அண்மையில் ஏற்பட்ட கடும் வெள்ளப் பாதிப்பினால் நாவலப்பிட்டிய பிரதேசம் மிக மோசமாக பாதிப்படைந்தது யாவரும் அறிந்த விடயமே.
இந்தப் பாதிப்பின் காரணமாக அப்பகுதி வாழ் மக்கள் உடமைகளை இழந்து, உயிர்ச் சேதங்களுக்கு ஆளாகி, தம்முடைய வாழ்விடங்களை இழந்து வாழ்வாதாரங்களுக்கு கஷ்டப்படக் கூடிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
இவர்களுக்கான பல்வேறு மனிதாபிமான உதவிகளை அப்பகுதி வாழ் மக்கள் உட்பட நாட்டின் பல பகுதிகளையும் சேர்ந்த மக்களும், அமைப்புக்களும் உதவிகளை செய்து கொண்டிருக்கின்றார்கள்.
அந்தவகையில் நாவலப்பிட்டிய புனித மரியாள் கல்லூரியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சீருடை தைப்பதற்கு அவசியமான ரூ.86,000.00 பணத்தொகையினை, கண்டி எனசல்கொல்ல மத்திய கல்லூரி மாணவ தலைவர்களால் புனித மரியாள் கல்லூரி மாணவ தலைவர்களுக்கு உத்தியோக பூர்வமாக வழங்கும் வைபவம் நேற்றைய முன்தினம் (25) நடைப்பெற்றது.
நாவலப்பிட்டிய புனித மரியாள் கல்லூரி மாணவர்களுக்கு உதவும் நோக்கில், கண்டி எனசல்கொல்ல மத்திய கல்லூரி மாணவத் தலைவர்களால் “தேவையுடையவர்களுக்கு உதவி செய்யுங்கள். அதன் மூலம் நாளை நன்மைகளை பெற்றுக் கொள்ளுங்கள்” என்ற தொனிப்பொருளில் நிதி திரட்டும் திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
அவ்வாறு திரட்டப்பட்ட நிதியே நேற்றைய முன்தினம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.