் நிர்மாணிக்கப்பட வேண்டும்.
அதற்கு பலஸ்தீனர்கள் ஒட்டு மொத்தமாக அங்கிருந்து அகற்றப்பட வேண்டும். இது தான் அகண்ட இஸ்ரேல் தொடர்பான குறிக்கோள்.
இதற்கு தடையாக எதுவும் இருக்கக் கூடாது. இதுதான் ஐரோப்பாவின்
நிகழ்ச்சி நிரல். சில நாடுகள் பலஸ்தீனத்துக்கு ஆதரவாக தமது குரல்களை எழுப்புகின்றன.
ஆனால் எவ்வித நடவடிக்கையும் அவர்களிடம் இருந்து வெளிப்படவில்லை. இதுதான்
அவர்களின் இரட்டை வேடம். இதுவே மிகவும் வெற்கக் கேடான நிலையும் கூட.