ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரித்தானியாவில் உள்ள புலம்பெயர் இலங்கையர்களை சந்தித்து இலங்கையில் உருவாக்கப்பட்டுள்ள புதிய முதலீட்டு வாய்ப்புகளில் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி இங்கிலாந்து சென்றிருந்தார்.
ஜனாதிபதி ரணில் இங்கிலாந்தின் புதிய மன்னரையும் சந்தித்து, செப்டம்பர் 20, செவ்வாய்கிழமை அவருடன் உரையாடல்களை பரிமாறிக்கொண்டார்.
மேலும் புதிய அரசாங்கத்தின் எதிர்கால திட்டங்கள் குறித்து இதன்போது விளக்கமளித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இலங்கையில் உள்ள புதிய முதலீட்டு வாய்ப்புகளில் இணைந்து கொள்ளுமாறு பிரித்தானிய வாழ் இலங்கையர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
அத்துடன், புலம்பெயர் அலுவலகப் பணிகள் உள்ளிட்ட இலங்கையில் உள்ள புதிய முதலீட்டு வாய்ப்புக்களைப் பயன்படுத்திக் கொள்ளுமாறும் வடக்கில் காணப்படும் காணிப்பிரச்சினை, காணாமற்போனவர்கள் தொடர்பான பிரச்சினை ஆகியவற்றுக்குத் தீர்வு காண வேண்டும் என்றும் அதிகாரப் பகிர்வின் சில அடிப்படைகள் குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.
பிரித்தானியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தக் கூட்டத்தில் பிரித்தானிய வாழ் இலங்கை வர்த்தகர்கள், முதலீட்டாளர்கள், தொழில் வல்லுநர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.