அக்கரபத்தன பெருந்தோட்ட நிறுவனத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார இலங்கை தொழிலாளர் காங்கிரஸை பேச்சுவார்த்தைக்கு அழைத்திருந்தார்.
அக்கரபத்தன பெருந்தோட்ட நிறுவனத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கைக்கு தீர்வு காணும் நோக்கில், தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்காரவிற்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமானுக்கும் இடையிலான குறித்த கலந்துரையாடல் தொழில் அமைச்சில் நேற்று (29) இடம்பெற்றது.
இதன்போது, அக்கரபத்தனை பெருந்தோட்ட நிறுவனத்திற்கு கீழ் இயங்கும் தோட்டங்களில், தோட்ட நிர்வாகம் தொழிலாளர் சட்டத்தை மீறுவதுடன், தொழிலாளர்கள் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுப்பதாக இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் குற்றம்சாட்டினார்.
மேலும் அனைத்து தோட்டங்களிலும் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கப் பெற்றால் மாத்திரம் தோட்ட நிர்வாகம் வழமைபோல் செயற்படுவதற்கு இ.தொ.கா ஒத்துழைப்பு வழங்கும் எனவும் தெரிவித்தார்.
மனுஷ நாணயக்கார அக்கரப்பத்தன பெருந்தோட்ட நிறுவனத்தின் கீழ் பணிபுரியும் 10,000 தோட்ட தொழிலாளர்கள் வழமைபோல் செயற்பட தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அக்கரப்பத்தன பெருந்தோட்ட நிறுவனம் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் எனவும், இ.தொ.கா சுட்டிக்காட்டிய தொழிலாளர் முறைப்பாடுகள் தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு தொழில் திணைக்களத்திற்கு பணிப்புரை விடுத்தார்.