சோவியத் ஒன்றியத்தின் இறுதித் தலைவரான மிகாயில் கொர்பசேவ் தனது 91 ஆவது வயதில் நேற்றுக் காலமானார்.
நீண்ட காலமாக நோய் வாய்ப்பட்டிருந்த நிலையில் அவர் மரணமடைந்ததாக மொஸ்கோ வைத்தியசாலை நேற்று அறிவித்திருந்தது.
1985 இல் சோவியத் ஒன்றியத்தின் தலைவராகிய கொர்பசேவ். 1991 இல் சோவியத் ஒன்றியம் உடையும் வரை அதன் அதிபராகத் திகழ்ந்தார்.
நீண்ட காலமாக மேற்குலகுடன் நிலவிய பனிப்போரை முடிவுக்குக் கொண்டு வந்தமை உலக அமைதிக்கு அவர் செய்த பாரிய பங்களிப்பாகக் கருதப்படுகிறது.
கிழக்குக்கும் மேற்குக்கும் இடையிலான முறுகலை முடிவுக்குக் கொண்டு வந்ததன் விளைவாக சோவியத் ஆதிக்கத்தில் இருந்த பல கிழக்கைரோப்பிய தேசங்கள் தனி நாடுகளாக தம்மை விடுவித்துக் கொண்டன. அதன் பின்னர் நவீன ரஷ்யா உருவாவதற்கும் அவர் காரணமாக இருந்தார்.
கொர்பசேவின் இழப்பு தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், தூரதரிசனம் மிக்க மனிதர் என வர்ணித்துள்ளார். தேவையான மாற்றங்களை உள்வாங்கக் கூடிய ஆர்வம் உள்ளவராக அவர் இருந்தார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வரலாற்றை நேரான திசையில் மாற்றியமைத்த தனிமனிதரென்றால் அது கொர்பசேவ் தான் என மொஸ்கோவுக்கான முன்னாள் அமெரிக்கத் தூதுவரும் அரசியல் ஆய்வாளருமான மைக்கல் மக்போல் தெரிவித்துள்ளார்.
விவசாயக் குடும்பத்தில் பிறந்த மிகாயில் கொர்பசேவ், கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளராகவிருந்து தனது 54 ஆவது வயதில் சோவியத் யூனியனின் தலைவரானார்.
ஸ்டாலினுக்குப் பின்னரான தலைமுறையிலிருந்து தலைமைப் பதவியை ஏற்ற இவர் கம்யூனிஸத்தை நடைமுறைப்படுத்துவதில் கிளாஸ்நோஸ்ட், பெரெஸ்ட்ரொய்க்கா சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தார்.
பனிப்போரை முடிவுக்குக் கொண்டு வந்தமைக்காக 1990 ஆம் ஆண்டுக்கான நோபல் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். ஆனாலும் சோவியத் யூனியனை பிளவுபடுத்தியவர் என்ற கருத்தில் இன்றும் அவரை விமர்சிப்பவர்களும் சோவியத் தேசத்தில் இருக்கின்றனர்.
நாட்டுக்கும் ஐரோப்பாவுக்கும் உலகுக்கும் தேவையான சீர்திருத்தத்தை ஆரம்பித்தவனாக என்னை நான் காண்கிறேன் என 1992 இல் பதவி விலகும் போது அவர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டிருந்தார்.
மேற்குடனான பனிப்போரை முடிவுக்குக் கொண்டு வந்தமைக்காக நோபல் விருது பெற்ற மிகாயில் கொர்பசேவ் மரணிப்பதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பிருந்தே ரஷ்யா உக்ரைனின் மீது போர் தொடுத்து மேற்குடனான முறுகலை மீளவும் ஆரம்பித்திருந்தது.
1999 இல் காலம் சென்ற அவரது மனைவி ரைஸாவுக்குப் பக்கத்தில் மொஸ்கோவின் நொவோடவிச்சி மயானத்தில் அவரது நல்லடக்கம் இடம் பெறவுள்ளது.