ஆட்சி மாற்றங்களால் அநியாயமாக்கப்படும் கல்வி: அருகிலுள்ள பாடசாலை, மஹிந்தோதய திட்டங்களுக்கு நடந்ததென்ன?

Date:

-எம்.எல்.எஸ்.முஹம்மத்

எனது மகன் அஹ்மத் யூனுஸ் இயல்பிலேயே ஒரு திறமைசாலி. எப்போதும் எதனையும் வித்தியாசமாகவும் புதிய கோணத்திலும் நோக்க முயற்சிப்பவன்.

நான் நடத்தி வந்த முன்பள்ளியில் கல்விப் பயணத்தை ஆரம்பித்த அவன் குழந்தைப் பருவத்திலிருந்தே ஆக்க செயற்பாடுகளிலும் தொழில்நுட்பம் சார்ந்த விடயங்களிலும் மிகவும் ஆர்வத்துடன் ஈடுபட்டு வந்தான்.

தனது 8 ஆம் வயதிலேயே தந்தையை இழந்த மகன் அஹ்மதிற்கு ஆகாயத்தில் பறக்கும் விமானங்கள் தொடர்பில் அலாதியான ஒரு பிரியம் இருந்தது.

எனது அலைபேசியை பயன்படுத்தி வானில் பறக்கும் விமானங்களை படமெடுத்து அதுபற்றிய கேள்விகளை ஒன்றன் பின் ஒன்றாக கேட்க ஆரம்பிப்பான்.

அல்மக்கியா முஸ்லிம் மகாவித்தியாலயாத்தில் தரம் ஒன்பதில் படித்துக் கொண்டிருந்த மகன் அஹ்மத் பாடசாலை மட்ட இளம் கண்டு பிடிப்பாளர் மற்றும் புத்தாகுநர் போட்டிகள் உட்பட அனைத்து ஆக்கப் போட்டிகளிலும் பங்கேற்று தனது தொழில்நுட்பத் திறமையை நிரூபித்துக் கொண்டிருந்தான்.

இதனால் அவன் எதிர்காலத்தில் தான் ஒரு விமான இயந்திரவியலுடன் தொடர்பான தொழில்நுட்பவியலாளராக வர வேண்டுமென மனதில் ஆசைப்பட்டுக் கொண்டிருந்தான்.

க.பொ.த.சாதாரண தரப் பரீட்சையில் மிகத் திறமையாக சித்தியடைந்த மகன் அஹ்மத் தொழில்நுட்ப பிரிவில் உயர்தரக் கல்வியை தொடர்வதன் மூலம் தனது இலக்கு நோக்கி பயணிக்க முடியுமென எதிர்பார்த்துக் கொண்டிருந்தான்.

ஆனால் இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள தமிழ் மொழி மூலப் பாடசாலைகளில் அதற்கான பௌதிக வளங்கள் எதுவும் காணப்படவில்லை.

மாவனல்லை மற்றும் பேருவலை ஹற்றன் போன்ற ஒரு சில தூரப்பிரதேசங்களில் மாத்திரம்  இதற்கான வாய்ப்புக்கள் காணப்பட்ட போதிலும் எமது பொருளாதார நிலையும் குடும்ப சூழ்நிலைகளும் அஹ்மதை வெளியூர் பாடசாலைகளுக்கு அனுப்பி கற்பிப்பதற்கு இடம் கொடுக்க மறுத்தது.

இதனால் மகன்அஹ்மத் தொழில்நுட்ப பிரிவில் உயர்தரக் கல்வியை தொடரும் எதிர்பார்ப்பை கைவிட்டு விட்டு இரத்தினபுரி தொழில்நுட்பக் கல்லூரியில் இணைந்து வாகன இயந்திரவியல் பாடநெறியை தொடர ஆரம்பித்தான்.

தொழில்நுட்ப அறிவை மேம்படுத்தும் நோக்குடன்ஆயிரம் பாடசாலை அபிவிருத்தி வேலைத் திட்டத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட மஹிந்தோதய ஆய்வு கூடங்களையும்  தொழில்நுட்ப பீடங்களையும் தேவைமிக்க பாடசாலைகளுக்கு அரசு வழங்கியிருந்தால் எனது மகன் போன்ற பலர் பாடசாலைக் கல்வியை இடை நிறுத்தியிருக்க மாட்டார்கள் என அஹ்மத்தின் தாய் ஆசிரியை ஸாஜிதா பேகம் தெரிவிக்கிறார்.

தகவல் அறியும் சட்டமூலத்திற்கிணங்க சபரகமுவ மாகாண கல்வி அமைச்சுடமிருந்து கிடைக்கப்பெற்றுள்ள தரவுகளின் அடிப்படையில் மஹிந்தோதய ஆயிரம் பாடசாலை அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் மஹிந்தோந்தய ஆய்வு கூடங்கள் இம்மாகாணத்திலுள்ள 21 பாடசாலைகளுக்கும்,தொழில்நுட்ப பீடங்கள் 2 பாடசாலைகளுக்கும் வழங்கப்பட்டுள்ளன.

அரசாங்கம் பலகோடி ரூபா செலவில் மஹிந்தோந்தய ஆய்வு கூடங்களையும் தொழில்நுட்ப பீடங்களையும் பாடசாலைகளில் திறந்து வைத்த போதிலும் சபரகமுவ மாகாணத்தில் மாத்திரம் 9 பாடசாலைகளில் இக்கட்டடங்கள் இன்று உரிய தேவைகளுக்காக பயன்படுத்தப்படவில்லையென தேசிய கணக்காய்வு அறிக்கை 2021 குறிப்பிடுகிறது.

அத்துடன் தெஹியோவிட்ட வலயத்திலுள்ள இரண்டு தேசிய பாடசாலைகள் உட்பட நான்கு பாடசாலைகளின் அமைக்கப்பட்டுள்ள மஹிந்தோதய கட்டிடங்களில் ஆரம்பப்பிரிவு வகுப்புக்கள் நடத்தப்பட்டு வருவதாக மாகாண கல்வித் திணைக்களம் அறிவிக்கிறது.

இதேபோன்று கேகாலை மாவட்டத்திலுள்ள தெஹியோவிட்ட தமிழ் மகா வித்தியாலயத்திற்கு நிர்மாணித்துக் கொடுக்கப்பட்ட மேற்படி மஹிந்தோதய ஆய்வுகூடம் மண்சரிவு அனர்த்த பாதிப்புக்குள்ளாகியுள்ளதால் அக்கட்டிடம் முழு அளவில் கைவிடப்பட்டுள்ளது என அப்பாடசாலையின் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் நிவித்திகல வலயத்தில் மாத்திரம் 5 பாடசாலைகளுக்கு இவ்வாய்வு கூடங்கள் வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் மேற்படி எந்தவொரு பாடசாலையிலும் உயர்தர மாணவர்களுக்கான தொழிநுட்பப் பிரிவு வகுப்புக்கள் நடைபெறுவதில்லை எனினும் தொழில்நுட்ப பிரிவில் உயர்தரக் கல்வியை தொடர விரும்பும் பாடசாலைகளுக்கு மேற்படி தொழில்நுட்ப ஆய்வு கூடங்களோ பீடங்களோ இதுவரை வழங்கப்படவில்லை என்ற விடயமும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

துரிதப் பொருளாதார வளர்ச்சி கண்ட உலகநாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையின் கல்விமுறை மாணவர்களின் மனன சக்தியை மாத்திரம் அளவிட்டு வருகிறது.

திறமைகளை இணங் காண்பதற்கும் அதனை மேம்படுத்துவதற்கும் எமது பொதுக் கல்வி முறையில் திருத்தங்கள் முன்னெடுக்கப்பட வேண்டுமென தேசிய மட்டத்தில் மாத்திரமின்றி சர்வதேச ரீதியிலும் குரல்கள் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.

21ஆம் நூற்றாண்டில் ஏற்பட்டுவரும் புதிய அறிவியல் மாற்றங்களையும்தொழிநுட்ப சவால்களையும் தைரியமாக எதிர்கொள்ளும் வகையிலான மாணவர் தலைமுறையை உருவாக்கும் நோக்குடன் கல்வித்துறையில் பாரிய முதலீடுகளும் சர்வதேச நிதி நிறுவனங்களின் அன்பளிப்புக்களும் கடன் உதவிகளும் கிடைக்கப் பெற்றுக் கொண்டிருக்கிறது.

இதற்கிணங்க பதவிக்குவரும் ஆட்சியாளர்களும் கல்வி தொடர்பான பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி உட்பட பல சர்வதேச நாடுகளின் நிதி உதவிகளை பெற்றுக் கொள்கின்றனர்.

2010 ஆம்ஆண்டில் இரண்டாம் தடவையாகவும் ஆட்சி பீடம் ஏறிய மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் 1000 பாடசாலைகள் அபிவிருத்தித் திட்டம் என்ற பெயரில் 2012ஆண்டு வரவு செலவுதிட்டத்தின் ஊடாக ரூபா 2.5 பில்லியன்களை பெற்றுக் கொண்டது.

அத்துடன் பல்வேறு துணை செயற்திட்டங்களுடன் ஆரம்பிக்கப்பட்ட மஹிந்தோந்தய தொழில்நுட்ப ஆய்வு அபிவிருத்தி மற்றும் மஹிந்தோந்தய தொழில்நுட்ப பீடம் தொடர்பான அபிவிருத்தி திட்டத்தை முன்னெடுப்பதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி 1.7 பில்லியன் ரூபாக்களை கடனுதவியாக வழங்கியது.

இதேபோன்று 2015 ஆம்ஆண்டு பதவிக்குவந்த அரசு மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் ஆரம்பித்திருந்த பாடசாலை பௌதிகவள அபிவிருத்தி திட்டங்களை இடைநிறுத்தியதுடன்“ அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை” எனும் புதிய செயற்திட்ட மொன்றை நாடளாவிய ரீதியில் முன்னெடுக்க ஆரம்பித்தது.

இச்செயற்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட 200பாடசாலைளில் பௌதிகவள அபிவிருத்தியை முன்னெடுப்பதற்கென ரூபா.65 மில்லியன்களை அரசு பயன்படுத்தியது.

இது இவ்வாறிருக்க பதவிக்கு வந்த ஒவ்வொரு அரசும் கல்வி சீர்திருத்தம் என்ற பெயரில் அரசியல் மயமாக்கத்துடன் மக்களின் வரிப்பணத்தை செலவுசெய்து தங்களுக்கு இசைவான பாடசாலைகளில் புதியதிட்டங்களை முன்னெடுத்துள்ளன.

சர்வதேச கல்வித்தர நியமங்களுக்கிணங்க இலங்கையின் கல்வித் தரத்தை மேம்படுத்தல் என்ற அடிப்படையில் இலங்கையின் கல்விமுறையில் புதியமாற்றங்களை கொண்டு வரும் நோக்குடன்(TSEP) பாடசாலைக் கல்வி மேம்பாட்டு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் (PSI) பாடசாலை மேம்பாட்டு செயற்திட்டத்தை பாடசாலை மட்டத்தில் ஆரம்பிப்பதற்கென உலக 2011 ஆம் ஆண்டு 100,00மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனுதவியாக ராஜபக்ச அரசிற்கு வழங்கியது.

2011 ஆம் ஆண்டு இலங்கைக்கான கல்வி முதலீடுகள் தொடர்பில் உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை கிணங்க மேற்படி TSEP பாடசாலைக் கல்வி மேம்பாட்டு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் ஆரம்பம் மற்றும் இடை நிலைக் கல்வியை மேம்படுத்தல், தரமான கல்வியை உறுதிப்படுத்தல் மற்றும் பாடசாலைக் கல்வியின் ஊடாக நற்பிரஜைகளை உருவாக்குதல் என முக்கிய மூன்று நடவடிக்கைகளை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

எனினும் இத்திட்டம் பாடசாலைகளில் முறையாக செயற்படுத்தப்படவில்லை என கோப் அறிக்கை தெரிவிக்கிறது.

2011 முதல் 2018 அமுல்படுத்தப்பட வேண்டிய மேற்படி வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு பதவிக்கு வந்த அரசாங்கங்கள் உரிய கவனம் செலுத்த தவறியுள்ளது என இத்திட்டம் தொடர்பான மதிப்பீட்டறிக்கையை தயாரித்த உலக வங்கியின் கல்வி ஆய்வாளர் ஹர்ச அட்டுபனே தலைமையிலான குழு தெரிவித்துள்ளது.

2050 ஆம் ஆண்டளவில் இலங்கையில் 50,000 தொழில் நுட்பவியளார்களை உருவாக்கும் வேலைத்திட்டத்தின் அடிப்படையிலேயே மஹிந்தோதய தொழில்நுட்ப ஆய்வுகூட அபிவிருத்தித் திட்டம் மற்றும் மஹிந்தோந்தய தொழில்நுட்ப பீட அபிவிருத்தி திட்டம் ஆகியவற்றை அன்றைய மஹிந்த அரசு முன்வைத்தன.

இத்திட்டம் மனித வலுசார்ந்த அணுகுமுறை கொண்ட வேலைத்திட்டமாக அறிமுகம் செய்யப்பட்டது. ஆசிய அபிவிருத்தி வங்கியின் பாரிய நிதி ஒத்துழைப்புடன் ஆரம்பிக்கப்பட்ட இவ்வேலைத் திட்டம் ஊடாக அனைவருக்கும் சமமான கல்வி உறுதிப்படுத்தப்பட இருந்தது.

21ஆம் நூற்றாண்டிற்குரிய அனைத்து கல்வித் திறன்களையும் மேம்படுத்தும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டிருந்த 1000 பாடசாலை அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் மின்சாரம், நீர் உட்பட சுகாதார வசதிகள் மற்றும் கணனி அறை, கணித அறை, விஞ்ஞான அறை, மொழிப் பிரிவு ஆகிய அனைத்தையும் உள்ளடக்கிய ஆய்வுகூடம் ஒன்றையும், அப்பாடசாலைக்கு தேவையான ஆசிரியர்களை வழங்குவதற்கும் திட்டமிடப்பட்டிருந்தது.

மிகவும் முற்போக்கான காலத்திற்கு மிக அவசியமான இத்திட்டத்தை 2015இற்கு பின்னர் வந்த ஆட்சியாளர்கள் நடைமுறைப்படுத்த மறுத்தனர்.

இதனால் இத்திட்டம் கைவிடப்பட்டதுடன் உரிய இலக்கை எட்டத் தவறியது புதிய கல்வி சீர்திருத்தம் தொடர்பான கல்வி ஆய்வாளர் பெ.ஆறுமுகம் தெரிவிக்கிறார்.

மஹிந்தசிந்தனையின் கீழ் 2013ஆம்ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டஆயிரம் பாடசாலைகளுக்கான தொழில்நுட்ப பீடங்களை அமைக்கும் செயற்திட்டத்தின்கீழ் 62000 கணனிகள் மற்றும் 1000 மடிக் கணனிகளும் மேற்படி பாடசாலைகளுக்கு வழங்கும் செயற்திட்டம்கொண்டுவரப்பட்டது.

எனினும் இச்செயற்திட்டத்தின்கீழ்கணனிகள் கொள்வனவு செய்தமை மற்றும் ஒப்பந்தக் கேள்வியின்றி ஆய்வு கூட நிர்மாணிப்பு தொடர்பில் ரூபா 66 பில்லியன்மோசடி இடம்பெற்றுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அஜித்மானப் பெரும கடந்த 2016.05.18 ஆம்திகதி இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போது மஹிந்த அரசினை குற்றம்சாட்டியுள்ளார்.

மேற்படி செயற்திட்டத்தின் கீழ் மஹிந்த அரசு கணனி உதிரிப்பாகங்களை கொள்வனவு செய்தமை தொடர்பில் ரூபா.5875 பில்லியன் நிதிமோசடி இடம்பெற்றுள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் செயலாளர் மஹிந்த ஜயசிங்க நிதிக்குற்ற விசாரணை புலனாய்வுப் பிரிவில் கடந்த 2021.02.17 ஆ ம்திகதி முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார்.

2015 ஆம்ஆண்டு ஆட்சியைக் கைப்பற்றிய தேசிய அரசு ஆரம்பித்த அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை என்ற செயற்திட்டம் 2020 ஆம் ஆண்டு பதவிக்கு வந்த கோத்தபய ராஜபக்ச அரசினால் கைவிடப்பட்ட போது ஏற்பட்ட இழப்புக்கள் தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலினும் கடந்த 2021.05.21 ஆம் திகதி பொலிஸில் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளார்.

மேற்படி முறைப்பாட்டில் 2016 முதல் 2020 வரை முன்னெடுக்கும் நோக்குடன் நான்காண்டு செயற்திட்டமாக ரூபா 64,950 மில்லியன் நிதிஒதுக்கீட்டுடன் ஆரம்பிக்கப்பட்ட மேற்படி திட்டத்தின் கீழ்9,063 பாடசாலைக் கட்டிடங்களை நிர்மாணிப்பதற்கு இணக்கம் காணப்பட்டிருந்தது.

அத்துடன் இப்பாடசாலைகளில் 18000 அபிவிருத்தி திட்டங்களையும் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது.

எனினும் ஆட்சிக்கு வந்த கோத்தாபய அரசு எதனையும் கருத்திற்கொள்ளாமல் இச்செயற்திட்டத்தை இடைநிறுத்தியது. இதனால் 700 பாடசாலைகளில் எந்தவொரு கட்டிடமும் கட்டப்படவில்லை.

அத்துடன் ஒப்பந்தக்காரர்கள்பலருக்கு அவர்களுக்கான முழுமையான கட்டணங்கள் வழங்கப்படவில்லை.வேலைகள் முழுமை பெறாத நிலையில் அவர்கள் தமது பொருட்களை அங்கிருந்து அகற்றிக் கொண்டனர்.

ஆட்சி மாற்றங்களால் இப்படியான நிகழ்வுகள் தொடர்வதால் பொதுமக்களின் வரிப்பணமே அநியாயமாக்கப்படுகிறது. இதற்கு காரணமாகவுள்ள அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் என அம்முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

தெசியகல்விக்கொள்கை ஒன்றில்லாமல் ஆட்சி மாற்றங்களுக்கிணங்க பாடசாலைகளி ல்முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பில் கே/தெஹி/தள்துவ முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் அதிபர் பாத்திமா ருஷ்தியா கருத்து தெரிவிக்கையில்,

எமது பாடசாலையிலும் 2016 ஆம் ஆண்டில் அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலைதிட்டத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட கட்டட நிர்மாணப் பணிகள் மிகுந்த கால தாமதத்துடன் தான் நிறைவு பெற்றுள்ளது.

எனினும் இத்திட்டத்தின் கிடைக்கப்பெற்ற உளவள ஆலோசனைப்பிரிவின் செயற்திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கான ஆசிரியர் இன்னும் நியமிக்கப்படவில்லை.

அத்துடன் எமது பாடசாலைக்கு தேவைப்படும் ஆசிரியர்களும் நியமிக்கப்படவில்லை. இவை அனைத்தும் இத்திட்டத்தின் கீழ் நிறைவு செய்யப்பட வேண்டிய அம்சங்களாகும் என அவர் தெரிவிக்கிறார்.

கே/தெஹி/நாப்பாவெள முஸ்லிம் மகாவித்தியாலய அதிபர் ஏ.பி.எப்.நஸ்லியா கருத்து தெரிவிக்கையில்,

இலங்கையில் தேசியகல்விக் கொள்கை பற்றி பொதுவான இணக்கம் அரசியல் தலைவர்கள் மத்தியில் இல்லாததால் ஆட்சி மாற்றங்களின் போது பழைய அபிவிருத்தி திட்டங்கள் கைவிடப்பட்டு புதிய திட்டங்கள் கொண்டு வரப்படுகின்றன.

அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை என்ற செயற்திட்டத்தை கைவிட்ட கோத்தாபய அரசு ஆயிரம் தேசிய பாடசாலைகள் அபிவிருத்தித் திட்டம் என்ற பெயரில் மாற்றுத் திட்டமொன்றை அறிமுகம் செய்தது.

பின்னர் தற்போதைய அரசு இத்திட்டத்தையும் கைவிட்டு கொத்தணிப் பாடசாலைகள் என்றசெயற்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக தீர்மானங்களை மேற்கொண்டு வருகிறது.

அத்துடன் இவ்வாறான தொடர்ச்சியான ஆரோக்கியமான கல்வி நடைமுறைக்கு பொருத்தமான அம்சங்கள் அல்ல. இதன் பாதிப்புக்கள் மாணவர்களின் கல்விநடவடிக்கைகளை மாத்திரமின்றி நாட்டின் எதிர்கால அபிவிருத்தியிலும் நிலையான பாதிப்புக்களை ஏற்படுத்துகிறது என அவர் தெரிவிக்கிறார்.

அரசின் திட்டமிடப்படாத அபிவிருத்தி நடவடிக்கைகளால் இடம்பெறும் பாதிப்புக்கள் தொடர்பில் சபரகமுவ மாகாண கல்வி அமைச்சின் திட்டமிடல்பணிப்பாளரிடம் கேட்டபோது “அரசின் அபிவிருத்தி நடவடிக்களில் தொடர்ச்சியாக நிலவும் அரசியல் தலையீடுகளால் உரிய இலக்கை எம்மால் எட்ட முடியாதுள்ளோம். மொத்தத்தில் மக்கள் பணமே அநியாயமாக்கப்படுகிறது.

இதற்கு பாடசாலை மட்ட அபிவிருத்திகளும் விதிவிலக்கல்ல. புதிய கல்வித் திட்டம் அமுல்படுத்தப்படுமானால் தேவையற்ற அரசியல் தலையீடுகளை தவிர்க்க முடியும்”,என அவர் தெரிவிக்கிறார்.

இலங்கை அரசு ஆட்சி மாற்றங்களின்போது கல்வி அபிவிருத்தி நடவடிக்கைகளிலும் அடிக்கடி மாற்றங்களை கொண்டுவருவதால் எமது மக்களின் வரிப் பணம்பன் மடங்கு அநியாயமாக்கப்படுகிறது.

பாடசாலையின்வளங்களும் அதிக அளவில் துஷ்பிரயோகம் செய்யப்படுகின்றன. எமது மாணவர்களும் உரிய இலக்குடன் கல்வியைத் தொடர முடியாமல் அங்கலாய்க்க வேண்டி ஏற்படுகிறது.

சட்டவிரோதமான முறையில் அரச சொத்துக்கள் கையாளப்படும் நிலையும் தோற்றம் பெறுகிறது.

நிதி ஊழல் நடவடிக்கைகளும் அதிகரிக்க ஆரம்பிக்கின்றன. எனவே அவரசமாக  தேசிய கல்வித்திட்டமொன்று கொண்டு வரப்பட்டு அனைத்து மாணவர்களுக்குமான தரமான கல்வியை உறுதிப்படுத்துவது அரசின் மாத்திரமன்றி அனைத்துப் பிரஜைகளினதும் பொறுப்பும் கடமையுமாகும்.

 

Popular

More like this
Related

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை நிறைவேற்றம்: ஆதரவாக 177 வாக்குகள்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை...

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...