20 வருடகாலம் பாராளுமன்ற ஆய்வு உத்தியோகத்தராக கடமையாற்றிவரும் முஹம்மது அஜிவதீனுக்கு பாராளுமன்ற பதவி உயர்வில் அநீதி இழைக்கப்பட்டதாக தாக்கல் செய்யப்பட்ட mnbvcx ரிட் மனுவை (CA-WRIT-304-2022) மேன் முறையீட்டு நீதிமன்றம் ஏற்றுக் கொண்டு அதற்கமைய குறித்த மனுவில் பெயர் குறிப்பிப்பட்ட பாராளுமன்ற செயலாளர் நாயகம், சபாநாயகர், எதிர்க் கட்சித் தலைவர் மற்றும் பாராளுமன்ற சபைத் தலைவர் உள்ளிட்டவர்களுக்கு மேன் முறையீட்டு நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.
குறித்த ரிட் மனு தொடர்பான விவாதம் கடந்தவெள்ளிக்கிழமை (20) மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது.
இந்த வழக்கில் அஜிவதீன் அவர்கள் சார்பாக சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா முன்னிலையானார்.
பாராளுமன்ற பிரதான ஆய்வு உத்தியோகத்தர் என்ற பதவிக்கு அஜிவதீனை விட 7 வருடங்கள் மூப்புரிமை மற்றும் அனுபவம் குறைந்த ஒரு உத்தியோகத்தர் நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போது நியமனம் பெற்றுள்ள உத்தியோகத்தருக்கு M.Phil. அல்லது PhD நிலைக்கு சமமான அனுமதிக்கப்பட்ட ஆய்வுநிலை கல்வித்தகைமைகள் இல்லை என்றும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பேராதனை பல்கலைக்கழக பட்டதாரியான அஜிவதீன் அதே பல்கலைக்கழகத்தில் புவியியல் துறை உதவி விரிவுரையாளராக கடமையாற்றி அதன் பின்னர் ஒரு திறந்த போட்டிப் பரீட்சையிலேயே பாராளுமன்ற ஆய்வு உத்தியோகத்தராக நியமனம் பெற்றார்.
பாராளுமன்றத்தில் விடுமுறை மறுக்கப்பட்ட நிலையில் 2005 ஆம் ஆண்டு உயர்கல்வியைத் தொடர தாய்லாந்து நாட்டு AIT பல்கலைக்கழகத்தில் அவருக்குக் கிடைக்கப்பெற்ற புலமைப்பரிசில் வாய்ப்பும் கைநழுவியது.
அவர் தனது M.Phil கற்கையை உள்நாட்டில் பூர்த்தி செய்தார். இலங்கைப் பாராளுமன்ற செயலக வரலாற்றில் M.Phil பட்டம் பெற்ற முதலாவது உத்தியோத்தரும், ஒரு சர்வதேச ஆய்வரங்கில் பாராளுமன்றம் சார்பாக முதலாவது ஆய்வறிக்கையை முன்வைத்தவரும் முஹம்மது அஜிவதீன் ஆகும்.
இந்நிலையில் தனக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பில் அவர் மேன் முறையீட்டு நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தார்.