(File Photo)
தமது நாட்டிலிருந்து இந்தியாவிற்கு அகதிகளாகத் தஞ்சமடைந்துள்ள இலங்கையர்களை மீள்குடியேற்றுவதற்கான நடவடிக்கைகளை துரிதமாக முன்னெடுப்பதற்காக ஜனாதிபதி செயலாளர் சமன் ஏகநாயக்க குழுவொன்றை உருவாக்கியுள்ளார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் சந்திமா விக்ரமசிங்க தலைமையில் வெளிவிவகார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி, பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி மற்றும் நீதியமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஆகியோர் இந்தக் குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.
யுத்தம் காரணமாக இந்தியாவிற்கு அகதிகளாக தஞ்சமடைந்துள்ள இலங்கையர்களை மீள அழைத்து வருமாறு ஈழ அகதிகள் புனர்வாழ்விற்கான அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளதுடன், ஜனாதிபதி அலுவலகத்தில் செப்டம்பர் 5 ஆம் திகதி திங்கட்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் தமிழ்நாட்டில் அகதிகளாக வாழும் சுமார் 58,000 இலங்கையர்களில் வெறும் 3,800 பேர் மட்டுமே தற்போது தங்கள் சொந்த நாட்டுக்குத் திரும்பத் தயாராக இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தத் துறையில் உள்ள முயற்சிகள் சென்னையில் உள்ள இலங்கை துணை உயர்ஸ்தானிகர் அலுவலகத்தால் ஒருங்கிணைக்கப்படுகின்றன.