சட்டக்கல்லூரியில் சேரும் மாணவர்கள் ஆங்கில வழிக்கல்வி மூலம் கல்வி கற்க வேண்டும் என்ற தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்யுமாறு ஐக்கிய மக்கள் சக்தியினர் இன்று பாராளுமன்றத்தில் ஆளும் கட்சியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே, நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ இது தொடர்பில் கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொண்டார்.
இதன்போது ஆங்கிலத்திலுள்ள வினாக்களை கற்றறிய புரிதல்கள் உள்ள போதிலும், விடையளிக்க போதியளவு ஆங்கில அறிவு இல்லை என மாணவர்கள் தெரிவித்துள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.
எவ்வாறாயினும் சட்டக்கல்வி பேரவையுடன் கலந்துரையாடி சிறந்த தீர்வொன்றினை பெற்றுத்தருவதாக அமைச்சர் விஜயதாச ராஜபக்ச மேலும் தெரிவித்தார்.
எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளரான பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்லவும் இந்த உரையாடலில் கலந்து கொண்டு, குறித்த தீர்மானத்தின் மூலம் கிராமப்புற சிறுவர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாக தெரிவித்தார்.
இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றினால் நாடே முடக்கப்பட்டிருந்த நிலையில், ஆங்கில மொழியிலேயே சட்டக்கல்விக்கான அனுமதி பரீட்சையை நடத்தப்படும் என வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டமையானது பாரிய பிரச்சினைக்குரிய விடயமாகும் என லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
சட்டக்கல்லூரியில் ஆங்கில வழியில் கல்வி கற்பது தொடர்பாக முன்னாள் நீதி அமைச்சர், வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரியும் இன்று பாராளுமன்றத்தில் கருத்து வெளியிட்டார்.
இதேவேளை, மருத்துவ பீடத்திற்கு தெரிவாகும் தமிழ் மற்றும் சிங்கள மாணவர்கள் ஆங்கில மொழியிலேயே தங்களுடைய பட்டப்படிப்பினை நிறைவு செய்கின்றனர் என அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.
1956 ஆம் ஆண்ட தவறிழைத்திருந்தால் அதனை திருத்துவதற்கான சந்தர்ப்பத்தினை வழங்கி தவறினை அடியொற்ற வேண்டாம் என கேட்டுக்கொள்வதாக அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.