உலகளாவிய முப்தி என வர்ணிக்கப்பட்ட மிக முக்கியமான சமய ரீதியான கல்விமானும் சிந்தனையாளரும் எகிப்தின் முன்னாள் ஆட்சியாளர் ஹொஸ்னி முபாரக் பதவியில் இருந்து வீழ்த்தப்பட்ட 2011 அரபு வசன்த போராட்டத்தை வெளிப்படையாக ஆதரித்தவருமான ஷேக் கலாநிதி யூசுப் அல் கர்தாவி தனது 96வது வயதில் 2022 செப்டம்பர் 22 திங்கட்கிழமையன்று காலமானார்.
உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான முஸ்லிம்களின் உள்ளங்களையும்
சிந்தனைகளையும் வென்றவர் தான் யூசுப் அல் கர்தாவி.
கடந்த பல தசாப்தங்களாக கத்தாரில் வாழ்ந்து வந்த அவரின் ஜனாஸா அவர் மரணத்தை தழுவிய மறு தினம் அங்கேயே அடக்கம் செய்யப்பட்டது.
ஜனாஸா ஊர்வலத்தில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கானவர்களில் கத்தார் நாட்டு அதிகாரிகளும் மற்றும் ஹமாஸ் இயக்கப் பிரதிநிதிகளும் அடங்குவர்.
உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்கள் அவருக்கு மரியாதை செலுத்தியதோடு விஷேட தொழுகை மற்றும் துஆ பிரார்த்தனைகளிலும் கலந்து கொண்டனர்.
கத்தாரின் அமீர் ஷேக் அப்துல்லாஹ் பின் ஹமாத் அல் தானி, அவரது பிரதிநிதி ஷேக் ஜாஸிம் பின் ஹமாத் அல் தானி, பிரதம மந்திரியும் உள்துறை அமைச்சருமான காலித் பின்கலீபா அல் தானி, அறநிலையத்துறை அமைச்சர் கஹானம் பின் ஷஹீன் அல் கஹானிம் ஆகியோர் ஜனாஸாவில் பங்கேற்றனர்.
கர்தாவி ஆதரித்த பலஸ்தீன இயக்கத்தின் அரசியல் பணியக ஹமாஸ் தலைவர்
இஸ்மாயில் ஹானியா, ஹமாஸ் புலம்பெயர் அலுவலக (டயஸ்பொரா) தலைவர் கலீத் மெஷாயில், துருக்கியின் சமய விவகார பிரிவு தலைவர் அலி எர்பாஷ் ஆகியோரும் ஜனாஸா ஊர்வலத்தில் பங்கேற்றனர்.
ஜனாஸா நிகழ்வில் உரையாற்றிய ஹானியா “எமது ஷேக், எமது முன்மாதிரியான இவர் பலஸ்தீனத்துக்கு பக்கபலமாக இருந்தவர் அதில் ஒரு அங்குலத்தை கூட விட்டுக் கொடுக்க வேண்டும் என்று அவர் எண்ணவே இல்லை.
ஜிஹாத்தும் போராட்டமும் தான் அதை விடுவிப்பதற்கான ஒரே வழி என அவர் நம்பினார். இந்தக் காரணி தான் பலஸ்தீன தேசத்தின் காரணியாகவும் உள்ளது” என்றார்.
கர்தாவி 1926ம் ஆண்டு செப்டம்பர் 9இல் எகிப்தின் நைல் நதிப் பிரதேசத்தில் உள்ள ஷாபத் துராப் என்ற கிராமத்தில் பிறந்தார். இஸ்லாமிய உலகின் மிகவும் கீர்த்திமிக்க கல்வி நிலையமான கெய்ரோவின் அல் அஸ்ஹர் பல்கலைக்கழகத்தில் அவர் கல்வி பயின்றார்.
அவரது உயர் கல்வி மற்றும் பட்டப் பின் படிப்பு என்பனவற்றை அதே
பல்கலைக்கழகத்தில் முடித்துக் கொண்ட பின் 1973ல் அவர் தனது கலாநிதி பட்டத்தைப் பெற்றுக் கொண்டார்.
எகிப்தில் பிரிட்டிஷ் காலணித்துவ ஆட்சி நிலவிய காலத்தில், கர்தாவி காலணித்துவ எதிர்ப்பு செயற்பாட்டாளராகக் காணப்பட்டார். அதனால் பல தடவைகள் அவர் அரசாங்கத்தால் தடுத்து வைக்கப்பட்டார்.
பின்னர் அவர் இஸ்லாமிய சகோதரத்துவ இயக்கத்தை ஆதரித்தார். இது 1928ல் ஸ்தாபிக்கப்பட்ட எகிப்தின் மிகப் பெரிய இஸ்லாமிய மற்றும் சமூக செயற்பாட்டுக் குழுவாகும்.
இந்தக் குழுவோடு இணைந்தமைக்காக பல தடவைகள் சிறைவாசம் அனுபவித்த பலரில் கர்தாவியும் ஒருவராவார்.
1940களில் மன்னர் பாரூக்கின் ஆட்சியிலும், 1950களில் கமால் அப்துல் நாஸரின் ஆட்சியிலும் இந்த சிறைவாசங்களை அனுபவிக்க வேண்டி இருந்தது.
பின்னர் 1961ல் கர்தாவி கத்தாரில் குடியேறினார். அப்போது புதிதாக
ஆரம்பிக்கப்பட்டிருந்த கத்தார் பல்கலைக்கழகத்தின் ஷரீஆ பீடத்தின் வேந்தராக அவர் நியமிக்கப்பட்டார்.
1968ல் கத்தார் அவருக்கு குடியுரிமையும் வழங்கியது. தோஹாவை தளமாகக் கொண்டு செயற்படும் அல்ஜஸீரா தொலைக்காட்சியின் வழமையான ஒரு அதிதியாகவும் அவர் காணப்பட்டார்.
அந்த தொலைக்காட்சி அலைவரிசையின் ஷரீஆவும் வாழ்வும் என்ற பிரதான சமய நிகழ்ச்சியில் அவர் தோன்றியமை உலகம் முழுவதும் இருந்து இலட்சக் கணக்கான பார்வையாளர்களை ஈர்த்தது.
2011ல் எகிப்திய சர்வாதிகாரி ஹொஸ்னி முபாரக் அரபு எழுச்சியின் மூலம் பதவி
கவிழ்க்கப்பட்ட பின் அவர் எகிப்துக்கு விஜயத்தை மேற்கொண்டார்.
அங்கு அவர் கெய்ரோ எழுச்சியின் மையப் பகுதியாக அமைந்த பிரபலமான தஹ்ரீரி சதுக்கத்தில் 2011 பெப்ரவரி 18ல் இலட்சக் கணக்கானவர்கள் கலந்து கொண்ட ஜும்ஆ தொழுகையை முன்னின்று நடத்தினார்.
பல தசாக்தங்களாக நாடு கடந்து வாழ்ந்து வந்த அவர் அன்று தான் முதல் தடவையாக பொது மக்கள் முன்னிலையில் தோன்றினார்.
எகிப்திய புரட்சிக்குப் பின்னர் அங்கு பாரிய அளவில் சுதந்திரம் மலர்வதற்கான ஒரு அடையாளச் சின்னமாக மக்கள் அநை;த நிகழ்வைக் கருதினர்.
2011 பெப்ரவரி 18 அன்று வெள்ளிக்கிழமை தொழுகைக்காக கூடியிருந்த அந்த மக்கள் சமுத்திரத்தின் முன் உரையாற்றிய அவர் “இந்தப் புரட்சியை உங்களிடம் இருந்து யாரும் திருடிச் செல்ல அனுமதிக்காதீர்கள்.
நயவஞ்சகர்கள் தமக்குப் பொருந்தக் கூடிய ஒரு புதிய முகத்தை இதற்கு சூட்டுவார்கள். புரட்சி இன்னும் முடியவில்லை.
எகிப்தை மீண்டும் கட்டி எழுப்புவற்கான அந்தப் புரட்சி இப்போது தான் தொடங்கி உள்ளது. உங்கள் புரட்சியைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்” என்று கூறினார்.
கர்தாவி ஜனநாயத்தை ஆதரித்ததோடு இஸ்லாமிய ரீதியான அரசியல் குழுக்கள்
தேர்தல்களில் பங்கேற்பதையும் ஊக்குவித்தார்.
பன்முகத்தன்மையை அர்ப்பணத்தோடு ஆதரித்த அவர் சிறுபான்மையினரின் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்பதிலும் உறுதியாக இருந்தார்.
மேலைத்தேச நாடுகளில் வாழும் முஸ்லிம்கள் அந்தந்த நாடுகளின் சட்டங்களை மதிக்க வேண்டும் எனவும் அவர் போதித்தார்.
பெண்களுக்கு அதிக உரிமைகள் வழங்கக்கட வேண்டும் என்பதிலும் அவர் கவனம் செலுத்தினார்.
இஸ்லாமிய சகோதரத்துவ இயக்கத்தின் மீது அவர் அறிவுபூர்வமான செல்வாக்கைக் கொண்டிருந்த போதிலும், அதனை அவர் ஆதரித்த நிலையிலும், அந்த அமைப்பில் முக்கிய பதவிகளை ஏற்குமாறு விடுக்கப்பட்ட பல கோரிக்கைகளை அவர் நிராகரித்தே வந்தார்.
அரபு வசன்தத்துக்கான அவரது ஆதரவு, அமெரிக்கா, ஐரோப்பா, இஸ்ரேல், சவூதி, ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் கத்தாரின் சதியாளர்கள் என்பனவற்றின் உதவியால் பதவியில் அமர்த்தப்பட்ட அப்துல் பதாஹ் அல் சிசி மீதான அவரது எதிர்ப்பு என்பன ஒரு கால கட்டத்தில் தோஹாவுக்கும் ஏனைய பல அரபு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர நெருக்கடி நிலை ஏறபடக் காரணங்களாகவும் சுட்டிக்காட்டப்பட்டன.
கத்தாருடனான இந்த நெருக்கடி 2017ல் ஏற்பட்டு சுமார் நான்கு வருடங்கள் நீடித்தன.
அவர் தோற்றுவித்த இஸ்லாமிய கல்விமான்களின் சர்வதேச யூனியன் அமெரிக்க, ஐரோப்பிய இஸ்ரேலிய சதிகார சக்திகளாலும் எகிப்து, சவூதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் பஹ்ரேன் போன்ற அவர்களின் கைக் கூலிகளாலும் பயங்கரவாத அமைப்பு என பட்டியல் இடப்பட்டது.
தான் முன்வைத்தத இஸ்லாமிய சிந்தனைகள் முஸ்லிம்களையும் முஸ்லிம்
அல்லாதவர்களையும் ஓரணியில் கீழ் கொண்டு வரும் என்றும் அரபுலகில் சர்வாதிகாரமற்ற எதிர்கால ஆட்சிமுறையை உருவாக்கும் என்றும் கர்தாவி நம்பினார்.
சலபிகளின் ஜிஹாதிஸ போக்கையும், மேலைத்தேச மற்றும் இஸ்ரேலிய ஆதிக்கத்தையும் அது எதிர்த்து நிற்கப் போதுமானதாக இருக்கும் என்றும் அவர் நம்பினார்.
கர்தாவி ஜனநாயகத்தை ஆதரித்ததோடு தேர்தல்களில் இஸ்லாமிய அரசியல் குழுக்கள் பங்கேற்பதையும் ஊக்குவித்தார். அல்குவைதா, ஐஎஸ் போன்ற தீவிரப் போக்கு அமைப்புக்களை அவர் எதிர்த்தார்.
பூகோளரீதியான இஸ்லாமியக் கல்விமான்கள், புத்திஜீவிகள் மற்றும் மதகுருமாரை ஒன்றிணைத்த இஸ்லாமியக் கல்விமான்களின் சர்வதேச யூனியனின் ஸ்தாபராகவும் முன்னாள் தலைவராகவும் அவர் திகழ்ந்தார்.
ஷேக் கர்தாவியை இல்லாதொழிக்க எகிப்தின் புதிய இராணுவ நிர்வாகம் தன்னால் முடிந்தளவு முயற்சிகளை மேற்கொண்டது.
ஆனால் எகிப்திய நிர்வாகம் அதில் தோல்வியை கண்டது. அவரைப் பழிவாங்கும் வகையில் அவரது மகள் ஒலா அல் கர்தாவி கைது செய்யப்பட்டு இன்னமும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
2017 ஜுன் 30 முதல் ஒலா அல் கர்தாவி எகிப்திய தனிமை சிறை ஒன்றில் தடுத்து
வைக்கப்பட்டுள்ளார்.
அங்கு அவருக்கு சூரிய வெளிச்சமும் இல்லை, காற்றோட்டமும் இல்லை, பார்வையாளர்களோ அல்லது வேறு மனிதத் தொடர்புகளோ கூட இல்லை.
அவரது நிலைமை மோசமடைந்து வருவதாக அவரின் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
இமாம் யூசுப் அல் கர்தாவிக்கு மகளாகப் பிறந்தததை தவிர அவர் வேறு எந்த குற்றமும் செய்யவில்லை என்று அவரின் குடும்பத்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
அவரோடு சேர்த்து அவரது கணவரும் கைது செய்யப்பட்டார். அவர்கள் இருவரும்
இஸ்லாமிய சகோதரத்துவ இயக்கத்தோடு தொடர்புடையவர்கள் என்று அரச தரப்பு
குற்றம் சாட்டி உள்ளது.
2013ல் இடம்பெற்ற சிசியின் சதிப் புரட்சிக்குப் பின் இந்த இயக்கத்தை எகிப்திய அரசு பயங்கரவாத இயக்கமாகப் பிரகடனம் செய்து தடை செய்துள்ளது.
இந்தக் குற்றச்சாட்டு அரசியல் சாயம் பூசப்பட்டது எனக் கூறி ஒலா அல்
கர்தாவி அதை திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
ஒரு தலைசிறந்த முஸ்லிம் கல்விமானாக அவரை முழு உலகமும் மதித்த போதும்
சவூதியைத் தலமாகக் கொண்டு சவூதி அரசின் ஊது குழலாக செயற்படும் ஆங்கில
தினசரியான அரேப் நிவ்ஸ் “யூசுப் அல் கர்தாவி மரணம் அடைந்து விட்டார் ஆனால்
அவரது விஷம் இன்னும் உயிரோடு உள்ளது” என்று தலைப்பிட்டுள்ளது.
இஸ்லாத்தினதும் முஸ்லிம்களினதம் காவலன் என தன்னைத் தானே அழைத்துக்
கொள்ளும் சவூதி அரேபியாவின் வெட்கக் கேடான இன்றைய நிலை இதுதான்.