இலங்கை மின்சார சபையின் கடந்தகால நஷ்டத்தை ஈடுசெய்யும் வகையில் மின்கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டை முற்றாக நிராகரிப்பதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலங்களில் ஏற்பட்ட நட்டத்தை ஈடுசெய்யும் வகையில் மின்சார கட்டணத்தை பெருமளவு அதிகரிக்க வேண்டும் என கஞ்சன விஜேசேகர இங்கு குறிப்பிட்டார்.
கடந்த காலத்தில் ஏற்பட்ட நட்டத்தை ஈடுகட்டுவதற்கு அரசாங்கமோ, மின்சார சபையோ அல்லது ஏனைய நிறுவனங்களோ மின்சாரக் கட்டணத்தில் திருத்தங்களை மேற்கொள்ள முன்வரவில்லை.
இந்த மின் கட்டணத் திருத்தம், 2023-ல் நாம் கருதிய செலவிற்கு ஏற்ப கட்டணத் திருத்தம் மட்டுமே. மின்சாரக் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ள எடுக்கப்பட்ட தீர்மானம் எந்தவொரு தனிநபரின் தனிப்பட்ட தீர்மானம் அல்ல என்றும் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
எதிர்வரும் ஆண்டில் தொடர்ச்சியாக மின்சாரத்தை வழங்குவதற்காக மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான 20 முறைகளின் கீழ் இலங்கை மின்சார சபை முன்மொழிவுகளை சமர்ப்பித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
மின்சார சபைக்கு கடந்த காலங்களில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்டுவதற்கு அமைச்சருக்கு இருக்கும் ஒரே தீர்வு மின்சார கட்டணத்தை அதிகரிப்பதே என கலாநிதி ஓமல்பே சோபித தேரர் நேற்று தெரிவித்திருந்தார்.