தற்போதைய ஆட்சி 2025 ஆம் ஆண்டு நிறைவடையும் வரை பாராளுமன்றத்தை கலைக்க மாட்டோம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு வழங்கிய உறுதிமொழியுடன், அவர் அந்தக்கட்சியின் கைதியாக றியுள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
நிறைவேற்று அதிகாரத்திற்கும் மற்றும் சுதந்திரக்கட்சிக்கு இடையிலான ஒப்பந்தம் நாட்டின் 22 மில்லியன் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வைக் கொண்டு வராது.
பொருளாதார, அரசியல் மற்றும் சமூக ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்காது, ஆனால் அவர்களை மேலும் மோசமாக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், ‘உத்தேச பல கட்சி அல்லது அனைத்துக் கட்சி அரசாங்கத்தின் அமைப்பு மற்றும் சாலை வரைபடம் குறித்து நாங்கள் இன்னும் இருட்டில் இருக்கிறோம்.
ஜனாதிபதி விக்கிரமசிங்கவுடன் நாம் நடத்திய பேச்சுவார்த்தையில் உள்ளடங்கிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பான 9 மற்றும் 11 விடயங்கள் அடங்கிய இரண்டு ஆவணங்களை சமர்ப்பித்தோம்.
ஆனால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் நிகழ்ச்சி நிரலை முன்னெடுப்பதற்கு முயற்சிக்கும் எந்தவொரு நிர்வாகத்தையும் ஆதரிக்க சுதந்திரக் கட்சி தயாராக இல்லை.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு புத்துயிரூட்டும் ஆணை ரணிலுக்கு இல்லை. இலங்கையில் உலகளாவிய சமூகம், சர்வதேச நிதி நிறுவனங்கள் மற்றும் நன்கொடை நாடுகள் மத்தியில் நம்பிக்கையை மீளக் கட்டியெழுப்ப அரகலக்காரர்கள் மற்றும் முழு தேசமும் கோரியபடி விரைவில் புதிய அரசாங்கத்தின் மூலம் இலங்கைக்கு அமைப்பு மாற்றம் தேவை’ என்று தயாசிறி ஜயசேகர வலியுறுத்தினார்.