இரண்டாவது தடவையாக பரீட்சை எழுதவுள்ள மாணவர்களின் நலன்கருதி உயர்தரப் பரீட்சையை பிற்போடுவது தொடர்பில் ஆலோசிக்கவுள்ளதாக கல்வியமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்தார்.
அண்மையில், வெளியான உயர்தரப் பெறுபேறுகளுக்கு அமைய, போதியளவு பெறுபேறினை பெறாத மாணவர்களுக்கு, இரண்டாவது தடவையாக பரீட்சை எழுத தயார்படுத்துவதற்கான காலம் போதுமானதாக இல்லை என இன்றைய பாராளுமன்ற அமர்வில் தெரிவிக்கப்பட்டது.
எனவே, மறுமுறை உயர்தரப்பரீட்சைக்கு தயாராகும் மாணவர்களுக்கு, தயார்படுத்தல்களுக்காக மேலதிக கால அவகாசம் தேவையென பாராளுமன்ற உறுப்பினர்களான ரோஹினி கவிரத்ன, உதித்த பிரேமரத்ன மற்றும் ஹேஷா விதானகே உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்தனர்.
முன்னதாக, முதல் தடவை உயர்தரப்பரீட்சைக்கு தோற்றி, பெறுபேறின் பின்னர் இரண்டாவது முறையாகவும் பரீட்சைக்கு தயாராவதற்கு மாணவர்களுக்காக 200 நாட்கள் வரை கால அவகாசம் இருந்தது.
எனினும், தற்போது, வெறுமனே 98 நாட்கள் மாத்திரமே இருப்பதாகவும், அந்த நாட்கள் மாணவர்களுக்கு மீள பரீட்சைக்கு தோற்ற தம்மை தயார்படுத்துவதற்கு போதுமானதாக இல்லையென தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் உத்திக்க பிரேமரத்ன, மேலதிக கால அவகாசம் தேவையென குறிப்பிட்டார்.
இதற்கு பதிலளித்த கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தற்போதைய சூழ்நிலையில் பரீட்சையை பிற்போடுவது கடினம்.
அவ்வாறு செய்வது பரீட்சைக்கு தயாராகியுள்ள ஏனைய மாணவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும்.
அத்துடன், பரீட்சையை பிற்போடுவதால், பாடசாலைகளை ஆரம்பிக்கும் காலம் தாமதமாகும், அதனால் இலட்சக்கணக்கான மாணவர்களின் கல்வியை பாதிக்கும்.
ஏற்கனவே, மாணவர்களுக்கு கடந்த 2 வருடங்களாக கல்விக்கு தொடர்ந்தும் இடையூறு ஏற்பட்டு வருகிறது.
மேலும் அடுத்த வருடத்துக்கு நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள பரீட்சைகளிலும் மாற்றம் ஏற்படுத்த வேண்டி ஏற்படும் என்றார்.
எவ்வாறாயினும் கோரிக்கைகளை ஆராய்ந்து, பரீட்சை பிற்போடுவது சாத்தியமா என்பது குறித்து பரீட்சை ஆணையாளர் நாயகத்துடன் ஆலோசிக்கவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்தார்.