2018 ஆம் ஆண்டு, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இலஞ்சம் வழங்க முயன்றமை தொடர்பான விடயங்களை பல சர்ச்சைக்குரிய குரல் ஒலிப்பதிவுகள் வெளிப்படுத்தியிருந்தன.
அது தொடர்பாக ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா நிறுவனமானது 2018 நவம்பர் மாதம் 05 ஆம் திகதியன்று இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடம் ஓர் முறைப்பாட்டினை மேற்கொண்டது
இதனையடுத்து, அன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இலஞ்சம் வழங்குவது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட அறிக்கையினை மையப்படுத்தி ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா நிறுவனமானது 2018 டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி மீண்டும் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடம் ஓர் கடிதத்தினை சமர்ப்பித்திருந்தது.
குறித்த முறைப்பாட்டினை மேற்கொண்டு நான்கு வருடங்கள் நிறைவடைந்த நிலையில், இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவானது முறைப்பாடு தொடர்பிலான ஆணைக்குழுவின் தீர்மானத்தினை குறிப்பிட்டு ஓர் கடிதத்தினை அனுப்பி வைத்துள்ளது.
அதனடிப்படையில், போதிய தகவல்கள் வெளிப்படவில்லை என்ற காரணத்தினால் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவானது குறித்த முறைப்பாடு தொடர்பிலான மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்வதில்லை என தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளது.