சீன சேதன பசளை தொடர்புடைய பிரச்சினையில், இராஜதந்திர தீர்வைப் பெற்றுக்கொள்ள வெளிவிவகார அமைச்சு இணக்கம் வெளியிட்டுள்ளது.
விவசாய அமைச்சில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இந்த முடிவை அறிவித்தார்.
கடந்த ஆண்டு இலங்கைக்கு இறக்குமதி செய்ய்பட்ட சீன சேதன உரக் கப்பலுக்கு இலங்கை செலுத்திய 6.7 மில்லியன் டொலர் நிதி தொடர்பில், இரு நாடுகளுக்கும் இடையே இராஜதந்திர ரீதியில் தீர்வைப் பெற்றுக்கொள்ள கலந்துரையாடல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
வெளிவிவகார அமைச்சர் மற்றும் விவசாய அமைச்சர் ஆகியோரின் தலைமையில், இதனுடன் தொடர்புடைய அனைத்து தரப்பினரும் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றுள்ளனர்.
சீன சேதன பசளை தாங்கிய கப்பல் தொடர்பில் ஏற்பட்ட சர்ச்சைக்குரிய நிலையை தீர்ப்பதற்காக, வெளிவிவகார அமைச்சின் விசேட அதிகாரி ஒருவரை, வெளிவிவகார அமைச்சர் இதன்போது நியமித்துள்ளார்.
அந்த அதிகாரி, தேவையான அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்குவார் என விவசாய அமைச்சின் அதிகாரிகளுக்கு அறியப்படுத்தியுள்ளார்.
இலங்கை மற்றும் சீன அரசாங்கங்களுக்கிடையிலான நீண்டகால நட்புறவை சேதப்படுத்தாத வகையில் இப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு வெளிவிவகார அமைச்சரின் ஆதரவை வழங்குமாறும் இதுபோன்ற நிலை, மீண்டும் நிகழாதிருப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும் என விவசாய அமைச்சர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.