மண்ணெண்ணெய் விலையை சுமார் 290 வீதத்தால் உயர்த்தியமை மீன்பிடித் தொழிலுக்குப் பெரும் அடியாகும் என அகில இலங்கை பொது மீனவர் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பாக மீனவர் சம்மேளனம் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தது.
இதன்போது, இந்த தீர்மானத்தினால் சுமார் 16 இலட்சம் மீனவக் குடும்பங்களைச் சார்ந்துள்ளவர்கள் மற்றும் இந்நாட்டின் பொது மக்கள் பாதிக்கப்படுவார்கள் என சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் ரத்ன கமகே தெரிவித்துள்ளார்.
அதேநேரம், மண்ணெண்ணெய் விலை அதிகரிப்புக்கு ஏற்ப மீன் விலை 3 மடங்கு அதிகரிக்கப்படும் என தேசிய மீனவர் சம்மேளனத்தின் கொழும்பு மாவட்ட செயலாளர் அசங்க பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இதேவேளை தற்போதைய வாழ்க்கைச் செலவைக் கருத்திற் கொண்டு மண்ணெண்ணெய் விலையை அதிகரிக்க வேண்டாம் எனவும் தோட்டத் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
எரிவாயு, மின்சாரம் மற்றும் ஏனைய எரிபொருட்களின் விலை அதிகரிப்பை விட மண்ணெண்ணெய் விலை அதிகரிப்பு தமக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதேவேளை மண்ணெண்ணெய் விலை திருத்தம் பல வருடங்களுக்கு முன்னரே இடம்பெற்றிருக்க வேண்டும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் நட்டத்திற்கு மண்ணெண்ணெய் மானிய விலையில் விற்பனை செய்யப்பட்டமையே பிரதான காரணம் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள், கடற்றொழில் மற்றும் பெருந்தோட்டங்களுக்குத் தேவையான மண்ணெண்ணெய்யைப் பெற்றுக் கொள்வதற்காக நேரடி பண மானியம் வழங்க அரசாங்கம் முன்மொழிந்துள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.