உலகில் எந்தவொரு நாட்டிலிருந்தும் மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆதரவுடன் காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச பல்கலைக்கழகத்தை இலங்கையில் நிறுவுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்மொழிந்தார்.
மணிலாவிலுள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மசட்சுகு அசகாவாவுடனான சந்திப்பின் போதே ஜனாதிபதி விக்கிரமசிங்க இந்த யோசனையை முன்வைத்தார்.
கடந்த காலங்களில் இலங்கைக்கு வழங்கப்பட்ட அவசர உதவிகளுக்கு ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவருக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி விக்கிரமசிங்க, இலங்கைக்கும் ஆசிய அபிவிருத்தி வங்கிக்கும் இடையிலான நீண்டகால உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடினார்.
இலங்கையுடன் தொடர்ந்து ஒத்துழைப்பதாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் ஜனாதிபதி விக்கிரமசிங்கவிடம் உறுதியளித்தார்.
சர்வதேச நாணய நிதியத்துடனான இலங்கையின் ஈடுபாடு குறித்தும் ஜனாதிபதி விக்கிரமசிங்க ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவருக்கு விளக்கமளித்தார்.
இதேவேளை, ஆசிய அபிவிருத்தி வங்கியில் பணியாற்றும் நிபுணர்களுடனும் ஜனாதிபதி கலந்துரையாடலில் ஈடுபட்டார்.