முஸ்லிம் திணைக்கள கட்டடத்திற்குள் வேறு திணைக்களங்களை அமைப்பதற்கு முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளன.
இந்த விடயம் தொடர்பில், கம்பஹா மாவட்ட புத்தி ஜீவிகள் அமைப்பு கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பு மாளிகாவத்தை இஸ்லாமிய நிலையத்தில் முஸ்லிம் சமய கலாசார பண்பாட்டு அமைச்சு சம்பந்தமாகவும் முஸ்லிம்களின் பல்வேறுபட்ட பிரச்சனைகள் சம்பந்தமாகவும் கூடி ஆராய்ந்தது.
முன்னாள் கொழும்பு மாநகர சபை முதல்வரும் முன்னாள் சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் அல்ஹாஜ் ஹுசைன் முஹம்மத் தலைமையில் நடைபெற்ற மேற்படி கூட்டத்தில் முஸ்லிம் திணைக்கள கட்டடத்துக்கு ஏனைய திணைக்களங்களை உள்வாங்க இருப்பதனை நிறுத்துமாறு ஜனாதிபதியை சந்தித்து கோரவுள்ளது.
மேலும் இது சம்பந்தமாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களுடன் நேரடியாக கலந்துரையாடி இக்கட்டடத்தின் மூன்று மாடிகள் கிறிஸ்தவ மற்றும் இந்து மத திணைக்களங்களை அமைப்பதற்கு மத விவகார அமைச்சினால் எடுக்கப்பட்டுள்ள முடிவுகளை நிறுத்துமாறு முஸ்லிம்கள் சார்பாக வேண்டிக் கொள்ள தீர்மானிக்கப்பட்டது.
இக் கட்டடத்தில் முஸ்லிம் கலாச்சார விடயங்கள், முஸ்லிம் வாசிகசாலை, முஸ்லிம்களின் பல்வேறுபட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்கும் பல்வேறு அரசு நிறுவனங்களையும் ஒரே கூரையின் கீழ் கொண்டு வருவதற்காகவே கட்டடம் வடிவமைக்கப்பட்டு நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் வகுப் டரய்பியுனல் (Waquf Tribunals), காதி Quasi Appeal Board மேன்முறையீட்டு சபை, வக்பு சபை ஆகியவைகளை இக்கட்டத்தில் அமைப்பதனால் நாடு பூராவிலிருந்து வழக்கு விசாரணைகளுக்காக வருபவர்களுக்கு இலகுவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை கம்பஹா, கொழும்பு, களுத்துறை ஆகிய மேல் மாகாணத்திற்குட்பட்ட மூன்று மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி நடைபெற்ற மேற்படி கூட்டத்தில் தொடர்ந்தும் முஸ்லிம் சமூகம் சம்பந்தமாக இவ்வாறு மாதம் ஒரு முறை கூடி ஆராய்ந்து எமது பிரச்சினைகளுக்கு தீர்வு காண முயற்சி எடுக்க வேண்டும் என அல்ஹாஜ் ஹுசைன் முஹம்மத் அவர்களின் ஆலோசனையை சகலரும் ஏற்றுக் கொண்டனர்.