இலங்கைக்கு கோதுமை மாவை இறக்குமதி செய்யும் பிரதான நிறுவனங்களான ப்ரீமா மற்றும் செரண்டிப் மாவின் விலையை குறைத்தால், பாண் உள்ளிட்ட ஏனைய பொருட்களின் விலைகள் குறைக்கப்படும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இரண்டு நிறுவனங்களும் மாவின் விலையை குறைக்காததால், அவர்களாலும் விலையை குறைக்க முடியாது என அதன் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்தார்.
இறக்குமதி செய்யப்படும் கோதுமை மாவின் மொத்த விலையை 85 ரூபாவினால் குறைக்க அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
முன்னதாக, இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ கோதுமை மாவின் மொத்த விலை 375 ரூபாவாக இருந்தது. விலை குறைப்புடன், கோதுமை மாவின் புதிய மொத்த விலை கிலோ ஒன்றுக்கு 290 ரூபாவாகும்.
எனினும், இறக்குமதி செய்யப்படும் கோதுமை மாவின் விலை குறைக்கப்பட்டாலும், பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலையை குறைக்க முடியாது என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பேக்கரி உற்பத்திகளின் விலை குறைப்பு தொடர்பில் சிறிய மற்றும் நடுத்தர பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தினால் அழைப்பு விடுக்கப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றது.
இதன்போது நாடளாவிய ரீதியில் பல்வேறு விலைகளில் கோதுமை மா விற்பனை செய்யப்படுவதால் பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலையை குறைக்க முடியாது என அதன் தலைவர் கமல் பெரேரா தெரிவித்துள்ளார்.