மகாகவி அல்லாமா இக்பாலின் 145 ஆவது பிறந்த தினம் இன்று.
பிரிட்டிஷ் இந்தியாவில் இன்றைய பாகிஸ்தான் லாகூரில் பிறந்த மகா கவி இக்பாலின் பிறந்த தினத்தை வருடா வருடம் பாகிஸ்தான் விமரிசையாக கொண்டாடுகிறது.
இக்பாலின் மூதாதையர்கள் காஷ்மீரை சேர்ந்த பிராமணர்கள். வேறெந்த உலக மகா கவியையும் விட விரிந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர் இக்பால்.
காரணம் அவர் மகா கவி மட்டுமின்றி மகத்தான சிந்தனையாளரும் கூட.
பிறிதொரு வகையில் கூறுவது எனில் கவிதையை ஊடகமாக கொண்ட சிந்தனையாளர் அவர்.
இக்பாலின் தத்துவ சட்டகத்தின் ஒரேயொரு கூறை மட்டும் அதுவும் மிகவும் மேலோட்டமாக இக்பால் தினமான இன்று – நான் புரிந்து கொண்ட வகையில் – கூறலாம் என்று நினைக்கிறேன்.
லண்டனில் பாரிஸ்டர் பட்டமும், ஜெர்மனியில் தத்துவத்தில் கலாநிதிப் பட்டம் பெற்றவர் மகா கவி அல்லாமா இக்பால்.
மேலைத்தேய தத்துவத்துக்குள் ஆழ்ந்து இறங்கியவர் இக்பால். குறிப்பாக பிரடெரிக் நீட்ஷேவை கரைத்துக் குடித்தவர். தன் காலத்திய ஐரோப்பிய சிந்தனையாளர்களுடன் ஓயாது உரையாடிய இக்பால் கிழக்கின் அன்பை மேற்கின் பகுத்தறிவுடன் இணைக்கும் அறைகூவல் விடுத்தவர்.
இத்தனை இருந்தாலும் மேலைத்தேய சிந்தனையின் அடிப்படை கட்டுமானங்களை இக்பால் ஏற்றுக் கொள்ளவில்லை.
அவற்றை விமர்சன பூர்வமாகவே அவர் அணுகினார். இஸ்லாமிய ஆத்மீக கட்டமைப்பான தஸவ்வுஃப் இனால் ஆழ்ந்த சிந்தனை பாதிப்பு பெற்றவர் இக்பால்.
மனித அறிவினால் புரிந்து கொள்ள முடியாதவற்றையும் ஆத்மீக கண்ணோட்டத்தினால் புரிந்து கொள்ள முடியும் என்பது தான் தஸவ்வுஃப் என்பதன் அர்த்தம்.
இந்த கண்ணோட்டத்தின் அடியாகவே இஸ்லாமிய நாகரீகம் வரலாறு நெடுகிலும் ஏனைய கலாசாரங்களுடனும், சமூகங்களுடனும் உரையாடி வந்துள்ளது.
இந்த ஆத்மீக கண்ணோட்டத்தின் Essence இனை இஸ்லாமிய நாகரீகம் எப்போதுமே விட்டுக் கொடுத்ததில்லை.
ஆனால் ஐரோப்பிய மறுமலர்ச்சி ஆர்ப்பரிக்கும் அலையாக இஸ்லாமிய உலகினுள் புகுந்த பொழுது அதன் (ஐரோப்பிய நாகரீகத்தின்) கட்டுத்தளையற்ற பகுத்தறிவின் (Autonomous Rationality) செல்வாக்கு முதன் முறையாக இஸ்லாமிய நாகரீகம் இவ்வளவு காலமாக செயல்பட்டு வந்த ஆத்மீக கண்ணோட்டத்தின் அடித்தளத்தை பலமாக அசைத்தது.
காரணம் 17 ஆம் நூற்றாண்டிற்கு பிறகு முஸ்லிம்கள் அறிவு, நாகரீக ரீதியாக வீழ்ச்சி நிலையில் இருந்தார்கள். இதர நாகரீக சவால்களை எதிர் கொள்ளும் வலிமை முஸ்லிம்களின் கோட்பாட்டு சட்டகத்திற்கு இருக்கவில்லை.
இந்நிலையில் தான் அல்லாமா இக்பால் மேற்கின் சிந்தனை சட்டகத்தினை இஸ்லாமிய ஆத்மீக கண்ணோட்டத்தின் அடிப்படையில் எதிர் கொண்டார். அதற்கு அவர் செய்த முதல் வேலை அவர் மேலைத்தேய நாகரீகத்தின் நிர்மாணிகளாக இருந்தவர்களின் ஆக்கங்களை ஆழ்ந்து கற்றது.
சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் போன்ற உயர் மானிட விழுமியங்களில் நம்பிக்கை கொண்ட இக்பால் இந்த அடிப்படையில் மேலைத்தேய நாகரீகத்துடன் ஒரு உரையாடலை மேற்கொண்டார்.
ஆனால் அதே நேரத்தில் அவர் இஸ்லாமிய கண்ணோட்டத்தின் தனித்துவத்தை விட்டுக் கொடுத்தது இல்லை. அதுதான் நாம் புரிந்து கொள்ள வேண்டிய அம்சம். இந்த இடத்தில் மேலைத்தேய நாகரீகத்தினை எப்படி எல்லாம் இக்பால் எதிர் கொண்டார் என்று நான் விளக்க நினைக்கவில்லை. ஏனெனில் நானே அந்த வகையில் ஆரம்ப நிலையிலேயே இருக்கிறேன். விரிவும் ஆழமும் கூடும் பொழுது அவை குறித்து எல்லாம் எழுதவே அவா.
ஏ. எம். ஏ அஸீஸ் அதிபராக கடமை புரிந்த காலத்தில் இக்பால் தினம் என்று கொழும்பு சாஹிரா கல்லூரியில் கொண்டாடுவார்களாம்.
இன்றும் அந்த மரபு தொடர்கிறதா என்று தெரியவில்லை. ஆனால் வாழும் மகா கவியான அல்லாமா இக்பாலின் நினைவுகளை மாணவர் மனதில் பதிக்க அதுவொரு சிறந்த வழிமுறை என்பதில் சந்தேகம் இல்லை.
ஒரு முறை யூசுப் முப்தி அவர்கள் இப்படிக் கூறினார்கள். “தாடி இல்லாத இரண்டு ரஹிமஹுல்லாக்கள் இஸ்லாத்திற்கு மிகப் பாரிய பணிகளை செய்திருக்கிறார்கள். அவர்கள் மிகப்பெரிய தாஈக்கள். அதில் ஒருவர் தான் மகா கவி அல்லாமா இக்பால் அவர்கள்” என்றார
யூசுப் முப்தியுடைய பரிபாஷை பொதுவாக இலங்கையில் பலருக்கு புரியும் என்பதால் தான் அவர் கூறிய ஒரு வார்த்தையை இந்த இடத்தில் மேற்கோள் காட்டினேன். இந்த கருத்தை ஒரு பொது பயான் நிகழ்ச்சியில் அவர் குறிப்பிட்டார். இறைவன் அவருக்கு தௌபீக் செய்வானாக!
டாக்டர் அல்லாமா முகமது இக்பால் அவர்களின் 145வது பிறந்தநாளை முன்னிட்டு – இக்பால் தினம் – நவம்பர் 9 ஆம் தேதி (புதன்கிழமை) நாடு முழுவதும் பொது விடுமுறையாக பாகிஸ்தான் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.
துணைக்கண்டம் முழுவதிலும் உள்ள மில்லியன் கணக்கான முஸ்லிம்களை அவர்கள் சுதந்திரமாக இஸ்லாத்தை கடைப்பிடிக்கக்கூடிய ஒரு சுதந்திர தாயகத்தை தேடுவதற்கு ஊக்குவிப்பதில் டாக்டர் இக்பால் முக்கிய பங்கு வகித்தார்.
பாகிஸ்தான் மற்றும் உலகின் பிற பகுதிகளில் “கிழக்கின் கவிஞர்” என்று அழைக்கப்படும் டாக்டர் இக்பால் நவம்பர் 9, 1877 இல் சியால்கோட்டில் பிறந்தார்.
இக்பால் ஒரு புகழ்பெற்ற கவிஞர் மற்றும் தத்துவவாதி. முஸ்லிம்களுக்கென தனியான தாயகம் அமைக்கக் கோரி தனது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்திக் கவிதைகள் எழுதிய பெருமைக்குரியவர்.
அவரது 1930 அலகாபாத் உரை பிரிவினைக்கு முந்தைய அரசியலில் ஒரு முக்கியமான தருணம். அல்லாமா இக்பாலின் பேச்சு, பாகிஸ்தானை அடைய துணைக்கண்ட முஸ்லிம்களுக்கு தெளிவான வழிகாட்டுதலையும் தனி அடையாளத்தையும் அளித்தது.
இவருடைய தஃவா வழிமுறைகள், இவரிடம் இருந்த ஆளுமைகளை, தனது கவிதைகளால் எப்படி மக்களைக் கவர்ந்தார் போன்ற விடையங்கள் பேசப்பட வேண்டியவை. அவரது பிறந்த நாளான இன்றில் அவரைப் பற்றி அறிந்து கொள்வோம்.
“உண்மை விசுவாசியின் அடையாளத்தை நான் சொல்கிறேன்; மரணம் வரும் காலையில் அவன் வதனம் மலர்ச்சியுற்றிருக்கும்” என்றார். அந்நாள் 1938ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி உலகம் போற்றும் சர்வதேசியக் கவிஞர் இக்பால் அவர்கள் தனது 65ஆம் வயதில் லாகூரில் உயிர் நீத்தார்.
எளிமையாகவும் பணிவாகவும் வாழ்ந்தவர். தன்னை பக்கீர் (ஏழை) என்றே அழைத்துக்கொண்டார். கவிஞன் என்று தன்னைப் பிரஸ்தாபிப்பதை அவர் விரும்பவில்லை. அவரது கவிதைகள் இன்றும் தூங்கிக்கிடக்கும் உள்ளங்களை உசுப்பி விடுபனவாய் உள்ளன.