கொந்தளித்துக் கொண்டிருக்கும் துருக்கியின், இஸ்ரேலுடனான குளிர்ச்சியான உறவுகள்: லத்தீப் பாரூக்

Date:

2022 ஆகஸ்ட் 1ம் திகதி எந்தவிதமான நியாயங்களும் இன்றி, எவ்விதமான ஆத்திரமூட்டல்

செயற்பாடுகளும் மேற்கொள்ளப்படாத நிலையில் இஸ்ரேல் அதன் அண்மைய
காட்டுமிராண்டித்தனத்தை காஸா பிரதேசத்தில் கட்டவிழ்த்து விட்டது.

இதில் மகிழ்ச்சியான ஒரு கோடைகால விடுமுறையை எதிர்ப்பாத்திருந்த 15 சிறுவர்கள் உட்பட 49 அப்பாவி பலஸ்தீனர்கள் அநியாயமாகக் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயம் அடைந்தனர்.

இவ்வாறு கொல்லப்பட்டவர்கள் தொடர்பான சோகம் அடங்குவதற்குள், காயமடைந்தவர்களின் இரத்தங்கள் காயும் முன், ஏனைய பாதிக்கப்பட்டவர்களின்
கண்ணீர் அடங்குவதற்குள் 2022 ஆகஸ்ட் 17ல் சட்டத்துக்கு கட்டுப்படாத, இந்த
கொடுமைக்கார இஸ்ரேலுடன் முழு அளவிலான இராஜதந்திர உறவுகளை ஆரம்பிப்பதாக துருக்கி அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு வெளியாகி இரு வாரங்களின் பின் செப்டம்பர் நான்காம் திகதி துருக்கியின் யுத்தக் கப்பலான வுஊபு கமால்ரீஸ் முழு அளவிலான படைகளுடன் இஸ்ரேலின் வடபகுதி ஹைபா துறைமுகத்தில் தரை தட்டியது.

இங்கு தான் இஸ்ரேல் கடற்படையின் தலைமையகமும் அமைந்துள்ளது.
துருக்கி வெளியுறவு அமைச்சர் மெவ்லுட் கவுசொக்லு அங்காராவில் செய்தி நிருபர்கள் மத்தியில் பேசும் போது “இஸ்ரேலுடன் வளர்ச்சி அடைந்து வரும் உறவுகள் என்பது பலஸ்தீன விடயத்தை துருக்கி கை விட்டுவிடும் என்று அர்த்தமல்ல.

நாம் பலஸ்தீனர்களின் உரிமைகளுக்காகவும் காஸா மற்றும் ஜெரூஸலம் பற்றிய விடயங்கள் பற்றியும் தொடர்ந்து குரல் எழுப்புவோம்” என்று தெரிவித்துள்ளார்.

அரபுலகின் ஏனைய ஆட்சியாளர்கள் மத்தியிலும் காணப்படும் ஒரே விதமான இரட்டை வேடத்தை அல்லது நயவஞ்சகத்தை தான் இந்தக் கூற்று வெளிப்படுத்துகின்றது.

இந்த ஆட்சியாளர்கள் எல்லோருமே தமது ஆன்மாக்களை தம்மை பதவியில் அமர்த்திய அமெரிக்க, ஐரோப்பிய மற்றும் இஸ்ரேல் எஜமானர்களுக்கு விற்பனை செய்து விட்டு ஆட்சிக் கதிரைகளை அலங்கரித்துக் கொண்டிருப்பவர்கள்.

துருக்கி இஸ்ரேலுக்கு தெரிவித்துள்ள செய்தி சவூதி அரேபியா உட்பட அரபுலகின் ஆட்சி அதிகாரத்தில் உள்ள ஏனைய கொடுங்கோல் ஆட்சியாளாகளின் செய்தியைப் போலவே அமைந்துள்ளது.

பலஸ்தீனர்களை நீங்கள் தினசரி சுதந்திரமாகக் கொன்று குவிக்கலாம்.  இஸ்லாத்தினதும் முஸ்லிம்களினதும் மூன்றாவது புனிதத் தலமான மஸ்ஜிதுல் அக்ஸாவுக்குள் புகுந்து துப்பாக்கிப் பிரயோகம் நடத்தி அங்கு தொழுகையில் ஈடுபட்டிருப்பவர்களையும் சுட்டுக் கொள்ளலாம்.

இஸ்ரேல் துருக்கி உறவுகள்

பல தலைமுறைகளாக தாங்கள் வாழ்ந்து வரும் தமது சொந்த பூமியில் இருந்து பலஸ்தீன மக்களை விரட்டி அடிக்கலாம். அ

வர்களது வீடுகளையும் கட்டிடங்களையும் ஏன் மயானங்களையும் கூட நீங்கள் சிதைத்து தரை மட்டமாக்கலாம், அவர்களுக்கு சொந்தமான காணிகளை கபளீகரம் செய்து நீங்கள் யூதக் குடியேற்றங்களை அமைத்துக் கொள்ளலாம் இவற்றுக்கெல்லாம் உங்களுக்கு அமெரிக்காவினதும் ஐரோப்பாவினதும் ஆசீர்வாதமும் நிதி உதவியும் கிடைக்கும்.

மனித நாகரிகத்தை ஒழுங்கமைக்கும் எந்த சட்டத்தை வேண்டுமானாலும் நீங்கள் கண்மூடித்தனமாக மீறலாம்.

அவற்றுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையில் உங்களுக்கு எதிராக எந்தத் தீர்மானம் கொண்டு வரப்பட்டாலும் அnரிக்கா மற்றும் ஐரோப்பாவின் ஆதரவோடு அது நிராகரிக்கப்படும்.

இஸ்ரேலுக்கு அரபுலகம் வழங்கி வரும் அங்கீகாரத்துக்கான மறைமுக அர்த்தம் இதுதான். இஸ்ரேலின் காட்டுமிராண்டித் தனத்துக்கு எதிராக உலகின் எந்த சட்டங்களும் பாய்வதில்லை. எல்லாவிதமான சட்டங்களையும் மீறி தேவையான அளவு குற்றங்கள் புரிய அவர்களுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

எல்வாவிதமான சட்டங்களையும், தார்மிக விழுமியங்களையும், ஒழுக்க நீதிகளையும் மீறி வன்முறைகள் புரியும் அதிகாரத்தின் அடிப்படையிலான கொள்கையின் கீழ் தான் இஸ்ரேல் என்ற நாடு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

இதனால் தான் அவர்கள் எவ்வித அச்சமும் கவலையும் குற்ற உணர்வும் இன்றி பலஸ்தீன மக்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் மற்றும் குற்றங்கள், வன்முறைகள் என்பனவற்றில் ஈடுபட்டு அவர்களை தினசரி கொன்றும் வருகின்றனர்.

2018ல் இஸ்ரேலும் துருக்கியும் பரஸ்பரம் அதன் தூதுவர்களை வெளியேற்றி இருந்தன.

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் தலைமையிலான அமெரிக்க நிர்வாகத்தின் கீழ் இஸ்ரேலில் உள்ள அமெரிக்கத் தூதரகம் டெல் அவிவ் நகருக்கு மாற்றப்பட்டதை அடுத்து இஸ்ரேல் துருக்கி தூதுவர்களின் வெளியேற்றம் இடம்பெற்றது.

பலஸ்தீன மக்களைப் பொருத்தமட்டில் அவர்களின் எதிர்கால தலைநகரமாக ஜெரூஸலம் அமைய வேண்டும் என்பதே அவர்களின் விருப்பமும் எதிர் பார்ப்பும் ஆகும்.

ஆனால் இஸ்ரேல் தனது தலைநகராக ஜெரூஸலத்தை எடுத்துக் கொண்டதை அடுத்து இஸ்ரேல் காஸா எல்லைப் பகுதியில் கடும் மோதல்களும் அன்று இடம்பெற்றன.

இந்த அமெரிக்க தூதரக இடமாற்றத்தை அடுத்து இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களின் போது சுமார் 100 பலஸ்தீனர்கள் இஸ்ரேல் படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

சுமார் பத்து வருட கால பதற்ற நிலையின் பின் இந்த சுமுக நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளதாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதத்தில் இஸ்ரேல் ஜனாதிபதி ஐஸாக் எர்சொக் துருக்கிக்கு விஜயம் செய்திருந்தார். அதன் பிறகு இரு நாடுகளினதும் வெளியுறுவு அமைச்சர்களும் பரஸ்பரம் விஜயங்களை மேற்கொண்டு உறவுகளை சீர்படுத்தும்
முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டனர்.

இஸ்தான்புல்லில் இருந்து தகவல்களைத் தந்துள்ள அல்ஜஸீராவின் செய்தியாளர் ரசூல் சர்கார் பொருளாதார மற்றும் பாதுகாப்பு காரணிகள் முக்கிய இடம் பிடித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் முழு அளவிலான இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்ட நிலையிலும் கூட இரு நாடுகளுக்கும் இடையில் பலஸ்தீன விவகாரமானது சர்ச்சைக்குரிய
ஒரு கருத்து வேறுபாடாகவே தொடர்ந்தும் காணப்படும் என்று தெரிவித்துள்ளார்.

பிராந்திய சக்திகளோடு தனது உறவுகளை வலுப்படுத்திக் கொள்ளும் நோக்கில் இஸ்ரேல் அரபு நாடுகளுடன் நேசக் கரம் நீட்டி வருகின்றது. இஸ்ரேலுடனான இந்தப் புதிய உறவுகளுக்கு காரணமாக அமைகின்ற புரிந்துணர்வு உடன்படிக்கைகள் இப்போது உலக அரங்கில் ஏபிரஹாமின் உடன்படிக்கைகள் என்று அழைக்கப்பட்டு வருகின்றன.

பஹ்ரேன், ஐக்கிய அரபு இராச்சியம், மொரோக்கோ என்பன ஏற்கனவே இந்த
உடன்படிக்கைகளில் இணைந்துள்ளன. இப்போது துருக்கியும் இணைகின்றது.

தன்னை விட்டுப் பிரிந்த தனக்கு போட்டியான நாடுகளுடன் உறவுகளை சீர்செய்து கொள்வதில் துருக்கி 2020 முதல் கவர்ச்சிகரமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது.

எகிப்து, சவூதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம் என்பனவும் இதில் அடங்கும்.
சான்யா மன்சூர் என்ற பத்தி எழுத்தளர் தெரிவித்துள்ள கருத்தின் படி பலஸ்தீனர்களை இஸ்ரேல் கையாண்டு வருகின்ற விதம் காரணமாக இரு நாடுகளும் பல வருடங்களாக பிணக்குகளுடனும் முரண்பாடுகளுடனும் இருந்து வந்துள்ளன.

துருக்கியைப் பொருத்தமட்டில் அதற்குள்ளேயே கொழுந்து விட்டெரியும் பல பிரச்சினைகள் உள்ளன.

உதாரணத்துக்கு துருக்கியின் பணவீக்கம் 70 வீதமாக அதிகரித்துள்ள நிலையில் மிக மோசமான பொருளாதார நெருக்கடி அங்கு ஏற்பட்டுள்ளது.

அந்த நாடு தற்போது வெளிநாட்டு முதலீடுகளை வேண்டி நிற்கின்றது. இஸ்ரேலைப் பொருத்தமட்டில் இந்தப் பிராந்தியத்தில் அதிகரித்து வரும் ஈரானின்
செல்வாக்கிற்கு பதிலீடாக அமையக் கூடிய ஒரு நாடாக துருக்கியை நோக்குகின்றது.

இதனிடையே கமால் அதாதுர்க்கியின் கீழ் இருந்த மதச்சார்பற்ற துருக்கி; இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் தீவிர பாதகமான போக்கினை கொண்ட ஒரு நாடாகவே இருந்தது.

1949ல் துருக்கி தான் இஸ்ரேலுடன் உறவுகளை ஏற்படுத்திக் கொண்ட முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட முதலாவது நாடு என்பதையும் பத்தி எழுத்தாளர் யாவுஸ் ஒஸ்டென் நினைவு படுத்தி உள்ளார்.

எவ்வாறாயினும் இஸ்ரேலுக்கு எதிரான எல்லா நிலைப்பாடுகளுக்கும் அப்பால்
இஸ்ரேலுடன் உறவுகளைப் பேணுவது ஆழமான மூலோபாய நலன் சார்ந்த ஒரு
விடயமாகவே துருக்கி பார்க்கின்றது.

அந்த வகையில் தூதுவர்களைப் பரிமாறிக் கொள்ளும் அளவுக்கு இராஜதந்திர உறவுகளை மீளக் கட்டி எழுப்புவது ஒன்றும் பாரிய அதிசயம் தரும் விடயம் அல்ல.

இதன் மூலம் துருக்கி பலஸ்தீனர்கள் தொடர்பான தனது நிலைப்பாடு கொள்கை என்பனவற்றை கைவிட்டு விடும் எனக் கருதவும் முடியாது.

எனவே இந்த உறவுகள் அவற்றுக்கே உரிய தனித்தனியான ஆயுளைக் கொண்டவை என்றும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

இரண்டு நாடுகளினதும் அண்மைக்கால கடுமையான வரலாற்றை பார்க்கின்ற போது இஸ்ரேல் – பலஸ்தீன மோதல்கள் தொடர்பான எதிர்கால பதற்ற நிலை இயல்பு நிலையை மீளக் கட்டி எழுப்பும் என்று நம்புவது சாத்தியமற்றதாகவே உள்ளது.

இயல்பு நிலை ஏற்படும் என நம்புவதற்கும் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து கடந்த காலத்தை மறந்து கை கோர்த்துக் கொள்வார்கள் என்று நம்புவதற்கும் இதுவொன்றும் காலம் கடந்து போய்விட்ட முடிவல்ல.

பலஸ்தீன அரங்கில் எப்போதும் எது வேண்டுமானாலும் நடக்கலாம். அது
உறவுகளை மீண்டும் சீர்குலைப்பதற்கான சாத்தியங்கள் அதிகமாக உள்ளது என்று
இன்னொரு பத்தி எழுத்தாளர் எச்சரித்துள்ளார்.

இதேவேளை துருக்கிக்கு எதிராக குர்திஷ் இனத்தவர்களுக்கான தனித்தாயகம்
ஒன்றுக்காகப் போராடும் குர்திஷ் கெரில்லாக்களுக்கு இஸ்ரேல் ஆயத உதவிகளை வழங்கி வருவதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்களிலும் துருக்கி கவனம் செலுத்தி உள்ளது.

குர்திஷ் சுன்னாஹ் பிரிவு முஸ்லிம்களுக்கு தனித்தாயகம் ஒன்று இருந்தது. ஆனால்
பிற்காலத்தில் அது நான்காகப் பிரிக்கப்பட்டது. அந்தப் பகுதிகள் துருக்கி, ஈரான், ஈராக், சரியா ஆகிய நாடுகளுடன் பின்னர் இணைக்கப்பட்டன.

குர்திஷ் இன மக்களைப் பழிவாங்கும் நோக்கில் ஐரோப்பிய ஏகாதிபத்தியவாத
சக்திகளாலேயே இந்தப் பிரிவினை நடத்தப்பட்டதாக வரலாற்று ஆய்வாளர்கள் பலர் சுட்டிக் காட்டி உள்ளனர்.

இதற்குக் காரணம் ஐய்யூபி பரம்பரையை நிறுவிய குர்திஷ்
இனத்தின் மாவீரர் சலாஹுத்தீன் தான் பல நூற்றாண்டுகளுக்கு முன் ஜெரூஸலத்தை கிறிஸ்தவர்களிடம் இருந்து விடுவித்து முஸ்லிம்களின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தவர்.

இதனால் தான் அவர் சார்ந்த குர்திஷ் இனத்தையே ஒட்டு மொத்தமாக
ஐரோப்பிய ஏகாதிபத்தியம் பழிவாங்கியது இந்தப் பிரிவினைக்குப் பிறகு தான் குர்திஷ் மக்கள் தமது தாயகத்துக்கான ஆயுதப் போராட்டத்தையும் தொடங்கினர்.

இந்தப் பிராந்தியத்தில் தமக்கென சுதந்திரமான தாயகம் ஒன்றை ஸ்தாபிக்க ஆயுதப் போராட்டம் நடத்தி வரும் பிரிவினர் மீது இஸ்ரேலின் அனுதாபம் திரும்பி உள்ளமை பற்றி துருக்கி சிந்திக்கத் தவறவில்லை.

குர்திஷ் இனத்தவர்கள் கேட்பது போல் ஒரு நாடு அமைவதாக இருந்தால் ஈராக், சிரியா, ஈரான் ஆகிய நாடுகளிடம் இருந்தும் பெருமளவு நிலப்பரப்பை பிரித்து எடுக்க வேண்டியிருக்கும்.

துருக்கியில் இருந்து ஒரு பகுதி பிளவு படுமானால் அது பெரும் விளைவுகளையும் சந்திக்க வேண்டி இருக்கும்.

அந்த வகையில் குர்திஷ் ஆயுதக் குழு இப்போது இஸ்ரேலிடம் இருக்கும் முக்கியமான துருப்புச் சீட்டாகும்.

துருக்கிக்கும் ஏனைய பிராந்திய நாடுகளுக்கும் எதிராக இஸ்ரேல் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் அதை தாராளமாகப் பயன்படுத்தலாம்.

பல தசாப்த காலமாக குர்திஷ் ஆயுதக் குழுவுடன் இஸ்ரேல் கொண்டுள்ள உறவுகளின் மூலம் அந்தக் குழுவை இந்தப் பிராந்தியத்தில் உள்ள தனது எதிரிகளுக்கு எதிரான ஒரு தடையாகவே அவதானித்து வந்துள்ளது.

என்றாவது ஒரு நாள் அரபிகளுக்கு எதிராகவும், ஈரான் மற்றும் துருக்கிய தரப்பினருக்கு எதிராகவும் அதைப் பாவிப்பதற்கு இஸ்ரேல் தருணம் பார்த்து
காத்திருக்கின்றது.

(முற்றும்)

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...