இலங்கையின் பொருளாதார நெருக்கடியின் போது இந்தியாவின் ஆதரவு, அண்டை நாடுகளுக்கு இடையிலான உறவுகளில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளதாக இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட தெரிவித்துள்ளார்.
இந்திய ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இந்தியா, உரிய நேரத்தில் இலங்கைக்கு உதவியளித்து இலங்கையின் பொருளாதாரததை ஸ்திரப்படுத்த உறுதி செய்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் இலங்கைக்கு பயணம் மேற்கொண்ட இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரும் இலங்கைக்கான உதவியை உறுதிப்படுத்தியுள்ளதாக மிலிந்த மொரகொட சுட்டிக்காட்டினார்.
இந்திய ஆதரவு
இன்று இலங்கையின் பொருளாதாரம் நிலைத்திருப்பதற்கு இந்தியா வழங்கிய ஆதரவே காரணம் என்பதை மீண்டும் வலியுறுத்த வேண்டும்.
யாரும் தலையிடாத போது இந்தியாவின் ஆதரவு கிடைத்தது.
சர்வதேச நாணய நிதியத்திடம் சுமார் 2.9 பில்லியன் டொலர் கடனுக்காக இலங்கை சென்றுள்ளது, அது பல நிபந்தனைகளுடன் பல ஆண்டுகளாக வழங்கப்படும்.
அதனுடன் ஒப்பிடுகையில், இந்தியா உண்மையில் எங்களுக்கு 3.9 பில்லியன் டொலர்களை வழங்கியுள்ளது.
சீனா மற்றும் பரிஸ் கிளப்புக்கு முன்னதாக இந்தியாவே இந்த உதவியை வழங்கியுள்ளதாக மிலிந்த மொரகொட குறிப்பிட்டுள்ளார்.