ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண குழு 1 சுப்பர் 12 சுற்றிலிருந்து அரை இறுதிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும் வகையில் 2 வெற்றிப் புள்ளிகளை பெறுவதைக் குறிக்கோளாகக் கொண்டு நியூஸிலாந்தும் இலங்கையும் சிட்னி கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று (29) ஒன்றையொன்று எதிர்த்தாடவுள்ளன.
இப்போட்டி இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 1.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இக்குழுவில் 3 போட்டிகள் மழையினால் கைவிடப்பட்டதால் இப் போட்டியில் நியூஸிலாந்து வெற்றிபெற்றால் 2 புள்ளிகள் வித்தியாசத்தில் முதலிடத்தைப் பெறும். இலங்கை வெற்றி பெற்றால் அவ்வணி 4 புள்ளிகளுடன் முதலாம் இடத்திற்கு முன்னேறும்.
இக் குழுவில் தற்போது நியஸிலாந்து, இங்கிலாந்து, அயர்லாந்து, அவுஸ்திரேலியா ஆகியன தலா 3 புள்ளிகள் பெற்றுள்ளன. ஆனால், நிகர ஓட்டவேக அடிப்படையல் அந்த நான்கு அணிகளும் முறையே முதல் நான்கு இடங்களை வகிக்கின்றன.
இலங்கையும் ஆப்கானிஸ்தானும் தலா 2 புள்ளிகளுடன் முறையே கடைசி இரண்டு இடங்களில் இருக்கின்றன.
அயர்லாந்துக்கு எதிரான ஆரம்பப் போட்டியில் வெற்றிபெற்ற இலங்கை, அடுத்த போட்டியில் மத்திய வரிசை துடுப்பாட்டத்திலும் பந்துவிச்சிலும் இழைத்த தவறுகளால் நடப்பு சம்பியன் அவுஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்தது.
இந்தப் போட்டியிலும் இலங்கை தோல்வி அடைந்தால் அதன் அரை இறுதி வாய்ப்பு பெரும்பாலும் அற்றுப் போகக்கூடும். எனவே நியூஸிலாந்தை வெற்றிகொள்வதற்கு சகலதுறைகளிலும் அதி சிறந்த ஆற்றல்களை இலங்கை வெளிப்படுத்துவது அவசியமாகும்.
அணிகள்
இலங்கை: பெத்தும் நிஸ்ஸன்க, குசல் மெண்டிஸ், தனஞ்சய டி சில்வா, சரித் அசலன்க, பானுக்க ராஜபக்ஷ, தசன் ஷானக்க (தலைவர்), வனிந்து ஹசரங்க, சாமிக்க கருணாரட்ன, மஹீஷ் தீக்ஷன, லஹிரு குமார, கசுன் ராஜித்த அல்லது அசித்த பெர்னாண்டோ.
நியூஸிலாந்து: டெவொன் கொன்வோய், பின் அலன், கேன் றிச்சர்ட்சன் (தலைவர்), டெரில் மிச்செல், க்லென் பிலிப்ஸ், ஜெம்ஸ் நீஷாம், மிச்செல் சென்ட்னர், இஷ் சோதி, டிம் சௌதீ, ட்ரென்ட் போல்ட், லொக்கி பேர்குசன்.