உணவுப் பாதுகாப்பு மற்றும் போஷாக்கு உறுதித் திட்டத்தை துரிதப்படுத்துமாறு தேசிய உணவுப் பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் கலாநிதி சுரேன் படகொட மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
அண்மையில் ஜனாதிபதி ஊடக மையத்தில் இணையத்தில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களுக்கான விளக்கமளிக்கும் சந்திப்பில் வைத்தியர் சுரேன் படகொட இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இக்கலந்துரையாடலில், உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச் சத்து தொடர்பான பல்துறை ஒருங்கிணைந்த பொறிமுறையை கிராமிய அளவில் நடைமுறைப்படுத்துவது குறித்தும், அங்கு ஏற்படும் பிரச்னைகள் குறித்தும், வழங்கக்கூடிய தீர்வுகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.
மேலும், சுரேன் படகொட அடுத்த வாரத்திற்குள் வீடு வீடாகச் சென்று இது தொடர்பில் தேவையான தரவுகளை சேகரிக்கும் பணியை ஆரம்பிக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்ததுடன், தேவைப்பட்டால் இணையத்தள தொழில்நுட்பத்தின் ஊடாக அதனைச் செய்வதற்கான சாத்தியக்கூறுகளை மேற்கொள்ளுமாறும் தெரிவித்தார்.
கிராமப்புற பொருளாதார மறுமலர்ச்சி மையங்கள் அமைப்பது தொடர்பான அடிப்படைப் பிரச்சனைகள், பயிர்களுக்குப் போதிய உரங்கள் இல்லாமை, விதைகள் தட்டுப்பாடு, விவசாய இயந்திரங்களின் செயல்பாட்டிற்கு எரிபொருள் இல்லாமை, பூச்சிக்கொல்லி பற்றாக்குறை, கால்நடைகளால் பயிர்களுக்கு ஏற்படும் சேதம் மற்றும் உபரி அறுவடையை விற்பதில் உள்ள சிரமங்கள் ஆகியவையும் இந்த கலந்துரையாடலில் விவாதிக்கப்பட்டது.
இப்பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளை இறக்குமதி செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், எரிபொருளுக்கான QR குறியீட்டின் கீழ் எரிபொருள் ஒதுக்கீட்டை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுரேன் படகொட சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், உள்நாட்டில் பற்றாக்குறை விதைகளை இறக்குமதி செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும், இத்திட்டத்தின் கீழ் நிறுவப்பட்டுள்ள அனைத்து தேசிய மறுமலர்ச்சி மையங்களையும் ஒருங்கிணைத்து, உபரி உற்பத்திகளை உற்பத்தியில் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதார மறுமலர்ச்சி மையங்களுக்கு நியாயமான விலையில் விற்பனை செய்ய வாய்ப்பு வழங்கப்படும் என்றும் அவர் இங்கு குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள உணவுப் பற்றாக்குறை காரணமாக சுமார் 60வீத மக்கள் உணவு உட்கொள்வதைக் குறைத்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
அதனால்தான் குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கு உணவு வழங்குவது எங்கள் முன்னணி திட்டங்களில் ஒன்றாகும். யாரும் பட்டினி கிடக்க வேண்டாம் என ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார். எனவே, சமூக சமையலறை திட்டத்தின் மூலம் ஆதரவற்றோருக்கு உணவு வழங்க திட்டமிட்டுள்ளோம்.
அதன்படி, வீட்டு அலகுகளை வலுப்படுத்தவும், வரவிருக்கும் பருவத்தில் பயிர்த் திட்டங்களை செயல்படுத்த தரவுகளை சேகரிக்கவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இத்திட்டம் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தப்பட்டால் நாட்டில் உள்ள மக்களுக்கு தட்டுப்பாடு இன்றி உணவு வழங்க முடியும். இந்த உணவு நெருக்கடிக்கு அரசு அதிகாரிகளே பொறுப்பேற்க வேண்டும்.
அரசு அதிகாரிகளாகிய நாமும் இதில் தலையிட வேண்டும். இந்த பொருளாதார மையத்தின் மூலம் உணவு மற்றும் சாகுபடி திட்டங்களை செயல்படுத்த நாங்கள் நம்புகிறோம்,’ என்று அவர் மேலும் கூறினார்.