அல்குர்ஆனை மனனம் செய்யும் ஒருவர் வானவர்களோடு இருக்கும் பாக்கியத்தைப் பெறுவதாகவும், அவர்களது பெற்றோர் மறுமையில் அதிவிசேடமாக கௌரவிக்கப்படுவதாகவும் இஸ்லாம் போதிக்கின்றது என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கஹட்டோவிட்ட கிளையின் தலைவர் அஷ்ஷெய்க் அக்ரம் ஏ. ஸமத் தெரிவித்தார்.
கஹட்டோவிட்டாவில் இயங்கும் கல்விக்கும் அபிவிருத்திக்குமான இமாம் ஷாபிஈ நிலையத்தில் நேற்று, நடைபெற்ற ஹிப்ள் பிரிவுக்கான புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும், அல்குர்ஆனைச் சுமந்த ஒருவர் மலக்குமார்களோடு இருக்கும் பாக்கியத்தைப் பெறுகின்றார். அவரது பெற்றோர்களுக்கு மறுமையில் அவர்கள் வியக்கத்தக்க அளவுக்கு சன்மானங்கள் வழங்கப்படவுள்ளன.
அல்குர்ஆனை ஓதுவதனால் மறுமையில் நிறைய நன்மைகள் கிடைப்பது போலவே உலகிலும் பல்வேறு பயன்களை ஒருவர் அடைந்து கொள்கின்றார்.
ஓருவருடைய ஆளுமையைக் கட்டமைப்பதில் அல்குர்ஆனை ஓதுவதும், அதனை மனனமிடுவதும் மிகுந்த செல்வாக்குச் செலுத்துகின்றது.
அல்குர்ஆனை அதிகமாக மனனமிட்டவர்தான் தலைமைத்துவத்துக்கு தகுதியானவர் என நபியவர்களினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளமை இதற்கான சிறந்த எடுத்துக் காட்டாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அல்குர்ஆனை மனனமிட்டவர் சமநிலை ஆளுமையுள்ள ஒருவராக காணப்படுகின்றார் என்ற உண்மையை சவூதியைச் சேர்ந்த உளவியல் ஆய்வாளரான ஸாலிஹ் இப்னு இப்றாஹீம் அஸ்ஸனீஃ என்பவர் மாணவர்களிடையே மேற்கொண்ட ஆய்வின் முடிவாக கூறியுள்ளார்.
2007 ஆம் ஆண்டு ஆரம்பப் பிரிவு மாணவர்களிடையே மேற்கொண்ட ஆய்விலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளதாகவும் அஷ்ஷெய்க் அக்ரம் ஸமத் தனது நீண்ட உரையில் குறிப்பிட்டார்.
இதேவேளை கல்விக்கும் அபிவிருத்திக்குமான இமாம் ஷாபிஈ நிலையத்தில் மௌலவி, அல்ஹாபிழ் எம்.ஏ. உமைர் ஹாசிமியின் வழிகாட்டலில் நடைபெறும் ஹிப்ளு பிரிவில் புதிதாக 20 மாணவர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.