முன்னர் பிரான்ஸின் காலணித்துவத்தின் கீழ் இருந்த வட ஆபிரிக்காவின் முஸ்லிம்
நாடுகளில் ஒன்றான டுனீஷியா 2010 -2011 காலப்பகுதியில் ஏற்பட்ட அரபு வசந்த
போராட்டத்தின் பிறப்பிடமாக இருந்த நாடாகும்.
அரபு வசன்த போராட்டம் இந்தப் பிராந்தியத்தில் ஏற்படுத்திய எதிர்ப்பலைகள் காரணமாக பல நாடுகளில் ஆட்சிகள் வீழ்ந்தன.
குறைந்தபட்சம் நான்கு அரபு நாடுகளின் அன்றைய ஜனாதிபதிகள் இதனால் பதவி இழக்க நேரிட்டது.
2011ல் டுனீஷியாவில் ஏற்பட்ட புரட்சி காரணமாக அந்த நாட்டின் ஜனாதிபதியாக இருந்த சர்வாதிகாரி சின் அல் ஆபிதீன் பின் அலியும் பதவியில் இருந்து விரட்டப்படார்.
அன்று முதல் மக்கள் பல ஜனநாயக உரிமைகளை வென்றெடுத்தனர்.
இருந்தாலும் டுனீஷியாவின் இன்றைய ஜனாதிபதி கயிஸ் செய்த் இப்போது
ஜனநாயகத்தை மீண்டும் நசுக்கி சர்வாதிகாரத்தை படர விடத் தொடங்கி உள்ளார்.
இவருக்கு பெரும்பாலும் டுனீஷியாவின் காலணித்துவ எஜமான் பக்க பலமாக
இருப்பதாகவே தெரிகின்றது.
வழமைபோல் அமெரிக்கா, பிரிட்டன், இஸ்ரேல் என்பனவும் இந்த பின்புலத்தில் இருக்கின்றன.
மத்திய கிழக்கில் அல்லது வட அபிரிக்காவில் எந்த ஒரு நாட்டிலும் ஜனநாயகம் மலர்ந்து விடக் கூடாது என்பதில் மிகவும் அக்கறையோடு செயற்படும் சவூதி அரோபியா, ஐக்கிய அரபு அமீரகம் என்பனவும் வழமைபோல் டுனீஷிய மக்களுக்கு எதிரான நாசகார சக்திகளுக்கு நேசக் கரம் நீட்டி உள்ளன.
அதிகாரத்தில் தனது பலத்தை தக்க வைத்துக் கொள்வதற்கான கணிசமான
நடவடிக்கைகளை ஜனாதிபதி கயிஸ் செய்த் கையாண்டு வருகின்றார். இதற்காக அவர் அரசியல் சாசனத்தை ஆயுதமாகப் பயன்படுத்த முடிவு செய்துள்ளார்.
அரசின் நடவடிக்கைகள் பற்றி கேள்வி எழுப்பும் மக்களுக்கான உரிமைகளை முழுமையாக நசுக்கும் வகையிலான புதிய அரசியல்யாப்பு ஒன்றை அறிமுகம் செய்ய அவர் முயற்சித்து வருகின்றார்.
இதன் காரணமாக அந்த நாடு இன்று மிகப் பெரிய அரசியல்சாசன நெருக்கடிக்கு முகம் கொடுத்தள்ளது. இதை ஒரு சதி என்றும் அதிகாரத்துக்கான நெருக்குதல் என்றும் கூட பலர் வர்ணித்துள்ளனர்.
தற்போது காணப்படும் 2021-2011 டுனீஷிய அரசியல் நெருக்கடி
ஜனாதிபதி கயிஸ் செயித்துக்கும், இஸ்லாமிய ஆதரவு பிரதிநிதிகளைப் பெரும்பாலும் கொண்ட என்ஹாடா கட்சி பிரதிநிதிகளுக்கும் இடையில் வலுவடைந்து வருகின்றது.
2021 ஜுலை 25ல் பிரதம மந்திரி ஹிச்சம் மெச்சிச்சியை பதவியில் இருந்து நீக்கிய
ஜனாதிபதி, மக்கள் பிரதிநிதிகள் சபையின் செயற்பாடுகளை இடைநிறுத்தியதோடு இந்த நெருக்கடி தொடங்கியது.
தனது கரங்களுக்குள் மேலதிக அதிகாரத்தைக் கொண்டு வரும்
வகையில் நாட்டின் அதி உயர் நீதித்துறை சபையையும் ஜனாதிபதி கலைத்துள்ளார்.
அதிஉயர் நீதித்துறை சபை மற்றும் நாட்டின் தேர்தல் ஆணையகம் என்பன இப்போது ஜனாதிபதியின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.
டுனீஷிய பாராளுமன்றத்தின் சபாநாயகர் பிரபல இஸ்லாமிய போக்கு என்ஹாடா
கட்சியைச் செர்ந்த ராஷெட் கெனோச்சி ஜனாதிபதியின் நடவடிக்கைகள்
ஜனநாயகத்துக்கு எதிரான தாக்குதல்கள் என வன்மையாகச் சாடி உள்ளார்.
மக்கள் இதற்கு எதிராக வீதிகளில் இறங்க வேண்டும் எனவும் அவர் கேட்டுள்ளார். இதனை அடுத்து ஜனாதிபதியின் செயற்பாடுகளுக்கு எதிராக நாடு முழுவதும் ஆங்காங்கே எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும் தலைதூக்கி உள்ளன.
டுனீஷிய ஜனாதிபதியின் முடிவுகளை பல்வேறு மனித உரிமை அமைப்புக்களும்
கண்டித்துள்ளன. சர்வாதிகாரப் போக்கை ஸ்தாபிப்தற்கான ஒரு சதி முயற்சியாகவே ஜனாதிபதியின் செயற்பாடுகளை அவதானிக்க வேண்டி உள்ளது என்றும் அவை சுட்டிக்காட்டி உள்ளன.
பாராளுமன்றம் கலைக்கப்பட்டது முதல் ஜனாதிபதியின் அதிகாரத்தின் கீழ் விடுக்கப்படும் உத்தரவுகளுக்கு அமையவே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இதனால் மக்கள் மிகவும் கஷ்டப்பட்டு வென்றெடுத்த ஜனநாயக உரிமைகள் யாவும் இப்போது மீண்டும் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளன. ஜனநாயக ரீதியான உரிமைகளை நசுக்கி பொருளாதார ரீதியான நெருக்கடியையும் உருவாக்கி அவற்றின் மூலம் தனது அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ளும் ஒரு விஷப் பரீட்சையில் கயிஸ் செயித் இறங்கி உள்ளார்.
2011 டுனீஷியா புரட்சிக்குப் பின் உருவாக்கப்பட்ட ஜனநாயக பண்புகளைக் கொண்ட நாட்டின் அரசியல் சாசனத்தை தற்போதைய ஜனாதிபதி தனக்கு ஏற்றவாறு திருத்தி எழுதி உள்ளார்.
அதிகாரப் பரவலாக்கத்தின் எண்ணக்கருவை இந்தப் புதிய அரசியல் யாப்பு முற்றாக மறுத்துரைக்கின்றது. மக்களுக்கு உள்ள கேள்வி எழுப்பும் உரிமை, மனித உரிமைகள் மீதான உத்தரவாதம் என்பனவற்றை முற்றாக மறுத்து புரட்சிக்கு முன்னர் பதவியில் இருந்த பென் அலியின் பாணியிலான மனித உரிமை மீறல்களுக்கு மீண்டும் வித்திடப்பட்டுள்ளது.
2021 செப்டம்பர் 22ல் அதிகாரங்களை முழு அளவில் தன்வசமாக்கும் உத்தரவை
ஜனாதிபதி பிரகடனம் செய்துள்ளார்.
அதில் அரசியல் யாப்பிலும் அரசாங்கத்திலும் மாற்றம் செய்யும் அதிகாரங்களும், பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரமும் அடங்கும். புதிய அரசியல் யாப்பின் வரைபில் அபாயகரமான திருப்பு முனைகள் காணப்படுவதாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. தனிமனித ஆட்சியை திடப்படுத்தி அதன் மூலம்
டுனீஷியாவில் புதிதாக மலர்ந்த ஜனநாயகத்தை உத்தியோகப்பூர்வமாகக் கசக்கி,
சட்டபூர்வமாக ஒரு சர்வாதிகார ஆட்சியை நோக்கி நகரும் திட்டம் புலப்படுகின்றது.
சர்வ வல்லமை மிக்க ஒரு ஜனாதிபதி ஆட்சி முறையை மீண்டும் ஸ்தாபித்து, நீதித்துறையையும் தன்வசமாக்கி ஆட்சியை தொடருவதே இன்றைய ஜனாதிபதியின் திட்டம்.
ஆனால் இவ்வாறான ஒரு ஆட்சிமுறைக்கு எதிராகத் தான் அந்த நாட்டு மக்கள் பல தசாப்தங்களாகப் போராடி மாற்றங்களை ஏற்படுத்தினார்கள் என்பது இங்கே
குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
2021 ஜுலை 25ல் முறைசாரா விதத்தில் டுனீஷியாவின் பலம் பொருந்திய பாதுகாப்பு தரப்பினரின் பெரும்பாலான ஆதரவோடு அவர் பதவியைக் கைப்பறியது முதல் ஒரு துடிப்பான ஜனநாயக அரசியல் சூழலின் அத்திவாரத்தை மெதுவாகவும் சீராகவும் அழித்துள்ளார். டுனீஷிய மக்கள் மிகவும் கஷ்டப்பட்டு பல தியாகங்களைப் புரிந்து அர்ப்பணத்தோடு இந்தத் தூண்களை மீண்டும் நிறுவி இருந்தனர்.
பாராளுமன்றத்தை இழுத்து மூடிய பின் கண்ணுக்குப் புலப்படாத மிகவும் அச்சமானதோர் சூழலை அவரின் படைகள் ஏற்படுத்தி உள்ளன.
அது இப்போது அவருடைய அரசியல் எதிரிகளின் வாய்களை மூட வைத்துள்ளது. பொது அரங்கில் இருந்து அவர்களை தனிமைப்படுத்தியும் உள்ளது.
இவ்வாறு அடக்கி ஒடுக்கப்பட்ட அரசியல் எதிர்க்கருத்து உள்ளவர்களின் குரல்கள் தேசிய ஊடகங்களில் இருந்தும் முற்றாக நீக்கப்பட்டுள்ளன.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும், சட்டத்தரணிகளும், சிவில்
செயற்பாட்டாளர்கள் பலரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
2022 ஜுலை 25ல் தனது புதிய அரசியல் யாப்புக்கான தேசிய மட்ட சர்வஜன
வாக்கெடுப்பை அவர் நடத்தினார். 27 சதவீதமான மக்கள் மட்டுமே அதில் வாக்களித்தனர்.
ஒரு ஜனாதிபதியின் தனி அதிகாரங்களையும் கடந்து செல்லும் வகையில் இந்த புதிய யாப்பு அமைந்துள்ளது.
ஜனாதிபதியின் நடவடிக்கைகளைப் பற்றி கேள்வி எழுப்பும் அல்லது சோதித்துப் பார்க்கும் சட்ட ரீதியான மற்றும் சட்டவாக்க அல்லது பாராளுமன்றம் மூலமான எல்லா உரிகைளையும் அது இரத்துச் செய்துள்ளது.
புதிய அரசியல் யாப்பின் மூலம் பாராளுமன்றம் ஊடாக ஜனாதிபதிக்கு எதிராக இம்பீச்மென்ட் அல்லது அரசியல்
குற்றப் பிரேரணையோ அல்லது வேறு நடவடிக்கைகளோ எடுப்பது முற்றாகத்
தடுக்கப்பட்டுள்ளது.
புதிய அரசியல் யாப்பை வரைகின்ற போது எதிர்க்கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்களை அவர் முற்றாகப் புறக்கணித்துள்ளார். தனது பிரதான அரசியல் எதிரியான ராஷட் கெனோச்சியை அவர் பல துன்புறுத்தலுக்கு ஆளாக்கி உள்ளார். அவரின் வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன.
இதே நிலைமை எதிர்க்கட்சியின் ஏனைய முக்கிய பிரமுகர்களுக்கும் ஏற்பட்டுள்ளது. அவர்கள் எல்லோர் மீதும் நாணயச்சலவை குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன.
ஜுலை 25 சர்வஜன வாக்கெடுப்பை பல எதிர்க்கட்சிகள் புறக்கணித்துள்ளன. அரசியல் சாசனத்தின் வரைபு தொடர்பான செயற்பாடுகள் எல்லாமே சட்ட விரோதமானவை என்ற வாதத்தை அவை முன்வைத்துள்ளன.
இணக்கப்பாட்டுக்கோ அல்லது விட்டுக் கொடுப்புக்கோ இருதரப்பும் எந்த அறிகுறியையும் வெளியிடாத நிலையில் நெருக்கடி நிலை தொடர்ந்து நீடிக்கின்றது.
இதனால் ஏற்கனவே மோசமான நிலையில் இருக்கின்ற
பொருளாதாரம் மேலும் பல நெருக்கடிகளை எதிர்நோக்கி உள்ளது.
ஏன்ஹாடா கட்சியினதும் எதிர்க்கட்சியினதும் தலைவரான ராஷட் கெனோச்சி அரசியல் சாசனத்தின் மீதான சர்வஜன வாக்கெடுப்பை நாட்டின் 75 வீதமான மக்கள் நிராகரித்துள்ளதாக சுட்டிக்காட்டி உள்ளார்.
இந்த அரசியல் அமைப்புக்கான செயற்பாடுகள் சட்ட விரோதமானவை. அவை ஜனநாயகப் புரட்சிக்கு முன் நாட்டு மக்கள் அனுபவித்த சர்வாதிகார ஆட்சியை மீண்டும் ஏற்படுத்துவதை நோக்காகக் கொண்டவை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய ஜனாதிபதி சர்வாதிகாரத்தை சட்டபூர்வமாக ஏற்படுத்த எடுக்கப்படும்
முயற்சிகளை முறியடிக்க சர்வஜன வாக்கெடுப்பை நிராகரிப்பதைத் தவிர மக்களுக்கு ஒன்றுபட்டு மேற்கொள்ளக் கூடிய வேறு வழி தெரியவில்லை.
இந்த சர்வஜன வாக்கெடுப்பை நிராகரிக்குமாறு டுனீஷியாவின் எழுத்தாளரும் புத்தி ஜீவியுமான ஹேதம் குவாஸ்மியும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
சர்வதேச நீதித்துறை ஆணைக்குழு டுனீஷியா நிலைமைகளை இவ்வாறு
குறிப்பிட்டுள்ளது கட்டுப்பாடற்ற ஜனாதிபதி ஆட்சிமுறையை இந்த அரசியல் யாப்பு
ஏற்படுத்துகின்றது.
இங்கு சர்வ வல்லமை உள்ள ஒரு ஜனாதிபதி அதிகாரத்தில் இருப்பார். அவருக்கு கீழ் எந்த அதிகாரமும் அற்ற ஒரு பாராளுமன்றமும் பற்கள் பிடுங்கப்பட்ட ஒரு
நீதித்துறையும் அமுலில் இருக்கும் என்று தெரிவித்துள்ளது.
டுனீஷிய புத்திஜீவி ஒருவர் கருத்து வெளியிடுகையில் எகிப்தைப் போல மிகவும்
அடக்குமுறையான ஒரு போக்கை டுனீஷிய படைகள் கையாளக் கூடும்.
இந்தப் படையினரின் ஒருமித்த திகில் மிக்க செயற்பாடுகள் ஏற்கனவே பல டுனீஷியர்களை பாதுகாப்புக் கருதி நாட்டை விட்டு ஓடச் செய்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
அங்கு இடம்பெறும் பயங்கரமான நிகழ்வுகள் மக்களை நோயாளிகளாக்கி நலிவடையச் செய்துள்ளன என்று வெளிநாடுகளில் வாழும் பல டுனீஷியா புத்திஜீவிகள் சுட்டிக்காட்டி உள்ளனர்.
சர்வாதிகாரத்துக்கு எதிராக டுனீஷியா மக்கள் ஏற்கனவே போராடி உள்ளனர்.
தொடர்ந்தும் அவர்கள் போராடுவர். காரணம் இடையில் பத்து வருடங்கள் அவர்கள்
சுதந்திரத்தின் நன்மைகளை சுவைத்தவர்கள்.
இந்த பத்து வருடங்களும் நிலைமைகள் முழுமையாக சீராக இல்லாவிட்டாலும் கூட, அதை அவர்கள் தியாகம் செய்யத் தயாராக இல்லை என்று அவர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்.
புதிய அரசியல் யாப்பு அமுலுக்கு வந்தபின் எதிர்க்கட்சிகளுக்கு உள்ள தெரிவு மக்களுடன் இணைந்திருப்பதாகும் என்று கனோச்சி மேலும் தெரிவித்துள்ளார். நாம் எமது மக்களோடும் அவர்களின் சுறுசுறுப்பான செயற்பாடுகளோடும், இளைஞர்களோடும் இணைந்து ஜனநாயகத்தை நோக்கிய போராட்டப் பாதையில் தொடர்ந்து பயணிப்போம் என்று அவர் உறுதி பூண்டுள்ளார்.
டுனீஷியாவின் புதிய அரசியல் யாப்பு மேலும் கொந்தளிப்புக்களுக்கான ஒரு சமையல் குறிப்பாக உள்ளது என்று பத்தி எழுத்தாளர் ஈவா ஜராட் வர்ணித்துள்ளார். டுனீஷியாவில் வல்லமை மிக்க ஒரு போராட்டத்துக்கான மேடை தயார் படுத்தப்பட்டுள்ளது.
புதிய சுல்தானுக்கும் மக்களுக்கும் இடையிலான போராட்ட மேடையாக அது அமையும். டுனீஷியாவில் அரசுக்கு அடுத்தபடியாக பாரிய அளவில் ஒழுங்கமைக்கப்பட்ட மக்கள் அமைப்பாக இருப்பதே என்ஹாடா கட்சி மட்டுமே என்று பிரிட்டிஷ் பத்தி எழுத்தாளர் டேவிட் ஹேர்ஸ்ட் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்க்கட்சியான என்ஹாடா மிக உறுதியாக வளர்ச்சி கண்டு வருகின்றது. அதன்
உறுப்பினர்கள் மீண்டும் அதனோடு இணைந்து வருகின்றனர்.
மூன்றாவது தடவையாக சிறையில் அடைக்கப்பட்டாலும் சரி தன்னால் முடிந்த பணியை சிறப்பாக ஆற்றுவதற்கு கனோச்சி மிகவும் சுறுசுறுப்பாக தயார் நிலையில் உள்ளார்.
டுனீஷியாவின் ஐரோப்பிய அண்டை வீட்டாளர்கள் ஒத்துழைப்பு வழங்க எந்தளவு தகுதியற்றவர்கள் என்பதற்கு மீண்டும் உதாரணம் ஆகி உள்ளனர்.
அரபு வசன்தத்தையும் அதன் தொடராக மலர்ந்த ஜனநாயகத்தையும் நசுக்குவதில் தான் அவர்கள் எப்போதும் குறியாக உள்ளனர்.
அரபுலகில் ஜனநாயகம் மலரக் கூடாது என்பது தான் அவர்களின் ஏகோபித்த கொள்கை.