சீனாவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை இனி தனிமைப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என்று சீன அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
அடுத்த ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி முதல் சுற்றுலாப் பயணிகளின் தனிமைப்படுத்தலை முடிவுக்குக் கொண்டுவருவதாக சீனா திங்களன்று அறிவித்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சீனா தனது கடுமையான கொவிட் கொள்கைகளை தளர்த்தும் நடவடிக்கையாக இந்த முடிவை எடுத்துள்ளது.
மார்ச் 2020 முதல், சீனாவுக்கு வரும் பயணிகள் நியமிக்கப்பட்ட ஹோட்டலில் 14 நாள் தனிமைப்படுத்தலுக்குட்பட்டுள்ளனர்.
சில சுற்றுலா பயணிகளுக்கு 21 நாட்கள் வரை நீட்டிக்கவும் அதிகாரிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.
தற்போதைய நிலைமையின் படி, அதிகாரிகளால் கட்டுப்படுத்தப்படும் வசதியில் ஐந்து நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும், அதைத் தொடர்ந்து மூன்று நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட வேண்டும்.
சீனாவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு 48 மணி நேரத்திற்குள் கொரோனா தொற்று இல்லை என்ற அறிக்கையை காட்டினால் போதுமானது என ஆணையம் தெரிவித்துள்ளது.
கொரோனா சட்டங்கள் தளர்த்தப்பட்ட போதிலும், சீனாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
மேலும் சமீபத்தில் உலக சுகாதார அமைப்பும் நாட்டின் மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பியுள்ளதாக குறிப்பிட்டிருந்தது.