இலங்கையில் குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு பற்றி யுனிசெப் வெளியிட்ட அறிக்கையை நீங்கள் நிராகரித்தால் இது தொடர்பில் சுகாதார அமைச்சு உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களை முன்வைக்க வேண்டுமென அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
வெவ்வேறு தரப்பினர் வெவ்வேறு புள்ளிவிபரங்களைக் கொண்டுள்ளனர். இந்நாட்டு மக்கள் உணவு விநியோகத்தில் பிரச்சினையை எதிர்நோக்கி வருவதை தெளிவாக அவதானிக்க முடிகிறது என சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் கலாநிதி சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலைமையை கருத்திற் கொண்டு இந்நாட்டு மக்கள் தமது போசாக்கு தேவைகளை ஒதுக்கி வைத்துவிட்டு உணவுத் தேவையை மாத்திரம் பூர்த்தி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் டொக்டர் சமில் விஜேசிங்க மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
குழந்தைகளின் போசாக்குக் குறைபாட்டின் அடிப்படையில் இலங்கை உலகளாவிய ரீதியில் 6ஆவது இடத்தில் உள்ளதாக யுனிசெப் அண்மையில் அறிவித்தது.
நாட்டிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த அந்த அமைப்பின் தெற்காசிய பிராந்தியத்தின் பணிப்பாளர் ஜோர்ஜ் லாரி அட்ஜே, ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு தெற்காசியாவிலேயே ஊட்டச்சத்து குறைபாடு உள்ள நாடுகளில் இலங்கை இரண்டாவது இடத்தில் உள்ளதாக தெரிவித்தார்.
அதேநேரம், நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியுடன் ஏற்பட்டுள்ள வாழ்க்கைச் செலவு அதிகரிப்பினால் மக்களின் உணவுப்பழக்கம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், நாளுக்கு நாள் உணவுப் பொருட்களின் விலையேற்றமே இதற்குக் காரணம் எனவும் குறிப்பிட்டார்.
இதன்படி, இலங்கையில் பல குடும்பங்கள் தினசரி உணவைத் தவிர்ப்பதுடன், சத்தான உணவைப் பெறாமல் இருப்பதும், உணவுப் பொருட்களை வாங்க முடியாமையும் முக்கியக் காரணம் என யுனிசெப் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், இலங்கையில் சிறுவர் போசாக்கு குறைபாடு தொடர்பில் யுனிசெப் முன்வைத்த அறிக்கையை நிராகரிப்பதாக சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த, சுகாதார அமைச்சில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் குறிப்பிட்டிருந்தார்.