அடுத்த வாரம் முதல் பாடசாலை புத்தகப் பைகளை பரிசோதிக்கும் முறையை மீண்டும் அறிமுகப்படுத்த உள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பாடசாலை மாணவர்களிடையே போதைப்பொருள் பாவனையை தடுப்பதற்காக விசேட வேலைத்திட்டமொன்றை ஆரம்பிக்கவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள முன்னணி ஆண்கள் பாடசாலையொன்றில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட அவர், ஆரம்ப கட்ட நடவடிக்கையாக பாடசாலைகளில் பாடசாலைப் பைகளை பரிசோதிக்கும் பணி மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், இனிப்புகள் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் போதைப் பொருட்கள் பாடசாலைகளுக்குள் நுழைய வாய்ப்புள்ளதாகவும், பாடசாலை மாணவர்களுக்கு தெரியாமல் போதைப் பொருட்களை விநியோகிக்கும் முயற்சிகள் இடம்பெற்று வருவதாகவும் கல்வி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பில் அனைத்து மாகாண கல்விப் பணிப்பாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.