“ஒரு நாட்டின் பாதுகாப்பு இராணுவம் மட்டுமல்ல, உணவு மற்றும் பொருளாதாரமாகவும் இருக்க வேண்டும்” – ஜனாதிபதி

Date:

ஒரு நாட்டின் பாதுகாப்பு இராணுவம் மட்டுமன்றி உணவு மற்றும் பொருளாதாரமாகவும் இருக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

இன்று (ஒக்டோபர் 11) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற தேசிய உணவுப் பாதுகாப்பு மற்றும் போஷாக்கு உத்தரவாத வேலைத்திட்டத்தின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

உணவுப் பாதுகாப்பு மற்றும் போஷாக்கு உத்தரவாதத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு எந்த நேரத்திலும் தலையிடத் தயார் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இந்த வேலைத்திட்டத்தின் ஊடாக விவசாயத்தை நவீனமயப்படுத்தி உணவுப் பாதுகாப்பு தொடர்பான சட்டங்களை இயற்ற வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

உணவுப் பற்றாக்குறையால் எந்தவொரு குடிமகனும் பட்டினி கிடக்கக் கூடாது என்ற தொனிப்பொருளில், உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்தை உறுதிப்படுத்துவதற்காக கிராமிய பொருளாதார மறுமலர்ச்சி மையங்களை வலுவூட்டுவதற்கான பல துறைகளின் கூட்டுப் பொறிமுறையானது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அறிவுறுத்தலின்படி அண்மையில்  நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

மாவட்ட அளவில் இத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு, அனைத்து மாவட்டங்களிலும் கிராம அளவில் கிராமப் பொருளாதார மறுமலர்ச்சிக் குழுக்கள் அமைக்கப்பட்டு, உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்தை உறுதி செய்வதற்கான திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

இதன்போது அந்தந்த மாவட்டங்களுக்குரிய பயிர்ச்செய்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதில் உள்ள இடையூறுகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதுடன் எரிபொருள் மற்றும் உர விநியோகம், நிலப்பிரச்சினை, விதை தட்டுப்பாடு, வனவிலங்குகளினால் வன சேதம் என்பன தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டது.

மாவட்ட மட்டத்தில் வேலைத்திட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் மாவட்ட செயலாளர்கள் முன்வைத்த முன்னேற்றம் தொடர்பில் அவதானம் செலுத்திய ஜனாதிபதி, உணவுப் பாதுகாப்பை ஏற்படுத்துவதற்காக கிராமிய மட்டத்தில் பயிரிட வேண்டிய பயிர்களை தனித்தனியாக அடையாளம் காணுமாறு அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார். உணவுப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளைக் கண்டறிந்து, அது குறித்த அறிக்கையை உடனடியாக சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் அரச சேவையை விட அதிகளவான மக்கள் இந்த வேலைத்திட்டத்திற்கு பங்களிப்பதன் சாத்தியத்தையும், முப்படையினர், சிவில் பாதுகாப்பு படை, அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் ஆதரவைப் பெறுவதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு வரை இந்த வேலைத்திட்டத்தை தொடர்ச்சியாக அமுல்படுத்தவும், மக்களின் போசாக்கு தேவையை உறுதிப்படுத்தவும், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய உலக பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள இத்திட்டத்தை பயன்படுத்தவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

3 வாரங்களின் பின்னர் இந்த வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பான அறிக்கையை வாரத்திற்கு ஒருமுறை அமைச்சரவைக்கு அனுப்பி வைக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

நாடு திரும்பும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங் ஜனாதிபதியுடன் சந்திப்பு!

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக தனது இராஜதந்திர சேவையை நிறைவு செய்துவிட்டு, ஜனவரி...

பிரபல ஊடகவியலாளர் இக்பால் அதாஸ் மரணம்.

பிரபல ஊடகவியலாளர் இக்பால் அதாஸ் இயற்கை எய்தியுள்ளார். 81 வயதான அவர்...

நாட்டின் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை

இன்றையதினம் (12) நாட்டின் வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா, மத்திய மாகாணங்களில்...

விமல் வீரவங்சவின் போராட்டம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சிவில் அமைப்புகளின்...