யார் இந்த அய்மன் அல் ஜவாஹிரி? : அமெரிக்காவால் படுகொலை செய்யப்பட்ட அல்குவைதா தலைவர் அல்ஜவாஹிரி பற்றி சிரேஷ்ட ஊடகவியலாளர் லத்தீப் பாரூக் ஆராய்கிறார்!

Date:

2011ல் ஒஸாமா பின் லேடன் கொல்லப்பட்ட பிறகு அல்குவைதா இயக்கத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்ற அய்மன் அல் ஜவாஹிரியை 2022 ஜுலை 31 ஞாயிற்றுக் கிழமை அன்று தாங்கள் கொலை செய்து விட்டதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் அதி உயர் பாதுகாப்பு ராஜதந்திர வசிப்பிட வலயத்துக்குள் சவாஹிரி வசித்து வந்த இல்லத்தின் மாடத்தில் அவர் புத்தகம் ஒன்றை வாசித்துக் கொண்டிருந்த போது ஆளில்லா விமானமான ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தி அவர் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தலிபான்களுக்கு ஜவாஹிரி அளித்த மகத்தான பங்களிப்பை அவர்கள் ஒரு போதும் மறக்க முடியாது. தலிபான்களின் சிரேஷ்ட தலைவர் சிராஜுதீன் ஹக்கானியின் வீட்டில் தங்கியிருந்த போது தான் சவாஹிரி கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 11 நியுயோர்க் மற்றும் வாஷிங்டன் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியாக இவர் கருதப்பட்டதாலேயே ஜனாதிபதி பைடன் இவரைக் கொலை செய்துள்ளார்.

ஆனால் இந்த சம்பவங்கள் அமெரிக்காவாலேயே திட்டமிடப்பட்டது என்றும், ஆப்கானிஸ்தானில் அது நடத்திய ஆக்கிரமிப்புக்கள் மற்றும் தாக்குதல்களை நியாயப்படுத்தும் வகையிலேயே இவை திட்டமிடப்பட்டன என்றும் அமெரிக்க அறிக்கைகள் பலவற்றின் மூலம் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சவாஹிரி பின் லாடனின் வலது கரமாக செயல்பட்டவர். அல்குவைதாவின் அசல் மூளை என ஒரு காலத்தில் வர்ணிக்கப்பட்டவர்.

அந்த அமைப்பின் பிரதான மூலோபாய திட்டமிடல் நிபுணராகவும், புத்திஜீவிகள் பிரிவின் பிரதான நபராகவும் திகழ்ந்தவர். இவரது கொலையை தலிபான்கள் வனமையாகக் கணடித்துள்ளனர்.

தோஹாவில் அமெரிக்க அரசாங்கத்துடன் தாங்கள் செய்து கொண்ட சமாதான உடன்படிக்கையை முற்றாக மீறும் வகையில் இந்தத் தாக்குதல் அமைந்துள்ளதாக அவர்கள் சுட்டிக் காட்டி உள்ளனர்.

அல்குவைதா அமைப்பு, அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் சோவியத் ரஷ்யாவுக்கு எதிராகப் போரிட்ட போது, அமெரிக்க மத்திய புலனாய்வு பிரிவால் உருவாக்கப்ட்டு பயிற்றுவிக்கப்பட்ட ஒரு அமைப்பு என்பது பெரும்பாலும் உலகத்துக்கு மறைக்கப்பட்ட ஒரு உண்மையாக இருக்கின்றது.

அன்று அமெரிக்கா, அதன் மேற்குலக நேச அணிகள், அரபு தேச நேச அணிகள், அல்குவைதா என எல்லாமே ஆப்கானிஸ்தானில் இருந்து சோவியத் ரஷ்யாவை விரட்டி அடிக்கும் உறுதியில் ஒரே முகாமில் இருந்தவர்கள்.

ஆப்கானிஸ்தானில் இருந்து சோவியத் ரஷ்யா முற்றாக துரத்தி அடிக்கப்பட்ட பின் அந்தப் பிராந்தியத்தில் இருந்து அமெரிக்காவும் அதன் நேச அணிகளும் விலகிக் கொள்ள வேண்டும் என்று பின் லாடனும், சவாஹிரியும் விரும்பினர்.

ஆனால் அமெரிக்க ஐரோப்பிய மற்றும் இஸ்ரேல் ஆகியன தங்களால் கூலிக்கு அமர்த்தப்பட்டுள்ள அரபு ஆட்சியாளர்களின் துணையோடு அந்தப் பிராந்தியத்தின் வளங்களை சுருட்டி மத்திய கிழக்கை நிலை குலையச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தைக் கொண்டிருந்தன இதன் காரணமாகத் தான் பின்லாடனும் சவாஹிரியும் தமது போராட்டத்தை அமெரிக்காவுக்கும் அதன் நேச அணிகளுக்கும் எதிராகத் திருப்பினர்.

இதனால் தான் இவர்களை யுத்த வெறி கொண்ட மேலைத்தேச ஊடகங்கள் இன்றுவரை பயங்கரவாதிகளாக சித்தரித்து வருகின்றன.

ஓஸாமா பின் லேடன் சவூதியில் கட்டிட நிர்மாணத் துறையில் புகழ்பூத்த ஒரு கோடீஸ்வர குடும்பத்தின் வாரிசு.

அவர் 2011ல் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் படைகளால் கொல்லப்பட்டார். ஆனால் அமெரிக்காவின் இந்த உரிமை கோரல் பல்வேறு

தரப்புக்களால் மறுக்கப்பட்டு பின்லாடன் இயற்கையாகவே மரணம் அடைந்தார் என்ற கருத்தும் முன் வைக்கப்பட்டு வருகின்றது.

அய்மன் அல் சவாஹிரியும் ஒரு செல்வந்த குடும்பப் பின்னணியைக் கொண்டவர். எகிப்தில் உள்ள கௌரவமான ஒரு குடும்பத்தைச் சேர்ந்த கண் வைத்திய நிபுணர்.

அவரின் பாட்டனார் முஹம்மத் அல் அஹ்மதி அல் சவாஹிரி 20ம் நூற்றாண்டின் முதல் காலாண்டில் அல் அஸ்ஹர் பள்ளிவாசலின் பிரதான இமாமாக (மதகுரு) இருந்தவர்.

அவரது தாய்வழி பாட்டனாரான அப்துல் றஹ்மான் ஹஸன் அஸாம் என்பவர் அரபு நாடுகள் அமைப்பின் முதலாவது செயலாளர் நாயகமாக இருந்தவர்.

சவாஹிரியின் தாய்வழி பாட்டனார் அப்துல் வஹாப் அஸாம் 1930களில் கெய்ரோ
பல்கலைக்கழகத்தின் கலைபீடத்தின் பீடாதிபதியாகவும் கீழைத்தேய இலக்கியத்துறை பேராசிரியராகவும் கடமையாற்றியவர்.

சவாஹிரியின் தந்தை ஒரு பிரபலமான வைத்தியர் எய்ன் ஷாம்ஸ் பல்கலைக்கழகத்தில் மருத்துவத்துறை பேராசிரியராக இருந்தவர்.

அவரது மாமனார் மஹ்பூஸ் அஸாம் எகிப்து லிபரல் கட்சியின் உப தலைவராக இருந்தவர்.

கெய்ரோ நகரில் இவ்வாறான சமயத் தலைவர்கள், புத்திஜீவிகள் மற்றும் அரசியல்
பிரமுகர்களை உள்ளடக்கிய ஒரு கௌரவமான குடும்பப் பின்னணியைக் கொண்டவர்தான் அய்மன் அல் சவாஹிரி.

அவர் 1951 ஜுன் 19ல் பிறந்தார். மாதி நகரின் மேட்டுக்குடி மக்கள் வசிக்கும் பகுதியில் வளர்ந்தவர்.

இவ்வாறான அறிவு மற்றும் செல்வப் பாரம்பரியம் மிக்க ஒரு குடும்பத்தில் பிறந்தவர் ஏன் வன்முறைகளைத் தெரிவு செய்தார் என்பது தான் ஆச்சரியமான கேள்வி.

இதற்கான மூல காரணம் முஸ்லிம்களையும் முஸ்லிம் நாடுகளையும் அழித்தொழிப்பதற்காக அமெரிக்காவும் அதன் ஐரோப்பிய நேச அணிகளும் ஏனைய நேச அணிகளும் மேற்கொண்ட அக்கிரமங்கள், சூழ்ச்சிகள் மற்றும் ஆக்கிரமிப்புக்கள் என்பனதான்.

ஜெர்மனின் நாஸிக்களுக்கு அடுத்தபடியாக மனித குலத்துக்கு மாபெரும் குற்றங்களை இழைத்துக் கொண்டிருக்கும்.

இஸ்ரேலின் இருப்பைத் தக்க வைத்துக் கொள்ள அந்த நாட்டை கண்மூடித்தனமாக ஆதரித்துக் கொண்டு முஸ்லிம்களுக்கும் முஸ்லிம் நாடுகளுக்கும் எதிரான பாரிய சதிகளில் அவர்கள் ஈடுபட்டு வந்தனர்.

இந்தக் குற்றச் செயல்களின் பங்காளிகளாக அரபு ஆட்சியாளர்களும்
இருந்ததை சவாஹிரி புரிந்து கொண்டார். இந்த அரபு ஆட்சியாளர்கள் எல்லோருமே அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகளால் ஆட்சி பீடங்களில் அமர்த்தப்பட்டவர்கள்.

முஸ்லிம்களுக்கு எதிரான குற்றங்களுக்காக ஏவி விடப்பட்டவர்கள் என்பதையும் சவாஹிரி நன்கு உணர்ந்து கொண்டார்.

தன்னுடைய 14வது வயதில், உலகின் பிரதான மற்றும் பிரபலமான இஸ்லாமிய இயக்கமாக இருந்த இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பில் அவர் இணைந்து கொண்டார்.

அந்த இயக்கத்தின் மிகவும் செல்வாக்கு மிக்க புத்திஜீவியாக இருந்த செய்யித் குதுபின் கருத்துக்களால் கவரப்பட்ட சவாஹிரி 1960 களில் தனது மிகவும் இளமை பருவத்திலேயே இஸ்லாமிய அரசியல் இயக்கத்தோடு சேர்ந்து செயற்படத் தொடங்கினார்.

உலகம் ஒரு அறியாமை காலத்தக்குள் பிரவேசித்தள்ளதாக செய்யித் குதுப் கருதினார். தெய்வீக இறை சட்டங்களுக்கு எதிராக, மதச்சார்பற்ற மனிதச் சட்டங்களுக்கு ஆதரவாக மக்கள் கிளர்ச்சிகளில் ஈடுபட்டுள்ளதாக அவர் கருதினார்.

இதனால் உண்மையான முஸ்லிம் சமூகம் இல்லாமல் போய் விட்டது என்றும் அவர் கருதினார். செய்யித் குதுபின் எழுத்துக்கள் பின் லாடனைப் போலவே சவாஹிரி மீதும் பெரும் செல்வாக்கு செலுத்தின.

1966ல் செய்யித் குதுப் கொல்லப்பட்ட பின் குதுபின் தூரநோக்கை தனது
வாழ்வின் இலட்சியமாக எடுத்துக் கொண்டார் சவாஹிரி.

1965ல் செய்யித் குதுப் மீது பிரயோகிக்கப்பட்ட வன்மையான சித்திரவதைகள், அதனைத் தொடர்ந்து அவர் கொல்லப்பட்டமை என்பன அவரை பெரிதும் பாதித்தன.

தனது வாழ்வின் முன்மாதிரியாக தான் எடுத்துக் கொண்ட ஒரு நபர் இவ்வாறு கொல்லப்பட்டதால் அவரது கருத்துக்களையும் கொள்கைகளையும் அமுலாக்க தனது உயிரைக் கூட தியாகம் செய்யும் முடிவுக்கு தள்ளப்பட்டார் சவாஹிரி.

இஸ்ரேலுடன் சமாதான உடன்படிக்கை ஒன்றை செய்து கொண்டமைக்காக பெரும்பாலான மக்களால் துரோகி என வர்ணிக்கப்பட்ட அன்றைய எகிப்தின் ஜனாதிபதி அன்வர் சதாத் 1981இல் கொல்லப்பட்ட பின் அது தொடர்பான விசாரணைகளின் போது நீதிமன்றக் கூண்டில் நின்றவாறு “நாம் ஏற்கனவே பல தியாகங்களை புரிந்து விட்டோம்.

இஸ்லாத்தின் வெற்றி நிலைநிறுத்தப்படும் வரை இன்னும் பல திhகங்களை செய்யவும் தயாராக இருக்கின்றோம்” என்று கூச்சலிட்டவர் தான் சவாஹிரி.

அன்வர் சதாத் கொலையோடு தொடர்புடையவர்கள் என்ற பெயரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு: சித்திரவதை செய்யப்பட்ட நூற்றுக் கணக்கானவர்களில் சவாஹிரியும் ஒருவர்.

அவர் மூன்று வருடங்கள் சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.

சிறையில் இருந்து விடுதலையான பின் அவர் பாகிஸ்தானுக்கு விஜயம் செய்தார். அங்கு அவர் ஒரு மருத்துவராகப் பணியாற்றி தாக்குதல்களில் காயம் அடைந்த முஜாஹிதீன் போராளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தார். இந்தக் காலப்பகுதியில் தான் அவருக்கு பின்லாடனுடன் தொடர்புகள் ஏற்பட்டன.

1989ல் சோவியத் சார்பு அரசின் வீழ்ச்சிக்குப் பின் அல்குவைதாவின் அதே சிந்தனைகளைக் கொண்ட தலிபான்கள் வசம் ஆப்கானிஸ்தான் வீழ்ந்தது.

இஸ்லாமிய பூமியில் வெளிநாட்டுப் படைகளின் பிரசன்னம் இருக்கக் கூடாது என்பதில் பின் லாடன் மற்றும் சவாஹிரி போன்றோர் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தனர்.

பலஸ்தீனத்தில் நீடிக்கும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பையும் அவர்கள் தீவிரமாக எதிர்த்தனர். இந்த நிலைமை தமது பிரசாரத்தை விரிவாக்குவதற்கான ஒரு நியாயத்தை அவர்களுக்கு வழங்கியது.

1998ல் இருவரும் ஒரு கூட்டுப் பிரகடனத்தை வெளியிட்டனர். “ஜெரூஸலத்தில் உள்ள அல் அக்ஸா பள்ளிவாசலை விடுவிக்கும் வகையிலும், புனித மக்காவை அதன் ஆட்சியாளர்களின் பிடியில் இருந்து விடுவிக்கும் வகையிலும், அமெரிக்கா மற்றும் அதன் நேச அணிகள் சார்பான சிவிலியன்கள் மற்றும் இராணுவத்தினரை கொலை செய்வதும், அதேபோல் இஸ்லாமிய பூமிகளில் இருந்து அந்த இராணுவங்களை வெளியேற்ற உத்தரவிடுவதும், தோற்கடிப்பதும்,
அவர்கள் முஸ்லிம்களை அச்சுறுத்த முடியாமல் செய்வதும் ஒவ்வொரு முஸ்லிமினதும் தனிப்பட்ட கடமையாகும்” என்று அந்தப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டது.

செப்டம்பர் 11 தாக்குதலின் பின் சவாஹிரியை கைது செய்வதற்குத் தேவையான புலனாய்வுத் தகவல்களை வழங்குபவர்களுக்கு 25 மில்லியன் அமெரிக்க டொலர் சன்மானமாக வழங்கப்படும் என அமெரிக்க நிர்வாகம் அறிவித்தது.

இந்த அறிவிப்பு வெளியான பின்னர் கடந்த பத்து வருட காலத்தில் அல்குவைதாவின் செல்வாக்கு உலகம் முழுவதும் வியாபித்துள்ளது.

இஸ்ரேலில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தை டெல் அவிவ்வில் இருந்து ஜெரூஸலத்துக்கு மாற்ற எடுக்கப்பட்ட முடிவானது, பலஸ்தீன தரப்போடு இணக்கப்பாடு மற்றும் சமாதானம் என்பனவற்றை ஏற்படுத்த எடுக்கப்பட்ட முயற்சிகள் தோல்சவி அடைந்துள்ளன என்பதற்கான

சான்றாகவே காணப்படுகின்றன. இதனால் புனிதப் போருக்கான பிரகடனத்தையும் சவாஹிரி விடுத்திருந்தார்.

டெல் அவிவ்வும் முஸ்லிம்களுக்கான பூமி என்ற தலைப்பில் அவர் வெளியிட்டிருந்த ஐந்து நிமிட நேர விடியோவில் பலஸ்தீன அதிகார சபையை அவர் பலஸ்தீனத்தின் விற்பனையாளர்கள் என வர்ணித்திருந்தார்.

தனது சகாக்கள் இந்த நிலைக்கு எதிராக ஆயுதம் ஏந்த வேண்டும் எனவும் அவர் கேட்டிருந்தார். அமெரிக்காவை முஸ்லிம்களின் முதலாவது எதிரி என பின்லாடன் அடையாளப்படுத்தி இருந்தார்.

பலஸ்தீனத்தில் யதார்த்த நிலையை உணரும் வரையிலும் இஸ்லாத்தின் பூமியில்
இருந்து அந்நிய நாட்டுப் படைகள் யாவும் வெளியேறும் வரையிலும் பாதுகாப்பு என்பதை கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாது என அவர் சத்தியம் செய்திருந்தார் என்று குறிப்பிட்டுள்ள சவாஹிரி, இஸ்ரேலை அங்கீகரித்துள்ள ஐக்கிய நாடுகள் சபைக்குள் பிரவேசித்ததன் மூலம் முஸ்லிம்களின் நலன்களைப் பேணுவதில் இஸ்லாமிய நாடுகள் தோல்வி அடைந்துள்ளன என்றும் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் கூட எந்தக் காரணமும் இன்றி காஸா பிரதேசம் மீது இஸ்ரேல் மூர்க்கத்தனமான விமானத் தாக்குதலை நடத்தி உள்ளது. இதில் 44க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இதில் 15 பேர் சிறுவர்கள். நான்கு பேர் பெண்கள். இன்னும் பலர் வயது முதிர்ந்தவர்கள்.

மேலும் 311க்கும் அதிகமானவர்கள் காயம் அடைந்துள்ளனர். இவற்றுக்கு அப்பால் பல கட்டிடங்கள் தகர்க்கப்படடுள்ளன.

நீர் மற்றும் மின்சார விநியோக வசதிகள் சீர்குலைக்கப்பட்டுள்ளன. ஆனால் வழமைபோல் இஸ்லாமிய ஜிஹாத் இராணுவ இலக்குகளையும் அதில் இருந்த போராளிகளையுமே தாங்கள் இலக்கு வைத்ததாக இஸ்ரேல்
அறிவித்துள்ளது.

இவ்வாறு தொடர்ந்து அட்டூழியம் புரியும் இஸ்ரேலை அமெரிக்கா என்றாவது
பயங்கரவாதிகளாகப் பார்த்துள்ளதா? பயங்கரவாதிகள் என்று குறிப்பிட்டுள்ளதா? இல்லை மாறாக அதன் தலைவர்களுக்கு இராஜதந்திர அந்தஸ்த்தை வழங்கி செங்கம்பளம் விரித்து வரவேற்கின்றது.

யுத்தக் குற்றங்களை அவர்கள் தொடர்ந்து புரிவதற்குத் தேவையான இராணுவ, நிதி மற்றும் பொருளாதார உதவிகளை தொடர்ந்து வழங்கி வருகின்றது. இது தான் அமெரிக்கப் பாணியிலான பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தமாகக் காணப்படுகின்றது

Popular

More like this
Related

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...