ஹொரணை, றைகம பிரதேசத்தில் உள்ள பாடசாலையில் தரம் 5 இல் கல்வி கற்கும் மூன்று மாணவர்களை , பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவொன்று, பொல்லுகளால் தாக்கியுள்ளதாக தெரிய வந்துள்ளது.
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்குக் இது தொடர்பில் முறைப்பாடு கிடைத்துள்ளது.
ஹொரண பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் ஐந்தாம் வருடத்தில் கல்வி கற்கும் மூன்று மாணவர்களை அதிபரின் அனுமதியுடன் பொலிஸ் அதிகாரிகள் குழுவினால் பாடசாலைக்கு வெளியே அழைத்துச் சென்றுள்ளனர்.
இதனையடுத்து குறித்த மாணவர்களை மண்டியிட்டு, உள்ளங்காலில் தாக்கி, மின்சாரத்தால் தாக்கியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை, அதிபர், ஆசிரியர் மற்றும் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களை நாளை நிறுவனத்தில் முன்னிலையாகுமாறு அறிவித்துள்ளது.
இது தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்கவிடம் வினவிய போது, சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதையடுத்து, நேற்று (6) மாணவர்களைப் பரிசோதித்த சட்ட மருத்துவ அதிகாரி அவர்கள் கொடூரமாக தாக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைத் தலைவர் உதய அமரசிங்கவுக்கு தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பான உண்மைகளை நாளை (8) நீதிமன்றில் அறிவிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.