ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதலின் சூத்திரதாரியாக அடையாளம் காணப்பட்ட சஹ்ரான் ஹாசிமுடன் தொடர்பில் இருந்ததாகக் கூறப்படும் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ஒருவரை இந்திய தேசியப் புலனாய்வு அமைப்பு கைது செய்துள்ளது.
தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் குண்டுவெடிப்பில் சந்தேக நபர்களுடன் தொடர்பு இருப்பதாகக் கூறி அவர் புதன்கிழமை கைது செய்யப்பட்டதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் என்ற இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
இதற்கிடையில், நாட்டில் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தும் திட்டங்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சனோபர் அலி என அடையாளம் காணப்பட்ட மற்றொரு நபர் பெடரல் ஏஜென்சியால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் கைது செய்யப்பட்ட ஷேக் ஹிதாயத்துல்லா, ஈஸ்டர் குண்டுவெடிப்புக்கு மூளையாக செயல்பட்ட சஹ்ரான் ஹாசிமுடன் தொடர்பு வைத்திருந்ததாக இந்திய தேசிய புலனாய்வு முகமை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சந்தேகநபர்கள் இருவரும் தமிழக மாநிலத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறித்த இணையதளம் சுட்டிக்காட்டியுள்ளது.
2017 முதல் ஐ.எஸ் சித்தாந்தத்தை பிரசாரம் செய்து வரும் ஹிதாயத்துல்லா, இதற்கு முன்பு அசாருதீனுடன் 2019 ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் 2020 இல் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கில் அசாருதீனும், கேரளா-தமிழ்நாடு ஐ.எஸ் அமைப்பின் தலைவரும் தற்போது சிறையில் இருப்பதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
அவர்கள் சஹ்ரான் ஹாசிமினால் ஈர்க்கப்பட்டு, ஈஸ்டர் தாக்குதலின் போது தென்னிந்தியாவின் இரண்டு மாநிலங்களில் இதேபோன்ற தாக்குதல்களை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.