சர்வதேச நாணய நிதியத்திடம் (IMF) ஓய்வூதியத்துடன் 2.5 மில்லியன் ரூபா சம்பளம் பெறுவதாக கூறியதை மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மறுத்துள்ளார்.
இன்று (24) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பல அரசியல்வாதிகள் பல சந்தர்ப்பங்களில் வெளியிட்ட கருத்துக்களுக்கு பதிலளிக்கும் போதே மத்திய வங்கியின் ஆளுநர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை என அவர் வலியுறுத்தியுள்ளார்.
“சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து நான் எந்த ஓய்வூதியத்தையும் பெறவில்லை. இதை பொறுப்புடன் சொல்கின்றேன். ஏதோ ஒரு வகையில் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக நான் சர்வதேச நாணய நிதியம் மற்றும் எமது மத்திய வங்கிக்குச் சென்றேன். எல்லோருக்கும் கிடைக்கும் சம்பளத்தையே நானும் பெற்றிருக்கிறேன். ஆனால் எனக்கு ஓய்வூதியம் கிடைக்காது என்பதை தெளிவுபடுத்துகிறேன்” என்றார்.
மத்திய வங்கியின் ஆளுநராக தாம் பெறும் சம்பளம் தொடர்பிலும் அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.
மத்திய வங்கியின் ஆளுநர் என்ற வகையில் தமக்கு 4 இலட்சம் ரூபா மாதாந்த சம்பளம் கிடைப்பதாகவும், அதற்கு முன்னர் தாம் பெற்ற ஓய்வூதியத்தை பெற்றுக் கொள்வதாகவும் ஆளுநர் என்ற வகையில், உத்தியோகபூர்வ கார் மற்றும் வசிப்பிடத்திற்கான உரிமை எனக்கு உள்ளது,” என்று அவர் கூறினார்.