7 நகர சபைகளை மாநகர சபைகளாகவும் 3 பிரதேச சபைகளை நகர சபைகளாகவும் மாற்ற அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இன்று (ஆகஸ்ட் 9) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பான பிரேரணையை மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் தினேஸ் குணவர்தன முன்வைத்ததாக பந்துல குணவர்தன தெரிவித்தார்.
இதன்படி, அதற்கமைய 341 உள்ளூராட்சி மன்றங்கள் காணப்படும் நிலையில், அந்தந்த காலப்பகுதிகளில் குறித்த பிரதேசங்களில் அதிகரிக்கும் சனத்தொகைக்கு ஏற்ப அடிப்படை வசதிகள் , மக்களின் தேவைப்பாடுகள் அதிகரிப்பு என்பவற்றை ஆராய்ந்து குழுவொன்றினால் முன்மொழியப்பட்ட பரிந்துரைகளை கவனத்தில்கொண்டு, களுத்துறை, வவுனியா, புத்தளம், மன்னார், கேகாலை, அம்பாறை, திருகோணமலை ஆகிய நகர சபைகளை மாநகர சபைகளாகவும் கிளிநொச்சி, முல்லைத்தீவு, மொனராகலை ஆகிய பிரதே சபைகளை நகர சபைகளாக தரமுயர்த்தவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இதேவேளை, மேல் மாகாணத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை கருத்திற்கொண்டு மாநகர சபைகள், மற்றும் பிராந்திய சபைகளுக்கான அளவுகோல்களை தயாரிக்குமாறு ஜனாதிபதி அறிவித்துள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.