46 ஆவது சென்னை சர்வதேச புத்தக கண்காட்சி சென்னை நந்தனம் வை.எம்.சி.ஏ. மைதானத்தில் கடந்த 6 ஆம் திகதி தொடங்கியது.
தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சென்னை புத்தக கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.
புத்தக கண்காட்சியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். வருகிற 22ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) வரை நடைபெறவுள்ள இக்கண்காட்சி, தினமும் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரை கண்காட்சியை பொது மக்கள் பார்வைக்கு திறந்திருக்கும்.
இந்த ஆண்டு கூடுதலாக 200 அரங்குகளுடன் மொத்தம் 1,000 அரங்குகள் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளன. அதில், சிறுவர்களுக்கான புத்தகங்கள் அடங்கிய அரங்கு ஒன்று பிரத்தியேகமாக அமைக்கப்பட்டுள்ளது.
அங்குரார்ப்பண நிகழ்சில் கலந்துகொண்ட முதலமைச்சர் ஸ்டாலின் கருணாநிதி பொற்கிழி விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வழங்கி வைத்தார்.
இவ்வைபத்தின் போது 100ஆவது பொற்கிழி முதலமைச்சர் கைகளினால் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை விழாவில் உரையாற்றிய முதலமைச்சர் மொழியை காக்கும் கடமை அரசியல் இயக்கங்களை போல் எழுத்தாளர்களுக்கும் இருக்க வேண்டும்.
தங்களின் எழுத்தை, மொழியை காப்பதற்காக மக்கள் எழுத்தாக பயன்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.
அதேபோல் மொழி சிதைந்தால் இனம், பண்பாடு, அடையாளம், தமிழர் என்ற தகுதியையும் இழப்பதோடு, நாம் வாழ்ந்தும் பயனில்லை என்றும் தெரிவித்தார்.
இக்கண்காட்சியானது சிறுவர்களுக்கான புத்தகங்கள் அடங்கிய பிரத்தியேக அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளதுடன் சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் அரங்குகளும் அமையப்பெற்றுள்ளன.
இக்கண்காட்சியில் கலந்துகொள்வதற்காக இலங்கையைச் சேர்ந்த பல எழுத்தாளர்களும் ஊடகவியலாளர்களும் ஆயத்தமாகியிருப்பதாகவும் மூத்த ஊடகவியலாளர் என்.எம். அமீன் ‘நியூஸ்நவ்’ இற்கு தெரிவித்தார்.