ஆப்கானிஸ்தானில் உள்ள அனைத்து உள்ளூர் மற்றும் வெளிநாட்டு அரசு சாரா நிறுவனங்களும் (என்.ஜி.ஓ), பெண்களை வேலைக்கு அமர்த்துவதை நிறுத்தவேண்டும் என்று தலிபான் அரசாங்கம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தலிபான்கள் ஆட்சிப் பொறுப்பில் உள்ள ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
பெண்களுக்கு பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி பயிலவும் சமீபத்தில் தடை விதிக்கப்பட்டது.
இதற்கு மாணவ, மாணவிகள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் என பல தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் போராட்டத்தில் குதித்தனர். சர்வதேச அளவிலும் இதற்கு எதிர்ப்புகள் கிளம்பியது.
ஆங்காங்கே போராட்டம் நடைபெறுவதால் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
தலிபான் அரசு தனது கொள்கையில் உறுதியாக உள்ளது. இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் உள்ள அனைத்து வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு அரசு சாரா நிறுவனங்களும் (என்.ஜி.ஓ), பெண்களை வேலைக்கு அமர்த்துவதை நிறுத்தவேண்டும் என தலிபான் அரசாங்கம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
இது தொடர்பாக பொருளாதார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அப்துல் ரஹ்மான் ஹபீப் உறுதிப்படுத்தியுள்ள கடிதத்தில்,
பெண்களுக்கான இஸ்லாமிய ஆடைக் குறியீடு குறித்த நிர்வாகத்தின் விளக்கத்தை சிலர் கடைப்பிடிக்காததால், மறு அறிவிப்பு வரும் வரை பெண் ஊழியர்கள் வேலை செய்ய அனுமதிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.
இந்த உத்தரவு ஆப்கானிஸ்தானில் அதிக அளவில் இருக்கும் ஐக்கிய நாடுகளின் நிறுவனங்களுக்குப் பொருந்துமா என்பது தெரியவில்லை.