வாகன சாரதிகளில் சுமார் 10 சதவீதமானோர் போதையில் வாகனங்களை ஓட்டிச் செல்வது கண்டறியப்பட்டுள்ளது, மேலும் சிலர் போதைப்பொருளை பயன்படுத்துவதாக தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் (NTMI) தலைவர் சவேந்திர கமகே தெரிவித்துள்ளார்.
ஆங்கில ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கையிலே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அவர்களில் பெரும்பாலோர் 20 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் மற்றும் மிதமான வருமானம் ஈட்டுபவர்கள் கனரக வாகன ஓட்டிகள் மட்டுமின்றி, பேருந்து ஓட்டுனர்களும் மது, போதைக்கு அடிமையானவர்களா என்பதை கண்டறிய சிறுநீர் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த கனரக வாகன ஓட்டிகளை பரிசோதிக்கும் முன்னோடித் திட்டம் கடந்த ஆண்டில் நடத்தப்பட்டு தற்போது நிறைவடைந்துள்ளதுடன் திட்டத்தைத் தொடர்வதாக இருந்த போதிலும், இந்த நோக்கத்திற்காக தேவைப்படும் நிதி போதுமானதாக இல்லை என்று சவேந்திர கமகே கூறினார்.
மேலும் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம (2021) பதவி வகித்த காலத்தில், புதிய சாரதி அனுமதிப்பத்திரங்களைப் பெறுவதற்கு எதிர்பார்த்திருந்த சாரதிகளுக்கும், உரிமம் புதுப்பித்தலின் போதும் மருத்துவப் பரிசோதனைகள் கட்டாயமாக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.