149 பாடசாலைகளை மையப்படுத்தி பொலிஸாரால் விஷேட சுற்றி வளைப்பு: போதைப் பொருட்களுடன் 47 சந்தேகநபர்கள் கைது!

Date:

மேல் மாகாணத்தில் 149 பாடசாலைகளை மையப்படுத்தி அதனை அண்டிய பகுதிகளில் விஷேட சுற்றி வளைப்பு நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். நேற்று முன்தினம் (22) காலை 6.30 மணி முதல் 8.00 மணி வரையில் ஒரு சுற்றி வளைப்பினையும் நண்பகல் 12.00 மணி முதல்  பி.ப. 2.00 மணி வரை மற்றொரு சுற்றி வளைப்பினையும் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

இதன்போது விஷ போதைப் பொருட்கள் மற்றும் ஏனைய போதைவஸ்துக்கள் கலந்த பொருட்களுடன் 47 பேர் பொலிஸாரால் சந்தேகத்தின் பேரில் கைதுச் செய்யப்பட்டுள்ளனர். இந்த சுற்றி வளைப்புக்களின் போது 2,038 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருளும், 9,630 மில்லிகிராம்  ஹெரோயின் போதைப் பொருளும், 200 கிராம் கஞ்சாவும் , போதை வஸ்துக்கள் கலந்த மாவா உள்ளிட்ட பெயர்களால் அறியப்படும் தூள் வகை 1 கிலோ 260 கிராமும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ குறிப்பிட்டார்.

இந்த சிறப்பு நடவடிக்கைகளின் போது பாடசாலைகளுக்குள்   எந்த நடவடிக்கைகளும் பொலிஸார் முன்னெடுக்கவில்லை. பாடசாலைகளை சூழவுள்ள 996 வர்த்தக நிலையங்கள் சோதனைச் செய்யப்பட்டன. 255 பெட்டிக் கடைகள் சோதனைச் செய்யப்பட்டன. 239 நடைபாதை வியாபாரிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.  பாடசாலை மாணவர்களின் போக்குவரத்துக்கு பயன்படுத்தும் வாகனங்கள் உள்ளிட்ட 998 வாகங்கள் சோதனை செய்யப்பட்டன.

இதனைவிட பாடசாலை ஆசிரியர்கள்,  பெற்றோர், மாணவர்கள் என 7,850 பேர் இது குறித்து விழிப்புணர்வுக்காக அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையிலேயே பொலிஸார் 47 பேரை கைது செய்தனர் என  பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

இதனிடையே நிட்டம்புவ பகுதியில் பாடசாலை ஒன்றின் மாணவன் ஒருவன் இந்த சுற்றிவளைப்பின் போது கஞ்சாவுடன் கைதுச் செய்யப்பட்டுள்ளார்.  அவருக்கு கஞ்சா வழங்கிய நபர் மற்றும் அதனை விற்பனைச் செய்த மற்றொரு நபரையும் கைது செய்துள்ள நிட்டம்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடாத்துகின்றனர்.

இதனிடையே, பாடசாலைகளுக்குள்  நுழைவது மற்றும் மாணவர்களை  சோதனைச் செய்வது தொடர்பில் கடைப்பிடிக்க வேண்டிய அறிவுறுத்தல்கள் தொடர்பில் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன அனைத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிக்ஹால் தல்துவவின்  தகவல்களின் பிரகாரம்,  எக்காரணம் கொண்டும் உறுதியான தகவல்கள் இன்றி, அதிபர், ஆசிரியர்களின் கோரிக்கைகள் இன்றி பொலிஸார் பாடசாலைகளில் தேடுதல் நடாத்தக் கூடாது என  பொலிஸ் மா அதிபர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

அத்துடன் வீதிகளிலும் மாணவர்களை அசெளகரியங்களுக்கு உள்ளாக்கும் வகையில் சோதனைகள் நடாத்தக் கூடாது எனவும், உறுதியான தகவல் இன்றி ஒரு போதும் பாடசாலை மாணவர்களை சோதனை செய்வதை தவிர்க்குமாறும் பொலிஸ் மா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...