கனேடிய குடிவரவு மற்றும் அகதிகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ, சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க மற்றும் லெப்டினன்ட் கமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி ஆகியோருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கனடாவின் விசேட பொருளாதார நடவடிக்கைகள் (இலங்கை) ஒழுங்குமுறைகளில் திருத்தம் கொண்டு இந்த தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.
இலங்கையில் 1983 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை இடம்பெற்ற ஆயுதப் போரின் போது மனித உரிமைகளை மீறிய குற்றச்சாட்டின் பேரில் கனடா இவ்வாறு தடைகளை விதித்துள்ளது.
அதன்படி, கனடாவில் அவர்கள் வைத்திருக்கும் எந்தவொரு சொத்துக்களும் தடைசெய்யப்படும் மற்றும் அவர்கள் கனடா நாட்டுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
மேலும், கனடாவில் உள்ள எந்தவொரு நபரும் மற்றும் கனடாவிற்கு வெளியில் உள்ள எந்தவொரு கனடா பிரஜையோ நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ – சொந்தமான – அல்லது பட்டியலிடப்பட்ட நபரின் கட்டுப்பாட்டில் உள்ள எந்தவொரு சொத்தையும் கையாள்வது தடைசெய்யப்பட்டுள்ளது.
மேலும், எந்தவொரு தொடர்புடைய பரிவர்த்தனையிலும் ஈடுபடுவது அல்லது எளிதாக்குவது, எந்தவொரு நிதி அல்லது தொடர்புடைய சேவைகளையும் வழங்குவதும் தடைசெய்யப்பட்டுள்ளது.
அவர்கள் சார்பாகச் செயல்படும் எந்தவொரு நபரும் எங்கும் உள்ள பொருட்களை வழங்குவது அல்லது அவர்களின் நலனுக்காக நிதி அல்லது தொடர்புடைய சேவைகளை வழங்குவதும் தடைசெய்யப்பட்டுள்ளது.
கடந்த நான்கு தசாப்தங்களில் ஆயுத மோதல்கள், பொருளாதார மற்றும் அரசியல் ஸ்திரமின்மை மற்றும் பாரிய மனித உரிமை மீறல்கள் காரணமாக இலங்கை மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக கனடாவின் வெளிவிவகார அமைச்சர் மெலனி ஜோலி தெரிவித்துள்ளார்.
அதன்படி, ஜன. கடந்த 6ஆம் திகதி முதல், விசேட பொருளாதார நடவடிக்கைகள் (இலங்கை) ஒழுங்குமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளதுடன், மனித உரிமை மீறல்களை உள்ளடக்கிய செயற்பாடுகளில் ஈடுபட்டதாகக் கருதப்படும் நான்கு இலங்கையர்களின் பெயர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இதேவேளை முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள தடைகள் தொடர்பில் விசாரிப்பதற்காக கனேடிய உயர்ஸ்தானிகர் வெளிவிவகார அமைச்சிற்கு இன்று காலை அழைக்கப்பட்டுள்ளார்.