இந்தியாவின் வடக்கு உத்தரபிரதேச மாநிலத்தில் தாழ்த்தப்பட்ட தலித் சமூகத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரிகள் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டதையடுத்து, இந்தியாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் 15 மற்றும் 17 வயதுடைய இரண்டு சிறுமிகள் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். குற்றம் சாட்டப்பட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று அவர்கள் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தில் சோட்டு, ஜுனைத், சோஹைல், ஹபிசுல், கரிமுதீன் மற்றும் ஆரிப் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர். சோஹைல் மற்றும் ஜுனைட் அவர்களை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்களை திருமணம் செய்து கொள்ளுமாறு சிறுமிகள் கூறியதை அடுத்து, சோஹைல், ஹபிசுல் மற்றும் ஜுனைத் ஆகியோர் கழுத்தை நெரித்து கொன்றனர் என்று பொலிஸ் தரப்பு தெரிவித்தன.
இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இருவரையும் சிலர் வலுக்கட்டாயமாக மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்றதாகச் சிறுமியின் தாயார் குற்றஞ்சாட்டி உள்ளார்.
குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து, அவர்களுக்கு உரியத் தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்பதை வலியுறுத்தி அக்கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். அங்குப் பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில், கிராம மக்களைச் சமாதானப்படுத்த முயன்றனர்.
இரு சிறுமிகளின் உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அருகே உள்ள மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.
பிரேதப் பரிசோதனையில் சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கழுத்தை நெரித்துக் கொல்லப்பட்டது உறுதியாகி உள்ளது.
சிறுமிகளை நேற்று கரும்பு தோட்டத்திற்கு அழைத்துச் சென்று, சுஹைல் மற்றும் ஜுனைத் ஆகியோர் பாலியல் பலாத்காரம் செய்ததாக மாவட்ட காவல்துறை தலைவர் சஞ்சீவ் சுமன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி, மாநில அரசை கடுமையாக சாடினார், “லக்கிம்பூரில் சகோதரிகள் இருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மனதை உலுக்குகிறது.
பட்டப்பகலில் சிறுமிகள் கடத்தப்பட்டதாக உறவினர்கள் கூறுகின்றனர். நாளிதழ்களிலும், தொலைக்காட்சிகளிலும் பொய்யான விளம்பரங்கள் கொடுப்பதால் சட்டம் ஒழுங்கை மேம்படுத்த முடியாது. எல்லாவற்றிற்கும் மேலாக, உ.பி.யில் பெண்களுக்கு எதிரான கொடூரமான குற்றங்கள் ஏன் அதிகரித்து வருகின்றன?” என்று மாநில அரசை கடுமையாக சாடினார்.
முன்னர் “தீண்டத்தகாதவர்கள்” என்று குறிப்பிடப்பட்ட தலித்துகள், இந்தியாவின் சிக்கலான சாதி அமைப்பின் அடிமட்டத்தில் உள்ளனர்.
பல நூற்றாண்டுகளாக, அவர்களின் பாதுகாப்பிற்கான சட்டங்கள் இருந்தபோதிலும், அவர்கள் சலுகை பெற்ற சாதி குழுக்களால் பாகுபாடு மற்றும் துன்புறுத்தலுக்கு பலியாகியுள்ளனர்.
கடந்த ஆண்டு அக்டோபரில், இதேபோன்ற சம்பவம் உத்தரபிரதேசத்தின் அம்ரோஹா மாவட்டத்தில் பதிவாகியுள்ளது, இதில் ஒரு இளம்பெண் பாலியல் பலாத்காரத்தில் இருந்து தப்பியவர் குற்றம் சாட்டப்பட்ட பக்கத்து வீட்டுக்காரரால் கொலை செய்யப்பட்டு, அவரது உடல் மரத்தில் தொங்கவிடப்பட்டது. 2014 ஆம் ஆண்டு இதே மாநிலத்தின் படவுன் மாவட்டத்தில், இரண்டு உறவினர்களின் உடல்கள் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டன.