உலகில் நடைபெறும் போராட்டங்கள் அமைதியானவை அல்ல என்றும், ஒரு நாட்டில் வஞ்சகர்களை விரட்டுவது தியானம் மற்றும் தவம் செய்வதன் மூலம் முடியாது என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
அதேநேரம், அரசியலமைப்பின் பிரகாரம் போராடுவது சாத்தியமில்லை என தெரிவித்த பொன்சேகா, எமது நோக்கங்களை அடைய வெளியில் சென்று போராட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இணையத் திட்டமொன்றில் இணையும் போதே சரத் பொன்சேகா மேற்கண்டவ விடயங்களை தெரிவித்துள்ளார்.
மேலும், போராட்டத்தின் போது உயிர் தியாகம் செய்ய வேண்டும் என்றால் அதற்கும் தயாராக வேண்டும் என்றும் அப்போது உயிர் தியாகம் செய்தவர்களை மக்கள் மாவீரர்களாக கொண்டாடுவார்கள் என்றும் கூறினார்.
போராட்டக்காரர்களை சுட்டுக் கொன்றால் 20 முதல் 25 பேர் வரை இறக்க நேரிடும் இதுபோன்ற தாக்குதல்களால் போராட்டத்தை நிறுத்த முடியாது என்றும் கூறினார்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில் சர்வதேச சமூகம் தலையிட்டு வான்வெளியில் இருந்து வந்து இராணுவத்தை தாக்கி தலைமையகத்தை கூட அழிக்க முடியும் எனவும் மத்திய கிழக்கு நாடுகளில் இதற்கான உதாரணங்கள் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், மக்கள் மீது தாக்குதல் நடத்தினால் இது போன்ற சம்பவங்கள் நடக்க வேண்டும் என்று தான் விரும்புவதாகவும் அவர் கூறினார்.
மக்கள் மீது தாக்குதல் நடத்துவது தொடர்பான கட்டளைகளை பின்பற்ற வேண்டாம் என தாம் பலமுறை இராணுவத்திடம் வலியுறுத்தியதாகவும், இராணுவம் அரசியலமைப்பை பாதுகாக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
போராட்டத்திற்குள் பல்வேறு குழுக்கள் இருப்பதாகவும், பணம் பெறும் குழுக்களும் இருப்பதாகவும் அரசியல்வாதிகளுடன் இரவோடு இரவாக போராட்ட களத்தில் நிற்கும் குழுக்களும் இருப்பதாக பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.
ஆட்சியாளர்கள் ஊழல் செய்தால் தூக்கி எறிய வேண்டும் என்றும் போராட்டத்துக்காக யாருடனும் பேசத் தயார் என்றார். கட்சி சார்பற்ற போராட்டம் அரசியல் நிகழ்ச்சி நிரலின்றி ஆரம்பிக்கப்பட்ட போராட்டத்தின் ஊடாக எதிர்காலத்தில் தலைவர்கள் உருவாகுவார்கள் எனவும் தெரிவித்தார்.